"என்னங்க நீங்க சொல்றது? முதலாளியோட அடக்குமுறைக்குப் பணிஞ்சு போகணும்னு சொல்றீங்களா?" என்றான் செல்வம்.
"சூரியாங்கற தொழிலாளி சூப்பர்வைஸரை மரியாதை இல்லாம பேசி இருக்காரு. அதுக்காக அவரை சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க. நீங்க முதலாளியைப் பாத்துப் பேசறப்ப, சமாதானமாப் பேசி சஸ்பென்ஷனை விலக்கிக்கச் செய்யறதை விட்டுட்டு, அவரோட சண்டை போட்டுட்டு வந்திருக்கீங்க. இப்ப, அவர் அந்தத் தொழிலாளி மேல கடுமையான நடவடிக்கை எடுக்கப் போறதா, இன்னும் தீவிரமான நிலையை எடுத்துட்டாரு. நிலைமை இன்னும் சிக்கலாயிடுச்சே!"
"அந்தத் தொழிலாளி சூரியா, ஏதோ கோபத்தில, தப்பா ஒரு வார்த்தை பேசிட்டாரு. அதுக்காக அவரை சஸ்பெண்ட் பண்ணுவீங்களான்னு முதலாளிகிட்ட கேட்டேன். அது அவருக்குப் பிடிக்கல!"
"நீங்க அது மட்டுமா சொன்னீங்க? 'உங்களுக்குக் கோபம் வரப்ப, நீங்க உங்க உதவியாளரை பாஸ்டர்டுனு தகாத வார்த்தை சொல்லித் திட்டறதில்லையா?'ன்னு அவரைக் கேட்டிருக்கீங்க! எனக்கு எப்படித் தெரியும்னு கேக்காதீங்க. உங்க முதலாளியே சொன்னாரு!" என்றார் செங்குட்டுவன்.
"நீங்க என் முதலாளிகிட்ட பேசினீங்களா? எப்ப? நான் கூட இல்லாம நீங்க அவர்கிட்ட தனியாப் பேச மாட்டீங்களே?" என்றான், செல்வம் அதிர்ச்சியுடன்.
"ஆமாம், பேசினேன். நீங்க செஞ்ச தப்பை சரி பண்ணத்தான் அவர்கிட்ட பேசினேன். அப்ப, உங்களை எப்படிப் பக்கத்தில வச்சுக்க முடியும் - பூனையை மடியில கட்டிக்கிட்டு சகுனம் பாக்கற மாதிரி? நீங்க மறுபடி ஏதாவது தப்பாப் பேசி, நிலைமையை இன்னும் சிக்கலாக்கிட்டீங்கன்னா? ஆனா, நான் தனியாப் போகல. துணைத்தலைவர் மணிகண்டனையும் அழைச்சுக்கிட்டுத்தான் போனேன். அவர்தானே நீங்க முதலாளிகிட்ட பேசறப்ப உங்களோட இருந்தாரு?"
தனக்குப் போட்டியாக வரக் கூடும் என்று தன்னால் கருதப்படும் மணிகண்டனை, செங்குட்டுவன் உடன் அழைத்துச் சென்றது, செல்வத்துக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.
"என்ன தலைவரே இது? தலைவரா இருக்கற என்னைப் புறக்கணிச்சுட்டு, எங்கிட்ட சொல்லாம, துணைத்தலைவரா இருக்கற மணிகண்டனை அழைச்சுக்கிட்டுப் போய், முதலாளியைப் பாத்திருக்கீங்க. இது நியாயமா?"
"நீங்க தவறான வார்த்தைகளைப் பேசிட்டு, அதுக்கு எந்த விளைவும் ஏற்படாதுன்னு நினைச்சா எப்படி?" என்றார் செங்குட்டுவன், சற்று கோபத்துடன்.
"சரி. முதலாளிகிட்ட என்ன சொன்னீங்க? சூரியா சூப்பர்வைஸரைத் தப்பாப் பேசினதுக்கு மன்னிப்புக் கேட்டுக்கிட்டிங்களா?"
"அதுக்கு அவசியமே ஏற்படல. அவர் அதைப் பத்திக் கேக்கவும் இல்லை. நீங்க அவர்கிட்ட பேசின முறைக்கு அவர்கிட்ட வருத்தம் தெரிவிச்சேன். அவர் தானாகவே சூரியாவோட சஸ்பென்ஷனை விலக்கிக்கிறதா சொல்லிட்டாரு. சூரியா செஞ்சது தப்புதான்னு அன்னிக்கே நீங்க ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, அவர் அப்போதே சஸ்பென்ஷனை ரத்து செஞ்சிருப்பாரு. அதுக்கான கிரடிட் உங்களுக்குக் கிடைச்சிருக்கும். உங்க கடுமையான பேச்சால, அந்த நல்ல வாய்ப்பை நழுவ விட்டதோட, கெட்ட பேரையும் வாங்கிக்கிட்டிருக்கீங்க. இனிமேயாவது, பேச்சில கவனமா இருங்க!" என்றார் செங்குட்டுவன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 65
சொல்வன்மை
குறள் 642:
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
பொருள்:
ஆக்கமும், அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல், கவனமாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment