Saturday, November 19, 2022

645. என்ன என்ன வார்த்தைகளோ!

"என்னங்க இவ்வளவு நேரமா பேச்சைத் தயார் பண்ணிக்கிட்டிருக்கீங்க? எப்பவும் உங்களுக்கு இவ்வளவு நேரம் ஆகாதே?" என்றாள் லட்சுமி.

அடித்து அடித்து எழுதி, ஐந்தாறு தாள்களைக் கிழித்துப் போட்டிருந்த ரங்கராஜன், "சரியா வர மாட்டேங்குதே!" என்றார்.

"எவ்வளவோ மேடைகள்ள, முன்கூட்டியே பேச்சைத் தயாரிச்சு வச்சுக்காம, நேரடியாப் பேசி இருக்கீங்க. இன்னிக்கு மட்டும் ஏன் இப்படி?"

"நான் படிச்ச விஷயங்களைப் பத்திப் பேசணும்னா, கொஞ்சம் நினைவு படுத்திக்கிட்டாப் போதும். புது விஷயங்களைப் பேசணும்னா, தயார் செஞ்சுதான் பேசணும்."

"சரி. எனக்கென்ன தெரியும்! ஆனா, அதுக்கு ஏன் இவ்வளவு சிரமப்படறீங்க? பாயின்ட் கிடைக்கலையா?"

"வார்த்தைகள் கிடைக்கல!"

"என்ன, வார்த்தை கிடைக்கலையா? உங்களுக்கு 'சொல்வீச்சுச் செம்மல்'னு ஒரு பட்டம் உண்டே!"

"பட்டம் இருக்குதான். ஆனாலும், யாரா இருந்தாலும், சரியான சொற்களைப் பயன்படுத்தணும் இல்ல? சரியான சொல்லைப் பயன்படுத்தலேன்னா, தப்பா ஆயிடுமே!" 

"நீங்க சொல்றது எனக்குப் புரியல. ஏதோ நீதிமன்றத்தில வாக்குமூலம் கொடுக்கற மாதிரி, வார்த்தைகள் எல்லாம் ரொம்ப சரியா இருக்கணும்னு சொல்றீங்களே! அப்படி எதைப் பத்திப் பேசப் போறீங்க?"

"ஒத்தரைப் பாராட்டிப் பேசணும்!" என்றார் ரங்கராஜன்.

"அவ்வளவுதானே! கொஞ்சம் தாராளமாவே பாராட்டற மாதிரி வார்த்தைகளைப் போட்டுட்டா சரியாப் போச்சு!" என்றாள் லட்சுமி, சிரித்தபடி.

"ஏது? பேச்சாளர்களுக்கு நீயே பயிற்சி கொடுப்ப போல இருக்கே! நீ சொல்றது சரிதான். ஆனா, அது போலியான பேச்சா இருக்கும். உண்மையான பாராட்டுன்னா, சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி, அளவாப் பேசணும். நாம யாரைப் பாராட்டறமோ அவங்களும் சரி, கேக்கறவங்களும் சரி, பாராட்டு உண்மையா, பொருத்தமா இருக்குன்னு நினைக்கணும். போதுமான அளவு பாராட்டலேன்னா, ஏதோ பாராட்டணுங்கறதுக்காக பாராட்டற மாதிரி இருக்கும். மிகையான வார்த்தைகளைப் பயன்படுத்தினா, போலின்னு தெரிஞ்சுடும். அதனாலதான், சரியான வார்த்தைகளைத் தேடிக்கிட்டிருக்கேன்."

"அடேயப்பா! பாராட்டறதில இவ்வளவு விஷயம் இருக்கா? மத்த வகைப் பேச்சக்களுக்கும் இது மாதிரி நியதிகள் இருக்கா?" என்றாள் லட்சுமி, வியப்புடன்.

"எல்லா பேச்சுக்குமே இது முக்கியம். உங்கிட்ட பேசறப்ப கூட, சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தணும். இல்லாட்டா, நான் ஏதோ ஒப்புக்கு உனக்கு பதில் சொல்றதாகவோ, அல்லது உனக்குப் புரியாதுன்னு நினைச்சு நான் அலட்சியமாப் பேசறதாகவோ உனக்குத் தோணும்!" என்றார் ரங்கராஜன், சிரித்துக் கொண்டே.

"எனக்கு எப்பவுமே அப்படித் தோணினது இல்ல!" என்ற லட்சுமி, தொடர்ந்து, "ஏன்னா, நீங்கதான் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தறவராச்சே!" என்றாள், சிரித்துக் கொண்டே.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 65
சொல்வன்மை

குறள் 645:
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

பொருள்:
இந்தச் சொல்லை விடப் பொருத்தமான இன்னொரு சொல் இருக்காது என்று உணர்ந்த பிறகே, அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...