Friday, October 14, 2022

823. கற்றறிந்த நண்பர்

ஒரு இலக்கியக் கூட்டத்தில் அருகருகில் அமர்ந்திருந்தபோதுதான் தேவராஜன் எனக்கு அறிமுகமானார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய ஒருவர் ஒரு தவறான விஷயத்தைக் குறிப்பிட்டதை கவனித்தேன். எனக்கு அறிமுகமில்லாத தேவராஜன் என்னைப் பார்த்துச் சிரித்தபடி, "தப்பா சொல்றாரு சார்!" என்றார்.

"ஆமாம். நானும் கவனிச்சேன்!" என்று நான் சொன்னதும் என்னைச் சற்று மதிப்புடனும், வியப்புடனும் பார்த்தார்  அவர்.

கூட்டம் முடிந்ததும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

அதற்குப் பிறகு சில நிகழ்ச்சிகளில் சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததும் எங்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. 

தேவராஜன் நிறையப் புத்தகங்கள் படித்திருக்கிறார் என்றும், நல்ல சிந்தனையாளர் என்றும் அறிந்து கொண்டதும் அவர் மீது எனக்கு அதிக மதிப்பு ஏற்பட்டது.

ஆயினும் பொது நிகழ்ச்சிகளில் சந்திப்பதைத் தாண்டி எங்கள் நெருக்கம் வளரவில்லை. 

எங்கள் இருவர் வீட்டிலும் தொலைபேசி இல்லை என்பதால் தொலைபேசியில் பேசிக் கொள்ளும் வாய்ப்பும் இல்லை.

சில வருடங்களில் தேவராஜனே ஒரு பிரபல பேச்சாளராகி விட்டார். துவக்கத்தில் ஓரிரு நிகழ்ச்சிகளில் பேச அழைக்கப்பட்டவர் விரைவிலேயே அதிகம் அழைக்கப்பட்டும் ஒரு பேச்சாளராக ஆகி விட்டார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேச வாய்ப்புக் கிடைத்ததும் அவர் மிகவும் பிரபலமாகி விட்டார்.

நிகழ்ச்சிகளில் என்னைப் பார்த்தால் ஓரிரு நிமிடங்களாவது என்னிடம் பேசாமல் இருக்க மாட்டார். பிரபலமான பிறகும் பழைய நட்பை மறக்காமல் இருக்கிறாரே என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.

ருமுறை என்னை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தபோது, என்னிடம் வந்து. "நல்லவேளை. உங்களைப் பார்த்தேன். உங்க தொலைபேசி எண் கூட என்னிடம் இல்லை!" என்றார்.

"என்ன சார் விஷயம்?" என்றேன்.

"அடுத்த வாரம் ஒரு பட்டிமன்றம் இருக்கு. அதில புதுசா சில பேருக்கு வாய்ப்புக் கொடுக்க விரும்பறாங்க. நீங்க பேசறீங்களா?" என்றார்.

"சார்! எனக்கு இது மாதிரியெல்லாம் பேசிப் பழக்கமில்லையே!" என்றேன்.

"பரவாயில்லை. முயற்சி செஞ்சு பாருங்க. நீங்கதான் நிறையப் படிக்கறவராச்சே! நல்லா பேசினீங்கன்னா தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கும்" என்றார் தேவராஜன்.

அவர் தலைப்பைக் கூறியதும், முயன்று பார்க்கலாம் என்று தோன்றியது அதனால் ஒப்புக் கொண்டேன்..

"நீங்கதான் நடுவரா?" என்றேன்.

"இல்லை. நானும் பேச்சாளன்தான். உங்க எதிரணியில பேசப் போறேன்!" என்றார் தேவராஜன் சிரித்துக் கொண்டே.

ட்டிமன்றத்துக்குப் பேச நான் தயார் செய்து கொண்டு போனேன். ஆனால் என் முறை வந்தபோது, நான் தயார் செய்ததைப் பேசாமல், எனக்கு முன்னால் எதிரணியில் பேசியவர்களின் கருத்தை மறுத்துப்  பேசினேன்.

தயார் செய்ததைப் பேசாமல் இயல்பாகப் பேசியதாலோ என்னவோ, என் பேச்சு நன்றாக அமைந்து விட்டது. துவக்கத்திலிருந்தே என் கருத்துக்களுக்குப் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததால் இன்னும் அதிக உற்சாகத்துடன பேசினேன்.

நான்தான் கடைசிப் பேச்சாளன் என்பதால்  எதிரணியில் பேசிய அனைவரின் கருத்துக்களையும் மறுத்துப் பேசும் வாய்ப்பு எனக்கு இயல்பாகவே அமைந்து விட்டது. 

குறிப்பாக, தேவராஜனின் கருத்துக்களுக்கு நான் பதிலளித்தபோது, பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பும் கைதட்டல்களும் கிடைத்தன. தேவராஜன் போன்ற பெரிய பேச்சாளரின் பேச்சையே மறுதளித்துப் பேசினேன் என்பதால் இருக்கலாம்!

நிகழ்ச்சி முடிந்ததும் பட்டிமன்றத் தலைவரும் மற்ற பேச்சாளர்களும் என்னைப் பாராட்டினர். பார்வையாளர்களிலும் பலர் மேடைக்கு வந்து என்னைப் பாராட்டினர்.

தேவராஜன் எதுவும் சொல்லவில்லையே என்று அப்போதுதான் நினைவு வந்தது. அவரிடம் போய், "என் கன்னிப்பேச்சு எப்படி சார் இருந்தது?" என்றேன்.

அவர் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தபோது பார்வையாலேயே எரித்து விடுவது போல் இருந்தது.

"என்ன, கிண்டல் பண்றீங்களா? பழகினவராச்சேன்னு வாய்ப்புக் கொடுத்தா, தீட்டின மரத்திலேயே கூர் பாத்துட்டீங்களே!" என்றர் கோபத்துடன்.

"பட்டிமன்றத்தில பேசறதெல்லாம் ஒரு விளையாட்டு மாதிரிதானே சார்?" என்றேன் நான் அதிர்ச்சியுடன்.

"எந்த நிகழ்ச்சியிலும், எத்தனை பேர் பேசினாலும் என் பேச்சைத்தான் அதிகம் பாராட்டுவாங்க. இன்னிக்கு ஒத்தன் கூட எங்கிட்ட வந்து நீங்க நல்லாப் பேசினாங்கன்னு சொல்லலே!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.

அதற்குப் பிறகு அவரை நான் சந்தித்தபோதெல்லாம் அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு என்னுடன் பேசுவதையே தவிர்த்தார்.

ஒருவர் எவ்வளவுதான் நூல்களைப் படித்திருந்தலும், அவரிடம் நற்பண்புகள் நிலவுவது அவருடைய மன இயல்பைப் பொருத்துத்தான் என்று எனக்குத் தோன்றியது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு

குறள் 823:
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.

பொருள்: 
பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், மேன்மையான உள்ளம் இல்லாதவர்க்கு அரிதான செயல்..
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...