சாமிநாதன் வாயிற்கதவைத் திறந்தபோது, சோமு கையில் ஒரு பெரிய பார்சலுடன் நின்று கொண்டிருந்தான்.
"அடேடே! வாங்க சோமு!" என்று வரவேற்றான் சாமிநாதன்.
"தீபாவளி வாழ்த்துக்கள்!" என்றபடியே, கையில் இருந்த பார்சலை சாமிநாதனிடம் நீட்டினான் சோமு.
"என்ன இது?" என்றான் சாமிநாதன், பார்சலை வாங்காமல்.
"என் நண்பர்களுக்கு சின்னதா தீபாவளிப் பரிசு கொடுக்கறது என்னோட வழக்கம் - இனிப்புகள், குழந்தைகளுக்கு பட்டாஸ் இது மாதிரி" என்ற சோமு, சாமிநாதனின் மனைவி தேவியைப் பார்த்து, "நீங்க வாங்கிக்கங்க. உங்க கையில கொடுத்தா, மகாலட்சுமிக்கு நைவேத்தியம் செய்யற மாதிரி!" என்றான்.
தேவி சாமிநாதனைப் பார்த்து விட்டு, தயக்கத்துடன் பார்சலை வாங்கிக் கொண்டாள்.
சோமு சென்ற பிறகு, பார்சலைத் திறந்து பார்த்த தேவி, "என்னங்க இது? இனிப்பு, பட்டாசுன்னு சொன்னாரு. ஆனா, உங்களுக்கு பேண்ட், சட்டை, எனக்குப் புடவை...ஐயோ, பட்டுப்புடவை மாதிரியில்ல இருக்கு!" என்றாள்.
சாமிநாதன் பதட்டத்துடன் பார்சலை அவள் கையிலிருந்து அவசரமாக வாங்கியபோது, அதிலிருந்து ஒரு கவர் விழுந்தது. பிரித்துப் பார்த்தான். 2000 ரூபாய் நோட்டுக்கள்! எண்ணிப் பார்த்தான். ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தது.
"எதுக்குங்க இவ்வளவு பணம்?" என்றாள் தேவி, குழப்பத்துடன்.
"தெரியலியே!" என்றான் சாமிநாதன், யோசித்தபடி.
சோமு சாமிநாதனுக்கு அறிமுகமானது சமீபத்தில்தான். ஆயினும், அவன் வீட்டுக்கு அடிக்கடி வருவது, அவனிடம் பல விஷயங்கள் பற்றி நீண்ட நேரம் பேசுவது என்று சாமிநாதனிடம் மிக நெருக்கமாகப் பழகினான் அவன்.
சாமிநாதனுக்கே சில சமயம் இந்த நெருக்கம் சற்று அதிகமாகத் தோன்றியதுண்டு. ஆனால், சோமுவின் இனிமையான குணமும், பழகும் தன்மையும் அவனுக்குப் பிடித்திருந்தன.
ஆனால், இப்போது தீபாவளிப் பரிசு என்று பேண்ட், சட்டை, பட்டுப் புடவை, பணம் என்றெல்லாம் கொடுத்திருப்பது...
"இப்பவே அவன் வீட்டுக்குப் போய், இதைத் திருப்பிக் கொடுத்துட்டு வரேன்!" என்ற சாமிநாதன், பணம் இருந்த கவர் உட்பட எல்லாவற்றையும் பார்சலுக்குள் வைத்து மூடி, டேப் வைத்து ஒட்டி எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
சாமிநாதன் திரும்பி வந்ததும், "என்ன சொன்னார் உங்க நண்பர்?" என்றாள் தேவி.
"என்ன சொல்லுவான்? முதல்ல மழுப்பினான். அப்புறம் உண்மையைச் சொல்லிட்டான். மசாலாதான் காரணம்!" என்றான் சாமிநாதன்
"என்னது, மசாலாவா?"
"மசாலாப் பொடி தயாரிக்கிற நிறுவனத்தில நான் வேலை செய்யறதுதான் சோமு என்கிட்ட நட்பு பாராட்டினதுக்குக் காரணம்! அவனோட உறவினர் ஒத்தர் மசாலாப் பொடி தயாரிக்கிற தொழில் ஆரம்பிக்கப் போறாராம். அதுக்கு நான் என் கம்பெனி மசாலாப் பொடியோட ஃபார்முலாவைக் கொடுக்கணுமாம். அதுக்கு அட்வான்ஸ்தான் அம்பதாயிரம் ரூபா, பேண்ட் சட்டை, பட்டுப் புடவை எல்லாம்!" என்றான் சாமிநாதன், ஆத்திரத்துடன்.
"அடப்பாவி! இப்படியெல்லாம் திட்டம் போட்டு நட்பு வச்சுப்பாங்களா என்ன?" என்றாள் தேவி, திகைப்புடன்.
அப்போது தொலைக்காட்சியில் ஒலித்த பாடலை கவனித்தான் சாமிநாதன்.
"கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்."
அருமையான பாட்டு!" என்றான் சாமிநாதன்.
"உங்களுக்கு இந்தப் பாட்டு பிடிக்காதே! இந்திப் பாட்டோட காப்பின்னு திட்டுவீங்களே!" என்றாள் தேவி,
"பாட்டோட வரிகள்ள எவ்வளவு உண்மை இருக்குன்னு இப்பத்தான் புரியுது!"
தொலைக்காட்சியின் ஒலி அளவை அதிகமாக்கினான் சாமிநாதன்.
"நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்!"
பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு
குறள் 824:
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
முகத்தளவில் இனிமையாகச் சிரித்துப் பழகி, அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
No comments:
Post a Comment