"எல்லாருக்கும் சில சமயம் இப்படித் தோணும்!" என்றான் அவன் நண்பன் சாரதி.
"நேத்திக்கு ஆஃபீஸ்ல ஒரு மீட்டிங். நான் அருமையா ஒரு யோசனை சொன்னேன். ஜி எம் உட்பட யாரும் அதை கவனிச்ச மாதிரி கூடத் தெரியல. ஆனா, பரந்தாமன் சொன்ன யோசனையைப் பிரமாதம்னு எல்லாரும் பாராட்டினாங்க. இத்தனைக்கும், பரந்தாமனுக்கு சரியா ஆங்கிலம் பேச வராது. தப்ப்த் தப்பாப் பேசுவான். நிறைய பேர் அதைக் கேட்டு சிரிப்பாங்க, அப்புறமா, தங்களுக்குள்ள கிண்டல் பண்ணிப் பேசிப்பாங்க. ஆனா, அவன் ஏதாவது சொன்னா வாயைப் பொளந்துக்கிட்டு கேட்டுக்கறாங்க!"
"இங்கிலீஷ் தெரியாட்டா என்ன? அவர் சொன்ன யோசனை மத்தவங்களுக்குப் பிடிச்சிருந்தா, அதை ஏத்துக்கறது இயல்புதானே?"
"முட்டாள் மாதிரி பேசாதேடா! நான் சொன்னதுக்கும், அவன் சொன்னதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. நான் பேசினப்ப, எருமை மாடு மேல மழை பேஞ்ச மாதிரி உக்காந்திருந்தவங்க, அவன் பேசறப்ப மட்டும் கவனிச்சுக் கேக்கறாங்களே அது எப்படி?" என்றான் அரவிந்தன், கோபத்துடன்.
'அது ஏன்னு உனக்குப் புரியலேன்னா, நீதான் பெரிய முட்டாள்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சாரதி, "சரி, நான் வரேன்!" என்று கிளம்பினான்.
"என்னடா கிளம்பிட்டே? நான் முட்டாள்னு சொன்னதில கோபமா?" என்றான் அரவிந்தன், சமாதானமாக.
"நீ என்னை முட்டாள்னு சொன்னா, நான் ஏன் கோவிச்சுக்கப் போறேன்? நீ என் நண்பன்தானே! அதனால, கேட்டு சிரிச்சுட்டுத்தான் போவேன். ஆனா, எனக்கு ஒரு சந்தேகம். உன் ஆஃபீஸ்ல யாராவது வேற கருத்தைச் சொன்னா, அவங்களையும் முட்டாள்னுதான் திட்டுவியா?" என்றான் சாரதி.
"என்னோட மேலதிகாரிகளை அப்படிச் சொல்ல முடியுமா?"
"அப்படின்னா, உன் சக ஊழியர்களையும், கீழே வேலை செய்யறவங்களையும் அப்படிச் சொல்லுவ!" என்றான் சாரதி, சிரித்தபடி.
"இல்லை" என்று ஆரம்பித்த அரவிந்தன், சற்று தயக்கத்துக்குப் பின், "சில சமயம் அப்படிச் சொல்லி இருக்கேன்!" என்றான்.
"அரவிந்தா! நான் கம்யூனிகேஷன் ஸ்பெஷலிஸ்ட் இல்ல. எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன். நான் கவனிச்ச வரையில, நீ எதையாவது சொல்றப்ப, ஒருவித அவசரத்தோடயும், அழுத்தத்தோடயும் சொல்ற. நீ சொல்றதை மத்தவங்க ஏத்துக்கணுமேங்கற கவலையோடயும், பயத்தோடயும் அப்படிப் பேசற மாதிரி எனக்குத் தோணுது. ஆனா, நீ அப்படிப் பேசினா, அது கேக்கறவங்களுக்குப் பிடிக்காது. அதனால, தங்களை அறியாமலே, அவங்க உன் பேச்சில கவனம் செலுத்த மாட்டாங்க. அதனால, நீ சொல்லி முடிச்சதும், நீ என்ன சொன்னேன்னே அவங்களுக்குத் தெரிஞ்சிருக்காது.
"ரெண்டாவது, மத்தவங்க பேசறபோது, நீ அதைக் காது கொடுத்துக் கேக்கறதில்ல. குறுக்கே பேசி, அவங்களை கட் பண்ணுவ. இல்லேன்னா, பொறுமையில்லாம, அதை 'முட்டாள்தனமா இருக்கு, சரியா வராது'ன்னு சொல்லுவ. நீ இப்படி நடந்துக்கிறதால, உன் மேல அவங்களுக்கு ஒரு எதிர்ப்பு உணர்வு வரும். அதானல, நீ பேசறதை கவனிக்கறதில அவங்க ஆர்வம் காட்ட மாட்டாங்க!"
"கம்யூனிகேஷன் எக்ஸ்பர்ட் இல்லைன்னு சொன்னே, இதையெல்லாம் எப்படிச் சொல்ற? ஏதாவது புத்தகத்தில படிச்சியா?" என்றான் அரவிந்தன். கோபப்படாமல், பொறுமையாக, அவன் இப்படிக் கேட்டது, சாரதி கூறியதில் உண்மை இருக்குமோ என்று அவன் யோசிப்பது போல் இருந்தது.
"புத்தகத்தில படிக்கல. உன்னோட பழகி, உன்னை கவனிச்சதில நான் புரிஞ்சுக்கிட்டது இது. இன்னொண்ணும் சொல்றேன். பரந்தாமன் பேசினா, எல்லாரும் கேட்டுக்கறாங்கன்னு சொன்னியே, அவர் பொறுமையா, இனிமையாப் பேசறவரா, மத்தவங்க பேசறதை கவனமாக் கேக்கறவரா இருக்கலாம். நீ கவனிச்சுப் பாத்தா, இது உனக்குப் புரியும்!" என்றான் சாரதி.
அரவிந்தன் பதில் சொல்லாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 65
சொல்வன்மை
குறள் 646:
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.
பொருள்:
மற்றவர்கள் விரும்பிக் கேட்கும்படியாகப் பேசுவதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும், அறிவுடையார் செயலாகும்.
No comments:
Post a Comment