ஒரு பழைய பெரிய வீட்டைப் பல அறைகளாகப் பிரித்து, ஒவ்வொரு அறையிலும் இரண்டு பேர் தங்கும்படி அமைக்கப்பட்டிருந்த அந்த விடுதியில் பல்வேறு வயதினரும் தங்கி இருந்தனர்.
கமலா என்ற பெண்மணியால் நடத்தப்பட்டு வந்த அந்த விடுதியில், தங்கும் வசதியும், உணவு வசதியும் இருந்தன
விடுதியில் தங்கி இருந்தவர்களில், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ராஜாமணியும் ஒருவர்.
ராஜாமணி அந்த ஊருக்கு மாற்றப்பட்டபோது, குழந்தைகளின் படிப்பு போன்ற காரணங்களால் அவரால் தன் குடும்பத்தினரை அழைத்து வர முடியவில்லை. அதனால், தான் மட்டும் தங்க அந்த விடுதியைத் தேர்ந்தெடுத்திருந்தார் அவர்.
விடுதியில் தங்கி இருந்த மற்றவர்களிடம் அவர் அவ்வப்போது உணவின் அளவு மற்றும் தரம் பற்றி ஏதாவது குறை சொல்லிக் கொண்டிருப்பார்.
மற்றவர்களில் பெரும்பாலோருக்கு இந்தக் குறைகள் இல்லை, குறைகள் இருந்ததாக நினைத்தவர்களும், அவற்றைப் பொருட்படுத்தவில்லை. ஆயினும், ராஜாமணி தங்களிடம் பேசும்போது, மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஒரு சிலர், "இங்கெல்லாம் கொஞ்சம் முன்னே பின்னேதான் சார் இருக்கும். நம் வீடு போல இருக்கும்னு எதிர்பார்க்க முடியுமா? உங்களுக்கு இது புது அனுபவமா இருக்கலாம். ஆனா, நாங்க இது மாதிரி பல விடுதிகளைப் பார்த்திருக்கோம், மற்ற விடுதிகளை விட இது எவ்வளவோ மேல்!" என்று பதில் கூறினர்.
ஆயினும், ராஜாமணி குறை கூறுவதை நிறுத்தவில்லை.
மணி என்று ஒரு இளைஞன் புதிதாக வந்து சேர்ந்தான். அவன் ஒரு அரசாங்க ஊழியன். வந்ததிலிருந்தே அவன் ராஜாமணியிடம் மிக நெருக்கமாகப் பழக ஆரம்பித்து விட்டான்.
மணி இருந்தது மாடியில் வேறொரு அறை என்றாலும், கீழே இருந்த ராஜாமணியின் அறைக்கு வந்து, அவரிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பான். அவரும் மாடியில் மணியின் அறைக்குச் சென்று, அவனிடம் பேசிக் கொண்டிருப்பார்.
"ஏம்ப்பா, உனக்கு வயசு இருபத்தைஞ்சு, அவருக்கு ஐம்பது, எப்படி ரெண்டு பேரும் நண்பர்களா இருக்கீங்க?" என்று ராஜாமணியுடன் அவர் அறையில் தங்கி இருந்த சங்கர், மணியிடம் கேட்டபோது, "நான் மணி, அவர் ராஜாமணி! மணிக்கு ராஜா அவர்! என் நண்பர், குரு, வழிகாட்டி எல்லாம் அவர்தான்!" என்று மணி சொன்னபோது, ராஜாமணி பெருமை பொங்கச் சிரித்தார்.
ராஜாமணி விடுதி பற்றிக் கூறிய குறைகளை மணி முழுவதுமாக ஆமோதித்தான்.
"ஆமாம் சார்! நீங்க சொல்றது சரிதான். எல்லாரும் சேர்ந்து இதைத் தட்டிக் கேக்கணும். ஆனா, மத்தவங்க முன்வர மாட்டாங்க. நாம ரெண்டு பேரும் மட்டும் கேட்டா, நமக்குத்தான் கெட்ட பேர் வரும்!" என்றான் மணி.
"நீ சொல்றது சரிதான்!" என்றார் ராஜாமணி.
மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருநாள், மணி ராஜாமணியிடம், "சார்! ஒரு குட் நியூஸ்! எனக்கு அரசாங்கத்தில குவார்ட்டர்ஸ் கொடுத்திருக்காங்க. அடுத்த மாசம் அங்கே போயிடுவேன்!" என்றான்.
ராஜாமணி ஏமாற்றத்துடன், "நீ ஒத்தன்தான் எனக்கு நண்பனா இருக்கே! நீயும் போயிட்டேன்னா, நான் ரொம்ப தனியாயிடுவேன்!" என்றார், வருத்தத்துடன்,
ஒரு நிமிடம் யோசித்த மணி, "சார்! ஒரு யோசனை. என் அப்பா அம்மா அடுத்த வருஷம்தான் என்னோட வந்து இருப்பேன்னு சொல்லிட்டாங்க. அதனால, இப்போதைக்கு வீட்டில நான் மட்டும்தான் இருப்பேன். நீங்களும் என்னோட வந்து தங்கிக்கலாம்!" என்றான்.
"உண்மையாவா சொல்ற? ஒரு வருஷத்தில எனக்கு மாற்றல் கிடைச்சுடும். அதனால, உங்க அப்பா அம்மா வரதுக்குள்ள நான் போயிடுவேன். ஆனா, இதெல்லாம் சரியா வருமா?" என்றார் ராஜாமணி, நம்பிக்கை இல்லாமல்.
