Friday, October 14, 2022

633. இளவரசனின் கோபம்

"தந்தையே! வல்லிய நாட்டு அரசனை நாம் எதற்கு நம் நாட்டுக்கு அழைக்க வேண்டும்? அது ஒரு சிறிய நாடு. அவர்களுக்கு நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?" என்றான் இளவரசன் கோமகன்.

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால், இது அமைச்சருடைய ஏற்பாடு. அவருக்கு நான் சில அதிகாரங்கள் கொடுத்திருக்கிறேன். அதன்படிதான் அவர் செயல்படுகிறார். எனவே அவரிடம் இது பற்றிக் கேள்வி கேட்பது முறையாக இருக்காது!" என்றார் அரசர்.

"இந்த நாட்டுக்கு நீங்கள் அரசரா, அமைச்சர் அரசரா?" என்றான் கோமகன் கோபத்துடன்.

"அரசே! குந்தள நாட்டின்மீது படையெடுக்க மலைய நாடு ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாக ஒற்றர்கள் மூலம் செய்தி வந்திருக்கிறது. குந்தள நாடு எப்போதும் நம்முடன் நட்பாக இருந்து வந்திருக்கிறது. எனவே குந்தள நாட்டுக்கு ஆதரவாக நம் படைகளை அனுப்ப வேண்டும்" என்றார் அமைச்சர் அருள்மொழி.

"அமைச்சரே! மற்ற நாட்டு மன்னர்களிடம் நீங்கள் அதிகம் அக்கறை காட்டுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு சிறு நாடான வல்லிய நாட்டின் அரசனை வரவழைத்து நம் விருந்தாளியாகச் சில நாட்கள் தங்க வைத்தீர்கள். இப்போது குந்தள நாட்டுக்கு ஆதரவாக நம் படைகளை அனுப்ப வேண்டும் என்கிறீர்கள்! மற்ற நாடுகளுக்காகப் போரிடுவதற்காகவா நாம் படைகளை வைத்திருக்கிறோம்?" என்றான் இளவரசன் கோபத்துடன்.

"கோமகா!.நாட்டு நிலவரங்கள் உனக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் உன்னை இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைத்தேன். உன்னிடம் யோசனை கேட்டால் பதில் சொல். இல்லாவிட்டால் நாங்கள் பேசுவதை கவனித்துக் கொண்டு மட்டும் இரு! அமைச்சரிடம் இது போல் பேசுவது முறையல்ல!" என்றார் அரசர் கோபத்துடன்.

அமைச்சர் அருள்மொழி சிரித்துக் கொண்டே, "இளவரசரின் ஐயங்களைத் தீர்க்க வேண்டியது என் கடமை. நமக்கு பக்கபலமாக நின்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அரச தர்மம், இளவரசே!" என்றார்.

"அப்படியே செய்யுங்கள் அமைச்சரே!" என்றார் அரசர். 

"அமைச்சரே! நாம் நீண்ட நாட்களாக எதிர்நோக்கி இருந்த அபாயம் நிகழ்ந்தே விட்டது!" என்றார் அரசர்

"காரி நாட்டுப் படைகள் நம் எல்லையில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அதை நாம் எப்படி முறியடிக்கப் போகிறோம்?" என்றான் இளவரசன்.

"நமக்கு மும்முனைப் பாதுகாப்பு இருக்கிறது. அதனால் எதிரிகளின் தாக்குதலை நாம் முறியடித்து விடலாம்!" என்றார் அமைச்சர்.

"அதென்ன மும்முனைப் பாதுகாப்பு?" என்றான் இளவரசன்.

"வல்லிய நாடு காரி நாட்டின் நட்பு நாடாக இருந்தது. வல்லிய நாட்டு அரசனை நம் நாட்டுக்கு அழைத்து வந்து  அவரை நம் நண்பராக ஆக்கிக் கொண்டு விட்டோம். அதனால் வல்லிய நாடு காரி நாட்டுக்கு ஆதரவாகப் போரில் இறங்காது..."

