Tuesday, October 25, 2022

636. பொறுப்பு முதல்வர்

"முதலமைச்சர் வெளிநாடு போறப்ப, மூத்த அமைச்சர்களான நம்மை விட்டுட்டு, அரசில் அனுபவம் இல்லாத சந்திரமூர்த்தியைப் பொறுப்பு முதல்வரா நியமிச்சிருக்காரே! அவரால சமாளிக்க முடியுமா?" என்றார் அமைச்சர் பாரிவள்ளல்.

"சந்திரமூர்த்தி படிச்சவர். ஆனா, அரசியலுக்குப் படிப்பா முக்கியம்? அரசியல் அறிவுங்கறது வேற, படிப்பறிவுங்கறது வேற. முதல்வருக்கு இது தெரியாம போயிடுச்சே!" என்றார் அமைச்சர் குழந்தைவேலு, வருத்தத்துடன்.

"முதலமைச்சர் திரும்பி வர மூணு வாரம் ஆகும். அதுக்குள்ள சந்திரமூர்த்திக்கு அதிகபட்சக் குடைச்சல் கொடுத்து, முதல்வர் திரும்பி வந்ததும், அவர் மேல கோபப்பட்டு, அவர் சீட்டைக் கிழிக்கற நிலையை உருவாக்கறேன் பாருங்க!" என்று கறுவினார் பாரிவள்ளல்.

முதல்வர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்ததும், கட்சியின் உயர்மட்டக் குழுவைக் கூட்டினார்.

"நான் வெளிநாடு போயிருந்தப்ப, நீங்க எல்லாரும் ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாப் பாத்துக்கிட்டீங்க. அதுக்காக உங்க எல்லாருக்கும் என் நன்றி!" என்று ஆரம்பித்தார் முதல்வர்.

"சந்திரமூர்த்தி அரசியல் அனுபவம் அதிகம் இல்லாதவர்தான். ஆனா அவர் படிச்சவர்ங்கறதோட, சிறப்பா சிந்தித்துச் செயல்படக் கூடியவர் எனபதற்காகத்தான், அவரைப் பொறுப்பு முதல்வரா நியமிச்சேன். நான் எதிர்பார்த்தபடியே, அவர் சிறப்பா செயல்பட்டிருக்காரு. சில மூத்த அமைச்சர்கள் உட்பட, கட்சியில சில பேர் செஞ்ச சதிகளை முறியடிச்சதோட, மத்தியில ஆள்கிற கட்சி நமக்கு எதிரா செஞ்ச சதிகளையும் கவனிச்சு, அவங்க விரிச்ச வலையில விழாம எச்சரிக்கையா செயல்பட்டு, ஆட்சியை சிறப்பா நடத்தி இருக்காரு. அவருக்கு என் பாராட்டுக்கள்!"

பாரிவள்ளல், குழந்தைவேலு இருவரும் அதிர்ச்சியுடன் முதல்வரைப் பார்க்க, முதல்வர் சிரித்துக் கொண்டே சந்திரமூர்த்தியைப் பார்த்தார்.

"ஐயா! நான் எதுவுமே செய்யல. பிரச்னைகள் வந்தப்ப, நீங்க எப்படிச் செயல்படுவீங்கன்னு நினைச்சு செயல்பட்டேன். அவ்வளவுதான்!" என்றார் சந்திரமூர்த்தி, சங்கடத்துடன்.

"அதுதான் அன்றன்றைக்கு நடந்த விவரங்களையெல்லாம் டயரி எழுதற மாதிரி எழுதி, நான் வந்தவுடனேயே எங்கிட்ட கொடுத்தீங்களே! அதைப் பார்த்து எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்" என்ற முதல்வர், ஒரு நிமிட மௌனத்துக்குப் பின், "இன்னொரு விஷயம்!" என்று கூறி விட்டுப் பாரிவள்ளலையும், குழந்தைவேலுவையும், பார்த்தார்.

"பாரிவள்ளல், குழந்தைவேலு ரெண்டு பேரும் செஞ்ச அற்புதமான காரியங்களுக்காக, அவங்களுக்கு சிறப்புப் பரிசு கொடுக்கணும்னு நினைக்கறேன். அதனால, அவங்க ரெண்டு பேருக்கும் ஓய்வு கொடுத்து, அவங்களை அமைச்சர் பொறுப்பிலேந்து விடுவிக்கறேன்!" என்றார், தொடர்ந்து.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 64
அமைச்சு

குறள் 636:
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.

பொருள்:
நூலறிவுடன், இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால், எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? 

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...