Friday, November 4, 2022

829. நண்பேன்டா!

"இந்த அலுவலகத்திலேயே உனக்கு ரொம்ப நெருக்கமான நண்பன்னு யாரைச் சொல்லுவ?" என்றான் நாகராஜன் ரமணியிடம்.

"இதில என்ன சந்தேகம்? சந்துருதான் என்னோட சிறந்த நண்பன்னு இந்த அலுவலகத்தில எல்லாருக்கும் தெரியுமே!" என்றான் ரமணி.

பக்கத்தில் இருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த சந்துரு சிரித்துக் கொண்டே, "நண்பேன்டா!" என்றபடி ரமணியின் தோளை அணைத்துக் கொண்டான்.

நாகராஜன் சற்று வியப்புடன் இருவரையும் பார்த்தான்.

"நீதான் ரமணியோட நெருக்கமான நண்பன்னு அவன் சொன்னான். நீயும் அப்படி நினைக்கறியா?" என்றான் நாகராஜன் சந்துருவிடம், இருவரும் தனிமையில் இருந்தபோது.

"நாங்க ரெண்டு பேருமே அப்படி நினைக்கலியே!" என்றான் சந்துரு.

"பின்னே அவன் அப்படிச் சொன்னான். நீயும் அதை ஏத்துக்கற மாதிரி நடந்துக்கிட்டே!" 

"இப்ப, நீயும் நானும் நெருக்கமான நண்பர்கள்தான். இது உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும், அலுவலகத்தில மத்தவங்களுக்கும் தெரியும். ஆனா நீயும் நானும் நாம நெருக்கமானங்கன்னு சொல்லிக்கிட்டுத் திரியறமா என்ன?"

"நீ என்ன சொல்ல வர?"

"பொதுவாகவே, அதிக நெருக்கம் இல்லாதப்பதான் அதிக வெளிப்பாடுகள் இருக்கும். ரமணி என்னைத் தன்னோட நெருக்கமான நண்பன்னு வெளியில காட்டிப்பான், பேசுவான். ஆனா எனக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டா, எனக்கு ஏதாவது அவமானம் ஏற்பட்டா, அதுக்காக மனசுக்குள்ள சந்தோஷப்படுவான். அதை அவன் வெளியில காட்டிக்க மாட்டான், ஆனாலும் அது எனக்குப் புரியும்!" என்றான் சந்துரு.

"அப்படின்னா நீ அவனை விட்டு விலகிப் போக வேண்டியதுதானே? நீ ஏன் அவங்கிட்ட நெருக்கமா நடந்துக்கற?"

"என்ன செய்யறது? முள்ளை முள்ளாலதானே எடுக்கணும்! வெளியில அவனுக்கு நெருக்கமா  இருந்தாலும், மனசளவில நான் அவனுக்கு நெருக்கமா இல்ல. இதை அவனும் புரிஞ்சுக்கிட்டிருக்கான். கொஞ்ச நாள்ள பாரு, அவன் தானாகவே எங்கிட்டேந்து விலகிப் போயிடுவான்!" என்றான் சந்துரு.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு

குறள் 829:
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

பொருள்: 
வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி நடந்து கொள்ளலாம்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...