Tuesday, November 1, 2022

638. அமைச்சரின் பிடிவாதம்!

நிதி அமைச்சர் சர்மாவின் அறைக்குள் நுழைந்த நிதிச் செயலர் சுரேஷ், "சார்! அட்வைஸரி கமிட்டி மீட்டிங் இருக்கு!" என்றார்.

"ம்..." என்று அலுப்புடன் கூறிய சர்மா, "இது என்னை சார் சிஸ்டம்? நிதி அமைச்சர்னு என்னைப் போட்டுட்டு, எனக்கு ஒரு ஆலோசனைக் குழு! ஆலோசனைக் குழுவே இந்த அமைச்சரகத்தை இயக்கலாமே! அப்புறம், அமைச்சர்னு நான் எதுக்கு, செகரட்டரினு நீங்க எதுக்கு?" என்றார்.

"உங்களுக்குத் தெரியுமே! பல வருஷங்களுக்கு முன்னால நிதி அமைச்சரா இருந்த ஒத்தர்தான் இந்த சிஸ்டத்தை ஏற்படுத்தினாரு. அது தொடர்ந்துக்கிட்டிருக்கு!" என்ற சுரேஷ், சற்றுத் தயங்கி விட்டு, "வெவ்வேறு நிபுணத்துவமும், சிந்தனையும் உள்ள அஞ்சாறு பேரோட ஆலோசனைகளைக் கேட்டுக்கறது பயனுள்ளதுதானே!" என்றார்.

"எனக்குத் தெரியாததை, அவங்க என்ன புதுசா சொல்லிடப் போறாங்க?" என்றார் அமைச்சர்.

லோசனைக் குழுவின் கூட்டம் முடிந்த ஓரிரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் வீர்சிங்கை. ஒரு விழாவில் சுரேஷ் தற்செயலாகச் சந்தித்தார். வீர்சிங், சுரேஷுடன் சற்று நெருங்கிப் பழகக் கூடியவர்.

"அமைச்சர் என்ன முடிவு செஞ்சிருக்காரு?" என்று கேட்டார் வீர் சிங்.

"அவர் தன்னோட ஐடியாவின்படிதான் முடிவெடுப்பார்னு நினைக்கிறேன்!" என்றார் சுரேஷ்.

"அதுக்கு அவர்கிட்ட ஐடியா இருக்கணும். ஐடியா கிடைக்கறதுக்கு, சிந்திக்கணும். அது அவரால முடியாத விஷயமாச்சே!" என்றார் வீர்சிங், சிரித்தபடி.

சுரேஷ் மௌனமாக இருந்தார். வீர்சிங் கூறியது சரிதான். ஆனால் துறைச் செயலாளரான அவரால் தன் துறை அமைச்சரைப் பற்றி என்ன கூற முடியும்?

"சரி. அமைச்சரோட ஐடியா என்ன?" என்றார் வீர்சிங்.

சுரேஷ் சொன்னார்.

"இது பைத்தியக்காரத்தனம்! பொருளாதாரம் மொத்தமா அழிஞ்சு போயிடும்!" என்றார் வீர்சிங்.

"அவர் இன்னும் முடிவு எடுக்கல. நீங்க கேட்டதால, அவரோட சிந்தனையைப் பத்திச் சொன்னேன். இதை நீங்க உங்களுக்குள்ள வச்சுக்கங்க. நான் இன்னும் அமைச்சருக்குச் சொல்லிப் புரிய வைக்க முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன்!"

"அவரை மாதிரி சொந்த புத்தியும் இல்லாத, மத்தவங்க சொன்னலும் புரிஞ்சுக்காத ஆட்கள்கிட்ட, நீங்க ஏன் மாரடிக்கிறீங்க? அவர் சொன்னதை செஞ்சுட்டுப் போங்க. அவரோட முட்டாள்தனமான யோசனையைச் செயல்படுத்தினப்பறம், அதோட விளைவுகளை அனுபவிக்கறப்ப, அவர் புரிஞ்சுப்பாரு. ஆனா, அப்ப அவரைப் பதவியிலிருந்தே தூக்கிடுவாங்க!" என்றார் வீர்சிங், சற்றுக் கோபத்துடன்.

"இல்லை சார்! அவருக்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டியது என் கடமை. அவரோட யோசனையை ஆதரிக்கிற மாதிரி பேசி, அதைக் கொஞ்சம் மாத்தி, சரியான முடிவை அவரை எடுக்க வைக்க முடியுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. இதுக்கு முன்னால சில தடவை இப்படி செஞ்சிருக்கேனே!" என்றார் சுரேஷ், சிரித்தபடி.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 64
அமைச்சு

குறள் 638:
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

பொருள்:
அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்ய வேண்டிய வழிகளைத் தாமும் அறியாமல் ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றத்தைப் பொருட்படுத்தாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சரின் கடமையாகும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...