"ஏன் சரியா வராது? உங்களுக்குத் தெரியுமே, கவர்ன்மென்ட் குவார்ட்டர்ஸ் எல்லாம் பெரிசா வசதியா இருக்குமே! நான் மட்டும் தனியா இருக்கறதுக்கு பதிலா, நீங்களும் வந்து என்னோட இருந்தீங்கன்னா, எனக்கும் கம்பெனி கிடைச்ச மாதிரி இருக்கும். நாம சமையல் செஞ்சு சாப்பிட்டுக்கலாம்!"
"நான் ஜோரா சமைப்பேன். இந்த விடுதியில போடற உப்புச் சப்பில்லாத சாப்பாட்டை சாப்பிடறதுக்கு பதிலா, நாம வாய்க்கு ருசியா சமைச்சு சாப்பிடலாம்!" என்றார் ராஜாமணி, உற்சாகத்துடன்.
"ஆனா, ஒரு கண்டிஷன் சார்! நீங்க வாடகை எதுவும் கொடுக்கறேன்னு சொல்லக் கூடாது!" என்றான் மணி.
மணி ஒரு தேதி குறிப்பிட்டு, அந்தத் தேதியில் தன் குவாரட்டர்ஸுக்குப் போகலாம் என்று அறிவித்தான். அந்தத் தேதியில் தாங்கள் விடுதியைக் காலி செய்வதாக இருவருமே விடுதி உரிமையாளர் கமலாவிடம் தெரிவித்தனர்.
"சந்தோஷமாப் போயிட்டு வாங்க. நான் போடற உப்புச் சப்பில்லாத சாப்பாட்டை இனிமே நீங்க சாப்பிட வேண்டாம்!" என்றாள் கமலா, சிரிப்புடன்.
தான் மற்றவர்களிடம் பேசியது எப்படியோ கமலாவின் காதுக்கு எட்டி விட்டது என்பதைப் புரிந்து கொண்ட ராஜாமணி, தான் விடுதியை விட்டுப் போக்ப் போகிறோமே என்ற எண்ணத்தில், கமலாவின் பேச்சைப் பொருட்படுத்தவில்லை.
குறிப்பிட்ட தேதிக்கு முதல் நாளே மணி விடுதியைக் காலி செய்து விட்டான். குவார்ட்டர்ஸின் சாவியை வாங்கிக் கொண்டு வருதல், வீட்டைச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை முடித்து விட்டு, அடுத்த நாள் பிற்பகல் 2 மணிக்கு டாக்ஸியுடன் வருவதாக ராஜாமணியிடம் சொல்லி விட்டுப் போனான்.
அடுத்த நாள் பிற்பகல் 1 மணிக்கே ராஜாமணி பெட்டி, படுக்கையுடன் தயாராக விடுதியின் முகப்பில் வந்து அமர்ந்து விட்டார்.
ஆனால், மணி வரவில்லை.
அன்று விடுமுறை தினம் என்பதால் மணியின் அலுவலகத்துக்கு ஃபோன் செய்ய முடியாது. அத்துடன், அவன் அலுவலகத் தொலைபேசி எண்ணை ராஜாமணி வாங்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. அவன் அலுவலகத்தின் பெயர்தான் தெரியுமே தவிர, அதன் முகவரி கூட அவருக்குத் தெரியாது.
ஐந்து மணி வரை காத்திருந்தவர், அதற்குப் பிறகு கமலாவிடம் சென்று, "என்னை மன்னிச்சுடுங்க. மணி பேச்சை நம்பி நான் ஏமாந்துட்டேன். நான் தொடர்ந்து இங்கேயே தங்கிக்கறேன்!" என்றார், அழாக்குறையாக.
கமலா மௌனமாகத் தலையாட்டியதும், அவர் தன் அறைக்குச் சென்றார்.
"நான் நாளைக்கு அவன் ஆஃபீசுக்குப் போய் விசாரிச்சுட்டு வரேன் சார்!" என்றான் ராஜாமணியின் அறை நண்பன் சங்கர்.
அடுத்த நாள் மாலை அலுலகம் முடிந்து விடுதிக்கு வந்த சங்கர், "சார்! நான் மணியை அவன் ஆஃபீஸ்ல போய்ப் பார்த்தேன். அவனுக்குக் கிடைச்சிருக்கறது பேச்சிலர் அகாமடேஷன். அதுவும், அவனோட அறையில ரெண்டு பேர் இருக்காங்க - மணியும், அவன் அலுவலகத்தில வேலை செய்யற இன்னொருத்தரும். கிச்சன் எல்லாம் கிடையாது. முதல்ல, பெருமைக்காக உங்ககிட்ட தனி வீடுன்னு சொல்லி இருக்கான். நீங்களும் அங்கே தங்கலாம்னு விளையாட்டா சொல்லி இருக்கான். ஆனா, அதை நீங்க அதை நம்பிட்டீங்கன்னு தெரிஞ்சப்பறமும், அவன் உங்ககிட்ட உண்மையைச் சொல்லல. உங்களை ஏமாத்தினதைப் பத்தி, அவன் வருத்தம் கூடப் படல. ஏதோ விளையாட்டு மாதிரி சொல்லிச் சிரிக்கிறான்!" என்றான் சங்கர்.
"ஏதோ ஒப்புக்குப் பழகினவனை, எங்க வயசு வித்தியாசத்தைப் பத்தி எல்லாம் கூட யோசிக்காம, உண்மையான நண்பனா நினைச்சு, அவன் சொன்னதை நம்பினேனே, என் முட்டாள்தனத்தைச் சொல்லணும்!" என்றார் ராஜாமணி.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு
குறள் 825:
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
பொருள்:
மனத்தால் தம்மோடு பொருந்தாமல் பழகுகின்றவரை, அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு, எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக் கூடாது.
மனத்தால் தம்மோடு பொருந்தாமல் பழகுகின்றவரை, அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு, எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக் கூடாது.
No comments:
Post a Comment