Tuesday, October 4, 2022

818. கல்லூரியில் ஒரு இடம்!

அந்தப் பொறியியல் கல்லூரியில் தன் மகன் வினோதைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளை முடித்து விட்டு, கல்லூரியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது. தற்செயலாகத் தன் கல்லூரி நண்பன் சந்துருவைச் சந்தித்தான் முரளி.

"டேய் சந்துரு எப்படிடா இருக்கே? பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சு!". என்றான் முரளி உற்சாகத்துடன்.

சந்துருவும் தன் மகனை அந்தக் கல்லூரியின் சேர்க்கத்தான் வந்திருக்கிறான் என்று தெரிந்தது.

"வினோதுக்கு ஏரனாடிக்ஸ் எஞ்சினிரிங் படிக்க விருப்பம். ஏரனாடிக்ஸ் எஞ்சினியரிங்குக்கு சாந்தா காலேஜ்தானே பெஸ்ட்? அதில சேர்க்கதான் முயற்சி பண்ணினேன். ரொம்ப நேரோவா மிஸ் ஆயிடுச்சு. சாந்தா காலேஜுக்கு அடுத்த நிலையில இருக்கறது இதுதானே? அதனால இதில சேர்த்தேன். சாந்தா காலேஜில சேர முடியாதது வினோதுக்கு வருத்தம்தான். என்ன செய்யறது? நாம ஆசைப்படறது எல்லாமே கிடைச்சுடுதா என்ன?" என்றான் முரளி பெருமூச்சுடன்.

"உன் நண்பன் கிருஷ்ணமணிக்கு சாந்தா காலேஜில செல்வாக்கு உண்டே? அவன் சிபாரிசு பண்ணினா சீட் கிடைச்சிருக்குமே, அவன்கிட்ட கேக்கலியா நீ?" என்றான் சந்துரு.

"கேட்டேன். அவன் அப்பா இருந்தப்ப, அவர் சிபாரிசு பண்ணின ரெண்டு மூணு பேருக்கு சீட் கொடுத்துக்கிட்டிருந்தாங்களாம். ஆனா அவன் அப்பா இறந்தப்பறம், அவன் சிபாரிசை அவங்க மதிக்கிறதில்லையாம். அதனால என்னால முடியாதுன்னு ரொம்ப வருத்தப்பட்டு சொன்னான். அவனால முடிஞ்சா அவன் செஞ்சிருப்பான்!"

"கிருஷ்ணமணி அப்பா இறந்து பத்து வருஷம் ஆகி இருக்குமே! இந்தப் பத்து வருஷமா அவன் யாருக்குமே சீட் வாங்கிக் கொடுக்கலையா என்ன?" 

"ஆரம்பத்தில ரெண்டு மூணு வருஷம் அவன் சிபாரிசு பண்ணினவங்களுக்குக் கொடுத்திருப்பாங்க. அப்புறம் அவன் சிபாரிசை மதிக்கலையோ என்னவோ!"

சந்துரு சற்றுத் தயங்கி விட்டு, "இதை உங்கிட்ட சொல்லலாமோ என்னவோ தெரியல. ஏன்னா, கிருஷ்ணமணி உனக்கு நெருக்கமான நண்பன். ஆனா உன்னோட நண்பனா எனக்குத் தெரிஞ்ச உண்மையை உங்கிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன். உன் அளவுக்கு கிருஷ்ணமணி எனக்கு நெருக்கமானவன் இல்ல. ஆனா போன வருஷம் நானே அவங்கிட்ட கேட்டு என் பாஸோட பையனுக்கு சாந்தா காலேஜில சீட் வாங்கிக் கொடுத்திருக்கேன்!" என்றான்.

"எப்படிடா இது? தான் சிபாரிசு பண்ணினா கொடுக்க மாட்டாங்கன்னு எங்கிட்ட சொன்னானே அவன்?"

"என்னோட பாஸ் சென்னை கிரிக்கட் கிளப்ல உறுப்பினர். கிருஷ்ணமணிதான் கிரிக்கட் பைத்தியமாச்சே! என் பாஸோட பையனுக்கு சாந்தா காலேஜ்ல சீட் வாங்கிக் கொடுக்க முடியுமான்னு நான் கேட்டேன். சென்னையில நடக்கற T-20 மேட்ச்சுக்கு உன் பாஸால எனக்கு ரெண்டு டிக்கட் வாங்கிக் கொடுக்க முடியுமான்னு அவன் கேட்டான். அவ்வளவுதான்! டீல் முடிஞ்சு போச்சு. உங்கிட்ட இந்த மாதிரி டீல் எதுக்கும் வாய்ப்பு இல்லைங்கறதலதான் தன்னால முடிஞ்ச ஒரு விஷயத்தை முடியாதுன்னு பொய் சொல்லி இருக்கான்!" 

முரளி மௌனமாக இருந்தான்.

"என்னடா யோசிக்கற?" என்றான் சந்துரு.

"யாருக்கோ கொடுக்கணும்னு சொல்லி எங்கிட்ட பணம் கேட்டிருந்தா கூடக் கொடுத்திருப்பேன். என் பையன் சாந்தா கலேஜில சேர எவ்வளவு ஆர்வமா இருந்தான்னு கிருஷ்ணமணிக்கு நல்லாத் தெரியும். ஆனா தன்னால முடியக் கூடிய விஷயத்தை முடியாதுன்னு எங்கிட்ட பொய் சொல்லி இருக்கான்! ஒத்தன் எப்படிப்பட்டவன்னு தெரியாம அவன் எனக்கு நெருக்கமான நண்பன்னு நினைச்சுக்கிட்டிருந்தேனே, என்னோட அந்த முட்டாள்தனத்தைப் பற்றி நினைச்சுக்கிட்டிருக்கேன்!" என்றான் முரளி.

நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு

குறள் 818:
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.

பொருள்: 
தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டு விடவும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...