ஒரு ரயில் பயணத்தின்போது, தற்செயலாக இருவரும் ஒரே பெட்டியில் பயணம் செய்தனர்.
முகுந்தன்தான் முதலில் பேசினான், "எப்படி இருக்கே?" என்ற பொதுவான விசாரிப்புடன்.
ரகு ஒப்புக்கு பதில் கூறினான்.
நீண்ட நேரப் பயணம் என்பதால், இன்னும் சில முறைகள் முகுந்தன் பேச யத்தனித்தபோது, ரகுவும் தன் இறுக்கத்தைத் தளர்த்தி உரையாடினான்.
ரயிலிலிருந்து இறங்குவதற்கு முன், முகுந்தன் ரகுவின் தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டான்.
"வீ வில் பீ இன் டச்!" என்றான் முகுந்தன்.
ரகுவும், முகுந்தனும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, ரகுவுக்குப் பல இடையூறுகளைச் செய்தவன் முகுந்தன். நிறுவனத்தில் தன்னை மிஞ்சி ரகு மேலே போய்விடக் கூடாது என்பதற்காக, நேரடியாகவும், மறைமுகமாகவும் பல முயற்சிகளை முகுந்தன் செய்து வந்தான்.
ஒருமுறை, நிறுவனத்துக்கான சரக்குக் கொள்முதலில் ரகு கமிஷன் வாங்குவதாக ரகுவின் மீது புகார் தெரிவித்துத் தலைமை அலுவலகத்துக்கு ஒரு மொட்டைக் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த மொட்டைக் கடிதத்தை அனுப்பியது முகுந்தன்தான் என்பதில் அந்த அலுவலகத்தில் இருந்த எவருக்கும் சந்தேகம் இல்லை..
ரகுவின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, புகாரில் உண்மை இல்லை என்று கண்டறியப்பட்டது. ஆயினும், புகார் விசாரணையில் இருந்த காலத்தில் நடந்த பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வுக்கு ரகு அழைக்கப்படவில்லை.
ஒரு பொய்யான புகாரினால் தனக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு மறுக்கப்பட்டதால் வருத்தமடைந்த ரகு, அந்த நிறுவனத்தில் தொடர்ந்து பணி செய்ய விருப்பமின்றி, விரைவிலேயே வேறு நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டான்.
அதற்குப் பிறகு, ரகு முகுந்தனைச் சந்தித்தது இப்போதுதான்.
முகுந்தன் அடிக்கடி ரகுவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினான். இருவரும் சேர்ந்து பணியாற்றிய காலத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து, மற்ற விஷயங்களைப் பேசினான்.
ரகு அதிகம் பேசாமல், முகுந்தன் பேசுவதற்கு பதிலளிக்கும் அளவுக்கு அளவாகப் பேசினான். ரகுவைத் தன் வீட்டுக்கு வரும்படி முகுந்தன் பலமுறை அழைத்தும், ரகு போகவில்லை. பதிலுக்கு, முகுந்தனைத் தன் வீட்டுக்கு வரும்படி ரகு அழைக்கவும் இல்லை.
முகுந்தன் பலமுறை ரகுவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினானே தவிர, ரகு ஒருமுறை கூட முகுந்தனை அழைத்துப் பேசவில்லை.
''எவ்வளவு காலம் இது நடக்கும்? எனக்கு அவனுடன் நட்பாக இருப்பதில் ஆர்வம் இல்லை என்பதைத் தொடர்ந்து வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவன் விடாமல் என்னை அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறான். ஒருநாள், அவனுக்கே வெறுத்துப் போய்ப் பேசுவதை விட்டு விடுவான். அதுவரையில் காத்திருப்போம்!' என்று நினைத்துக் கொண்டான் ரகு.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு
குறள் 830:
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
பகைவர் நண்பராகும் காலம் வரும்போது, மனதளவில் நட்பு கொள்ளாமல், முகத்தளவில் மட்டும் நட்புக் கொண்டு, வாய்ப்புக் கிடைக்கும்போது அதையும் விட வேண்டும்.
No comments:
Post a Comment