Thursday, November 3, 2022

639. பத்திரிகையாளர் சந்திப்பு

 

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி, முதலமைச்சர் ஆதவன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

தங்கள் ஆட்சியில் செய்த நற்பணிகளை விவரித்த பிறகு அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

எதிர்க்கட்சிகளைப் பற்றிக் கேள்வி வந்தது.

"எதிர்க்கட்சிகளின் பணி அரசை எதிர்ப்பதுதான். அதை அவர்கள் செயகிறார்கள். அதனால் அவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை!" என்றார் ஆதவன்.

"உங்கள் சாதனைகளை நீங்க சொல்றீங்க. ஆனா, எதிர்க்கட்சிகள் உங்க ஆட்சியோட குறைபாடுகளைப் பத்திப் பேசறாங்க. அது உங்களோட நற்பெயரை பாதிக்காதா?"

"எங்களுடைய நற்பெயரை பாதிக்கிற விஷயங்களைப் பத்தி நான் நிச்சயமா கவலைப்படணும். ஆனா எதிர்க்கட்சிகளோட விமரிசனத்தினால எங்க நற்பெயர் பாதிக்கப்படும்னு நான் நினைக்கல. வேற சில விஷயங்களால அது பாதிக்கப்படலாம்!" என்றார் முதல்வர் சிரித்தபடியே.

"வேற சில விஷயங்கள்னா? கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?"

"இல்ல. பொதுவாத்தான் சொன்னேன். இதோட இந்த பத்திரிகையாளர் சந்திப்பை முடிச்சுக்கலாம்!" என்று சொல்லி எழுந்து விட்டார் ஆதவன்.

"என்ன தலைவரே! பத்திரிகையாளர் சந்திப்பில இப்படி ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டுட்டீங்க? இதைப் பத்தி எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்களே! முதல்வர் இதைக் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பாரா, அதைக் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பாரான்னு ஊடகங்கள்ள விவாதம் நடத்தறாங்க!" என்றார் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அறவாணன்.

"பேசட்டும். விவாதம் வரட்டும். அப்பதான் கட்சியில இருக்கறவங்களுக்கு ஒரு புரிதல் வரும்!" என்றார் ஆதவன் சற்றுக் கோபத்துடன்.

"நீங்க சொல்ல வரது.."

"என்னன்னு உங்களுக்குத் தெரியும்! மூத்த அமைச்சரா இருக்கற ஒத்தர் தவறுகளை செஞ்சுக்கிட்டே இருக்காரு. அதனால நம் ஆட்சிக்குக் கெட்ட பேரு வருது. நம்ம கட்சிக்காரங்களே அவர் மேலே கோபமா இருக்காங்க. ஆனா அவர் ஒரு மூத்த தலைவர். அவரை என்னால பதிவி நீக்கம் செய்ய முடியாது. நான் அவர்கிட்ட மறைமுகமாகவும், நேரடியாகவும் சொல்லிட்டேன். அவரு தன்னோட வழிகளை மாத்திக்க மாட்டேங்கறாரு. அதனாலதான் பத்திரிகையாளர் சந்திப்பில இதை மறைமுகமாச் சொன்னேன். நான் சொன்னது அவருக்குப் புரிஞ்சிருக்கும், அவர் தன்னோட வழிகளை மாத்திப்பாருன்னு நினைக்கிறேன். அப்படி மாத்திக்கலேன்னா அவரைப் பதவி நீக்கம் செய்யறதைத் தவிர எனக்கு வேற வழி இல்ல. ஏன்னா, நான் பத்திரிகையாளர் சந்திப்பில சொன்ன மாதிரி எதிர்க்கட்சிகளால நம் ஆட்சிக்கு பிரச்னை இல்லை. இவரை மாதிரி ஆட்களாலதான் பிரச்னை. நீங்களும் அவர்கிட்ட பேசி அவருக்குப் புரிய வையுங்க!" என்றார் ஆதவன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 64
அமைச்சு

குறள் 639:
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.

பொருள்:
தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...