"ஆமாம். மாநில அமைச்சரா இருந்தாலே, அங்கே செய்ய வேண்டிய வேலை என்னன்னு புரிஞ்சுக்கறதே கஷ்டம். மத்தியில் உள்ள அதிகாரிகள் வேற மாதிரி இருப்பாங்க. அவங்களை சமாளிக்கணும். அண்ணனுக்கு ஆங்கிலம் தெரியும்னாலும், டில்லியில அமைச்சரா இருக்கறது அவருக்குப் பெரிய சவாலா இருக்கும்."
"அதனாலதான், ஒரு நல்ல உதவியாளரை வச்சுக்கப் போறாராம்!"
"'யாரை வச்சுக்கப் போறாரு?"
"தன் அந்தரங்க உதவியாளர் மூலமாதான், மத்திய அரசு அதிகாரிகள், மற்ற அமைச்சர்களோட, அவரால இணைஞ்சு பணியாற்ற முடியும். நம்ம கட்சியில இருக்கற ஒரு படிச்ச, அறிவுள்ள ஆளை வச்சுப்பாருன்னு நினைக்கிறேன்!"
"அப்ப உனக்கோ, எனக்கோ வாய்ப்பில்லேன்னு சொல்லு!"
கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் இருவர் இவ்வாறு பேசிக் கொண்டனர்.
"என்ன ஆறுமுகம், மத்திய அமைச்சரா ஆயிட்டீங்க. உங்களுக்கு உதவியாளரா வரதுக்குக் கட்சிக்குள்ள நிறையப் போட்டி இருக்கு போலருக்கே!" என்றார் கட்சித் தலைவர் சபாபதி.
"ஆமாங்க. அது விஷயமாத்தான் உங்ககிட்ட பேச வந்தேன். நான் ஒத்தரைத் தேர்ந்தெடுத்திருக்கேன். அதுக்கு நீங்க ஒப்புதல் கொடுக்கணும்!" என்றார் ஆறுமுகம்.
"சொல்லுங்க!" என்றார் சபாபதி.
ஆறுமுகம் சொன்ன பெயரைக் கேட்டதும் "குணசீலனா? சின்னப் பையனாச்சே அவன்! மேடையில நல்லா பேசறாங்கறதால, அவனை செய்தித் தொடர்பாளராப் போட்டேன். அவனும் தொலைக்காட்சி விவாதங்கள்ள நல்லாவே பேசறான். ஆனா, அந்தரங்கச் செயலர் பதவிக்கு அவன் சரியா இருப்பானா? மூத்த தலைவர்கள் எல்லாம் இந்த வாய்ப்பு தனக்குக் கிடைக்காதான்னு காத்துக்கிட்டிருக்காங்க. எங்கிட்ட சில பேரு சிபாரிசுக்குக் கூட வந்தாங்க. 'ஆறுமுகம்தான் முடிவு செய்வாரு, நான் யாரையும் பரிந்துரைக்க மாட்டேன்'னு சொல்லிட்டேன். ஆனா, இப்படி அனுபவம் இல்லாத ஒரு சின்னப் பையனைப் போடறீங்கறீங்களே!" என்றார்
"ஐயா! முதல் தடவையா நம்ம கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைச்சிருக்கு. என் மேல நம்பிக்கை வச்சு, அதை நீங்க எனக்குக் கொடுத்திருக்கீங்க. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சிறப்பா செயல்பட்டு, நம்ம கட்சிக்கு இந்திய அளவில ஒரு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.
"குணசீலன் படிச்சவர், நேர்மையானவர். தொலைக்காட்சி விவாதங்கள்ள அவர் நியாமாப் பேசறதை எல்லாரும் பாராட்டறாங்க. நம் கட்சியை ஆதரிச்சுப் பேசறப்ப, அவர் உண்மைகளையும், நியாயங்களையும் மட்டும்தான் எடுத்து வைப்பாரு. மற்றவர்களை வசை பாட மாட்டாரு. சிந்திச்சு, அளவா, பொருத்தமாப் பேசுவாரு.
"அதோட இல்லாம, கட்சியில அவருக்கு அவ்வப்போது நீங்க கொடுத்த சின்னப் பொறுப்புகளை ரொம்பத் திறமையா நிறைவேற்றி இருக்காரு. அவரை உதவியாளரா வச்சுக்கிட்டா, அவர் ஒரு நல்ல ஆலோசகராவும் இருப்பாரு. அதனாலதான், அவரைத் தேர்ந்தெடுத்தேன்."
ஆறுமுகம் சபாபதியைப் பார்த்தார்.
"கட்சியில இது கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தும். மூத்த தலைவர்கள் எல்லாம் கொஞ்சம் அதிருப்தி அடைவாங்க. ஆனா நீங்க யோசிச்சு சரியான முடிவு எடுத்திருக்கும்போது, உங்க முடிவை ஆதரிக்க வேண்டியது என் கடமை. வாழ்த்துக்கள்!" என்றார் கட்சித் தலைவர் சபாபதி.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 64
அமைச்சு
குறள் 635:
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
பொருள்:
அறத்தை அறிந்து, கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.
No comments:
Post a Comment