Friday, November 11, 2022

832. சந்திரனின் சங்கடம்

சந்திரன் அன்று என்னைப் பார்க்க வந்தபோது, வழக்கத்தை விடச் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டான்.

எப்போதும் இயல்பாக, கலகலப்பாகப் பேசுபவன் அன்று ஏதோ சொல்ல நினைத்துத் தயங்குவதாகத் தோன்றியது.

சந்திரன் எனக்கு தூரத்து உறவு. என்னிடம் நட்புடன் பழகுபவன். 

எங்கள் உறவினர்களுக்குள்,அவன் பொருளாராத நிலையில் சற்றுத் தாழ்ந்தவன். ஆனால், அதைப் பற்றி அவன் கவலைப்பட்டதில்லை. வசதி மிகுந்த உறவினர்களிடம் பழகும்போது, தாழ்வு மனப்பான்மை ஏதுமின்றி மிக இயல்பாகப் பழகுவான்.

சொல்லப் போனால், 'நீ பணக்காரனாக இருந்தால் என்ன? நான் ஒன்றும் உதவி கேட்டு உன் முன் நிற்கவில்லை. நீ என் உறவினன் என்பதை மதித்து உன்னிடம் பழகுகிறேன். அவ்வளவுதான்!' என்பது போன்ற ஒரு தோரணை அவன் நடத்தையில் இருக்கும்.

அதனால்தான், அன்று அவன் என்னிடம் சற்றுத் தயக்கத்துடன் நடந்து கொண்டது எனக்கு வியப்பாக இருந்தது.

என் வீட்டை விட்டுக் கிளம்பும் வரை அப்படித்தான் இருந்தான். வாசல் அருகில் வந்ததும், சட்டென்று திரும்பி, "இன்னிக்கு சாயந்திரம் என்னோட ஒரு மீட்டிங்குக்கு வர முடியுமா?" என்றான் அவசரமாக. நீண்ட நேரமாகச் சொல்ல நினைத்த ஒரு விஷயத்தைச் சொல்லி விட்ட ஒரு நிம்மதி அவனிடம் தெரிந்தது.

"என்ன மீட்டிங்? எங்கே?" என்றேன் நான்.

"நானே உன்னை வந்து அழைச்சுக்கிட்டுப் போறேன். அஞ்சு மணிக்கு வருவேன். தயாரா இரு."

து எம் எல் எம் என்று அழைக்கப்படும் ஒரு நெட்வொர்க் மார்க்கெடிங் வியபார வாய்ப்புக்கான அறிமுகக் கூட்டம். 

அந்தத் திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேருபவர்கள் தங்களுக்குக் கீழ் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். கீழே உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப, அவர்கள் வாங்கும் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விலை மதிப்பில் குறிப்பிட்ட சதவீதம், மேலே இருப்பவருக்கு கமிஷனாகக் கிடைக்கும்.

இந்தத் திட்டம் பற்றி அறிமுக உரை நிகழ்த்தியவர், இந்தத் திட்டத்தில் சேரும் ஒவ்வொருவரும் எப்படி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை விளக்கிப் பேசினார்.

கூட்டம் முடிந்ததும், இருவரும் அருகிலிருந்த ஒரு உணவகத்துக்கு காப்பி அருந்தச் சென்றோம்.

"இதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?" என்றான் சந்திரன்.

"இந்த எம் எல் எம் பத்தி எனக்கு முன்னமே தெரியும். ஆனா, எனக்கு இது ஒத்து வராது. அதனால, இதுவரையிலும் இது மாதிரி திட்டங்கள்ள நான் சேரல. உன்னால இதைச் செய்ய முடியும்னு நினைக்கிறியா?" என்றேன்.

"எனக்கு யார்கிட்டேயும் போய் எதையும் கேட்கப் பிடிக்காது. அப்படிக் கேட்காததாலதான், நான் அவ்வளவு வசதி இல்லாதவனா இருந்தும், எல்லார் முன்னாடியும் தலை நிமிர்ந்து கம்பீரமா நடக்கறேன். 

"ஆனா இவங்க, 'நீங்க யார்கிட்டேயும் போய் இதில சேர்ந்துக்கங்கன்னு கேக்க வேண்டியதில்ல, ஒரு நல்ல வியாபார வாய்ப்பைப் பத்தித் தெரிஞ்சுக்க, ஒரு கூட்டத்துக்கு வாங்கன்னு அவங்களை இங்கே அழைச்சுக்கிட்டு வாங்க, இந்த வாய்ப்பைப் பத்தி நாங்க விளக்கமாப் பேனதைக் கேட்டப்பறம், அவங்க இந்தத் திட்டதில சேந்துப்பாங்க'ன்னு சொன்னாங்க.

"அவங்க பேசினதைக் கேட்டுத்தான் இதில சேர்ந்தேன். ஆனா, அவங்க சொன்ன மாதிரி, எனக்குத் தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி அவங்களை மீட்டிங்குக்கு அழைச்சுக்கிட்டு வர என்னால முடியல. உன்னை மட்டும்தான் கூப்பிட்டேன். அதுவும் ரொம்பத் தயக்கத்தோட!"

இதைச் சொல்லி விட்டு, ஏதோ தவறு செய்து விட்டது போல், குற்ற உணர்வுடன் என்னைப் பார்த்தான் சந்திரன்.

"சந்திரன்! இது மாதிரி பிசினஸ் எல்லாம் எல்லாருக்கும் சரியா வராது. உன்னோட இயல்புக்கும், என்னோட இயல்புக்கும் இது ஒத்து வராது. அவங்க பேச்சில மயங்கி, நீ இதில சேர்ந்துட்டே. ஆனா, உனக்கு நெருக்கமா இருக்கற எங்கிட்ட பேசறதுக்கே இவ்வளவு சங்கடப்படற நீ, மத்தவங்ககிட்ட எப்படிப் போய்ப் பேசுவ? இதில தொடரணுமான்னு நீ யோசனை செஞ்சுக்க!" என்றேன் நான்.

சந்திரனின் மௌனம் அவனே இது போன்ற சிந்தனையில்தான் இருக்கிறான் என்று காட்டியது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை

குறள் 832:
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.

பொருள்: 
அறியாமையுள் எல்லாம் அறியாமை ஒருவன் தன் ஒழுக்கத்துக்கு (இயல்புக்கு)ப் பொருந்தாதவற்றில் விருப்பம் கொள்வதாகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...