அமைச்சர் பேசி முடிக்கும் முன்பே, அரசர் இளவரசனைப் பார்த்து, "ஒரு சிறிய நாடான வல்லிய நாட்டின் மன்னருக்கு மதிப்புக் கொடுத்து நாம் ஏன் அவரை நம் நாட்டுக்கு அழைத்து உபசரிக்க வேண்டும் என்று கேட்டாயே! நாம் அவருக்கு நட்புக்கரம் நீட்டி அவரைக் காரி நாட்டு மன்னிடமிருந்து  பிரித்திருக்காவிட்டால் காரி நாட்டுப் படைகளுக்கு ஆதரவாக வல்லிய நாட்டுப் படைகளும் நமக்கு எதிராகப் போரில் இறங்கி இருக்கும். புரிந்ததா?" என்றார்.

இளவரசன் மௌனமாகத் தலையாட்டினான்.

"இரண்டாவதாக, குந்தள நாட்டுப்படை நமக்கு ஆதரவாகக் களம் இறங்கும். காரி நாட்டின் இன்னொரு எல்லையில் மலைப்பாங்கான பகுதியிலிருந்து குந்தள நாட்டுப் படைகள் தாக்கினால் அந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் காரி நாட்டுப் படைகள் சிதறி விடும்."

"மும்முனைப் பாதுகாப்பு என்றீர்களே, மூன்றாவது முனை எது?" என்றான் இளவரசன் ஆர்வத்துடன்.

அமைச்சர் சற்றுத் தயக்கத்துடன் அரசரைப் பார்த்து, "அரசே! தங்கள் அனுமதி இன்றி ஒன்றைச் செய்து விட்டேன்!" என்றார்.

"சொல்லுங்கள்!" என்றார் அரசர் சற்றுக் கவலையுடன்.

"உங்களிடம் கோபித்துக் கொண்டு அரண்மனையை விட்டுச் சென்ற உங்கள் ஒன்று விட்ட சகோதரர் உங்களை எதிர்ப்பதற்காக எல்லைப் புறத்தில் படை சேர்த்துக் கொண்டிருக்கிறார் அல்லவா?"

"ஆமாம். ஆனால் எல்லைப்புறத்தில் சிலர் அவனுக்குப் பாதுகாப்பாக இருப்பதால் தலைமறைவாக இருக்கும் அவனைக் கைது செய்ய  முடியவில்லை என்று சொன்னீர்களே?" என்றார் அரசர்.

"மன்னிக்க வேண்டும் அரசே! சில நாட்களுக்கு முன் ஒற்றர்கள் மூலம் அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அவரைச் சந்தித்தேன். அவர் தன் தவற்றை உணர்ந்து தங்களிடம் மன்னிப்புக் கோர விரும்புகிறார். சில மாதங்களாகவே காரி நாடு நம் மீது போர் தொடுக்கக் கூடும் என்ற பதட்டச் சூழல் இருந்ததால், போர்ச் சூழல் அகன்றதும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அவரை உங்களிடம் அழைத்து வரலாம் என்று நினைத்தேன்."

"அதை அப்புறம் பார்க்கலாம். அதற்கும் இந்தப் போருக்கும் என்ன தொடர்பு?"

"இருக்கிறது அரசே! அவரிடம் சில நூறு வீரர்களே இருந்தாலும், அவர்கள் மறைந்திருந்து தாக்குவதில் வல்லவர்கள். அவர்களை நாம் பயன்படுத்திக் கொண்டு எதிரிப்  படைகளைத் திணறடிக்க முடியும்!" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! முன்பு உங்களைப் பற்றித் தவறாகப் பேசியதற்கு என்னை மன்னித்து விடுங்கள்!" என்றான் இளவரசன், அமைச்சரைப் பார்த்துக் கைகூப்பியபடி.

"என்ன இது இளவரசே?" என்று அமைச்சர் இளவரசனின் கைகளை விலக்க, அரசர் புன்னகையுடன் அதை ரசித்தார். 

அரசியல் இயல்
அதிகாரம் 64
அமைச்சு

குறள் 633:
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.

பொருள்:
பகைவர்ககு துணையானவரைப் பிரித்தல், தம்மிடம் உள்ளவரைக் காத்தல், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளுதல் இவற்றில் வல்லவன் அமைச்சன்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...