பல முயற்சிகளுக்குப் பிறகு, ராஜுவுக்கு சென்னையிலிருந்த ஒரு தனியார் நிறுவனத்தில், ஊழியர் நலத் துறையில் உதவியாளராக வேலை கிடைத்தது. செங்கமலம் தன் ஊரை விட்டு வர மறுத்து விட்டதால், ராஜு மட்டும் சென்னையில் தனியே தங்கி இருந்து வேலை பார்த்து வந்தான்.
தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியபோது, நிர்வாகத்தின் தரப்பில் பர்சனல் மானேஜர் இருந்தார். அவருக்குத் தகவல்களை எடுத்துக் கொடுப்பதற்காக, ராஜு சில கோப்புகளுடன்அவர் அருகில் அமர்ந்திருந்தான்.
தொழிற்சங்கப் பிரதிநிதி ஒரு வாதத்தை எழுப்பியபோது, கோப்பிலிருந்து ஒரு தகவலைப் படித்துக் காட்டும்படி பர்சனல் மானேஜர் ராஜுவிடம் கூறினார்.
குறிப்பிட்ட தகவல்களை ராஜு படித்துக் காட்டியதும், தொழிற்சங்க நிர்வாகி, அந்தத் தகவல்கள் பற்றி ஒரு கேள்வியை எழுப்பினார்.
பர்சனல் மானேஜர் அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ராஜு பர்சனல் மானேஜரைப் பார்த்தான். அவர் எதுவும் சொல்லவில்லை. ராஜு தயக்கத்துடன் தொழிற்சங்க நிர்வாகி கேட்ட கேள்விக்கு பதில் கூறினான்.
அதைத் தொடர்ந்து, அவர் மேலும் சில கேள்விகளை எழுப்ப, ராஜு அவற்றுக்கு பதில் கூறினான்.
தன்னை அறியாமலேயே, ராஜு அடுத்த சில நிமிடங்களுக்குத் தொழிற்சங்க நிர்வாகியுடன் வாதம் செய்து கொண்டிருந்தான்!
பர்சனல் மானேஜர் இந்த விவாதத்தை சுவாரசியமாக கவனித்துக் கொண்டிருந்தார். தொழிற்சங்க நிர்வாகியும், தொடர்ந்து ராஜுவுடனேயே வாதம் செய்து கொண்டிருந்தார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, தொழிற்சங்க நிர்வாகி ராஜுவின் கருத்தை ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் ராஜுவைப் பார்த்த பார்வையில் ஒருவித மரியாதை இருந்தது.
பிறகு தொழிற்சங்க நிர்வாகி பர்சனல் மானேஜரிடம் தனியாகப் பேசும்போது, "பேச்சுவார்த்தைக்கு சரியான ஆளைத்தான் அழைச்சுக்கிட்டு வந்திருக்கீங்க சார்! எவ்வளவு அழகா, தெளிவா, பாயின்ட்டோட பேசினாரு! பொறுமையா, நிதானமா, உணர்ச்சி வசப்படாம அவர் எனக்கு பதில் சொன்னப்ப, இப்படி ஒரு ஆள் நம்ம பக்கம் இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணிச்சு!" என்றார், சிரித்துக் கொண்டே.
பர்சனல் மானேஜர் சிரித்தபடியே, அவர் கூறியதை ஏற்றுக் கொண்டார்.
அதற்குப் பிறகு, பர்சனல் மானேஜர் ஜெனரல் மானேஜரிடம் ராஜுவைப் பற்றிக் கூறினார்.
"இந்தப் பையனுக்கு நல்ல பேச்சுத் திறமை இருக்கு. மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிற மாதிரி தெளிவா. அழகா, நிதானமா, பாயின்ட் பை பாயின்ட்டா பேசறான். ரொம்ப சாஃப்டாதான் பேசறான். ஆனா, மத்தவங்க கவனிக்கிற மாதிரி பேசறான். அவனோட வாதங்களுக்கு பதில் சொல்றது கூட கஷ்டம். நம்ம கம்பெனிக்கு அவன் ஒரு அசெட். அவன் ஒரு அசிஸ்டன்ட்தான்னாலும், அவனோட திறமையை நாம பயன்படுத்திக்கணும். எல்லாப் பேச்சு வார்த்தைகளிலேயும் அவனைக் கூட வச்சுக்கலாம்னு பாக்கறேன்!"
"நீங்க சொல்றதைப் பார்த்தா, அவன் ரொம்ப நாளைக்கு அசிஸ்டன்ட்டா இருக்க மாட்டான் போல இருக்கே!" என்றார் ஜெனரல் மானேஜர்.
"நீங்க சொல்றதைப் பார்த்தா, என் பதவிக்கே ஆபத்து வந்துடும் போல இருக்கே!" என்றார் பர்சனல் மானேஜர் சிரித்தபடி.
செங்கமலம் ராஜுவுக்கு ஃபோன் செய்து ஒரு உறவினர் திருமணத்துக்காக அவனை ஊருக்கு வருமாறு அழைத்தபோது, "அன்னிக்கு தொழிலாளர் யூனியனோட ஒரு பேச்சு வார்த்தை இருக்கும்மா. நான் அதில கலந்துக்கணும்!" என்றான் ராஜு.
'இவனுக்கு என்ன பேசத் தெரியும்னு நினைச்சு, இவனைப் பேச்சுவார்த்தையில கலந்துக்கச் சொல்லி இருக்காங்க!' என்று நினைத்தாள் செங்கமலம்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 65
சொல்வன்மை
குறள் 641:
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
பொருள்:
நாவன்மை என்னும் நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது. ஆகையால், மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.
Read 'The Reluctant Negotiator' the English version of this story by the same author.

No comments:
Post a Comment