கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசுதான் சட்டமன்ற உறுப்பினர்களால் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மணிவாசகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருநாவுக்கரசைத் துணை முதல்வராக இருக்கும்படி மணிவாசகம் கேட்டுக் கொண்டபோது, திருநாவுக்கரசு மறுத்து விட்டார்.
"உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. நீங்க அதைப் பயன்படுத்தி, நல்ல ஆட்சியைக் கொடுங்க. நான் துணை முதல்வரா இருந்தா, என் நிழல் எப்பவும் உங்க மேல விழுந்துக்கிட்டிருக்கற மாதிரி நீங்க உணர்வீங்க. அது ஆட்சிக்கு நல்லதில்ல" என்றார் திருநாவுக்கரசு.
மணிவாசகம் முதல்வராகப் பதவி ஏற்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சில சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கூட்டப்பட்டது.
"மணிவாசகம் முதல்வராகப் பதவி ஏற்று மூன்று வருடங்களாகச் செயல்பட்டுக்கிட்டிருக்காரு. அவர் தலைமையை மாத்தணும்னு சில உறுப்பினர்கள் எனக்கு எழுத்து மூலமா கோரிக்கை வச்சிருக்காங்க. கோரிக்கை எழுப்பியவர்களில் ஒருவரான தண்டபாணி அவர்களைப் பேச அழைக்கிறேன்!" என்றார் கட்சியின் தலைவர் அழகேசன்.
தண்டபாணி பேசினார்;
"நம்ம கட்சி தேர்தல்ல வெற்றி பெற்றதுக்கு முக்கியமான காரணம் நம்மோட விரிவான தேர்தல் அறிக்கைதான். இதுவரையிலும் எந்தக் கட்சியும் செய்யாத அளவுக்கு பல திட்டங்களை வகுத்து, அவற்றை எப்படி செயல்படுத்தப் போறோம்னு ரொம்ப விவரமா ஒரு புளூபிரின்ட் மாதிரி ஒரு தேர்தல் அறிக்கையைத் தயார் செஞ்சிருந்தாரு நம் மணிவாசகம் அவர்கள். அந்த அறிக்கையைப் பாராட்டாதவர்களே இல்லை. ஊடகங்கள் பாராட்டின. எதிர்க்கட்சிக்காரங்க வாயடைச்சுப் போயிட்டாங்க. கருத்துக் கணிப்புகள் எல்லாம் நாம வெற்றி பெற மாட்டோம்னு சொன்னப்ப, நிலைமையை நமக்கு சாதகமா மாத்தினது அந்தத் தேர்தல் அறிக்கைதான்.
"அதனாலதான், நம் வெற்றிக்குக் காரணமா அமைந்த தேர்தல் அறிக்கையை உருவாக்கின மணிவாசகமே முதல்வரா வரணும்னு பெரும்பாலான உறுப்பினர்கள் நினைச்சு, அவரை முதல்வராத் தேர்ந்தெடுத்தாங்க. ஆனா, இந்த மூணு வருஷமா, அவரோட செயல்பாட்டில மக்களுக்கு ரொம்ப அதிருப்தி ஏற்பட்டிருக்கு. மக்கள் நம் கட்சி மேல ஒரு வெறுப்போடயே இருக்காங்க.
"மணிவாசகம் அவர்கள் ஒரு நல்ல தலைவர்தான். ஆற்றலும், அனுபவமும் உள்ளவர்தான். ஆனா, சிறப்பா திட்டங்களை வகுக்கத் தெரிஞ்ச அவர், திட்டங்களை நிறைவேற்றறதில ரொம்பத் தடுமாறுகிறார். திட்டம் வகுக்கறதுக்கான திறமை வேற, அவற்றைச் செயல்படுத்தறதுக்கான திறமை வேறங்கறது இப்ப எங்களுக்குப் புரியுது. அதனால, மணிவாசகம் அவர்கள் பதவி விலகிக்கிட்டு, திட்டங்களை நிறைவேறறுவதற்கான திறமை உள்ள வேற ஒரு தலைவர் முதல்வரா வரதுக்கு வழி விடணும்னு நான் கேட்டுக்கறேன்."
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 64
அமைச்சு
குறள் 640:
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
பொருள்:
செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.
Read 'The Man Who Delivered' the English version of this story by the same author.

No comments:
Post a Comment