Tuesday, October 11, 2022

632. அமைச்சருடன் ஒரு நகர்வலம்

"அமைச்சரே! இன்று இரவு நான் நகர்வலம் செல்லும்போது நீங்களும் என்னுடன் வர வேண்டும்!" என்றார் அரசர்.

அரசர் தன்னை ஏன் உடன் அழைக்கிறார் என்று புரியாமல் அமைச்சர் தலையாட்டினார்.

அன்று மாலை அரசரும் அமைச்சரும் சாதாரண மனிதர்களைப் போல் உடையணிந்து அரண்மனையிலிருந்து சுமார் 10 மைல் தொலைவிலிருந்த ஒரு ஊருக்குச் சென்றனர். 

அந்த ஊரை அவர்கள் அடைந்தபோது, பொழுது நன்கு இருட்டி இருந்தது. 

தாங்கள் வந்த தேரிலிருந்து  ஊரின் எல்லையிலேயே இறங்கிக் கொண்டு தேரை அரண்மனைக்குத் திருப்பி அனுப்பி விட்டார் அரசர்.

மறுநாள் காலை சூரிய உதய நேரத்தில் தேரை மீண்டும் அதே இடத்துக்குக் கொண்டு வந்து அரசரையும் அமைச்சரையம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது ஏற்பாடு.

ஊருக்குள் நுழைந்ததும், எதிரில் வந்த ஒரு நபரை நிறுத்திய அரசர், "ஐயா! நாங்கள் தொலைதூரத்திலிருந்து வருகிறோம். அரசரை ஒரு தடவை நேரில் பாத்து விட வேண்டும் என்பதற்காக அரண்மனைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். இப்போது இருட்டி விட்டதால், இந்த ஊரில் இரவு தங்கி விட்டுக் காலையில கிளம்பலாம் என்று நினைக்கிறோம். எங்களுக்குப் படுத்து உறங்க இடம் கிடைக்குமா?" என்றார்.

"என் வீட்டிலேயே படுத்துக் கொள்ளலாம். ஆனால் ஊரில் புதிதாக யாரும் வந்தால் இந்த ஊர்த்தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு ஏற்பாடு இருக்கிறது. அதனால் தலைவரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு வந்து விடுகிறேன்!" என்றார் அவர்.

"ஊரில் புதிதாக யாரும் வந்தால் தலைவருக்கு ஏன் தெரிவிக்க வேண்டும்? உங்கள் தலைவர் என்ன சர்வாதிகாரியா?" என்றார் அரசர்.

"ஐயா! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்..அவர் மிகவும் நல்லவர். இந்த ஊர் மக்களுக்கு எந்த ஒரு தீங்கும் நேராமல் காப்பாற்ற வேண்டும் என்ற  அக்கறையினால்தான் அவர் இப்படி ஒரு நடைமுறையை உருவாக்கி இருக்கிறார்!" என்றார் அந்த மனிதர்.

"அப்படி அவரிடம் சொல்லாவிட்டால்?"

"அவர் நல்லவர்தான், ஆனால் விதிகளை யாராவது மீறினால் கடுமையாக நடந்து கொள்வார். அதனால் ஊரில் எல்லோருக்கும் அவர் மேல் அன்பும் உண்டு, மரியாதையும் உண்டு.  ஆனால் இதுவரைக்கும் யாரும் அப்படிச் சொல்லாமல் இருந்ததில்லை! வாருங்கள், நான் தலைவரிடம் போய் உங்களைப் பற்றிச் சொல்றேன். நீங்களும் என்னுடன் வாருங்கள். நீங்களும் அவரை நேரில பார்த்த மாதிரி இருக்கும்."

ஊர்த்தலைவர் வீட்டுக்கு அவர்கள் சென்றபோது தலைவர் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சில ஓலைச்சுவடிகளைப் படித்துக் கொண்டிருந்தார்.

அவர்களை அழைத்து வந்த ஊர்க்காரர் தலைவரிடம் விஷயத்தைச் சொன்னதும், அவர்கள் இருவரையும் பார்த்த தலைவர், "சரி. நம் வீட்டிலேயே படுத்துக் கொள்ளட்டும். என் வீட்டில் எல்லாரும் ஊருக்குப் போயிருக்கிறார்கள். இருங்கள். யாரிடமாவது சொல்லி இவர்களுக்குச்  சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன்!" என்று எழுந்தார் தலைவர்.

"வேண்டாம் ஐயா! நாங்கள் பக்கத்து ஊரில் சத்திரத்தில் சாப்பிட்டு விட்டோம்" என்றார் அரசர்.

ஊர்க்காரர் விடைபெற்றுச் செல்ல, இருவரும் தலைவருக்குப் பக்கத்தில் திண்ணையில் அமர்ந்து  கொண்டனர்.

"நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்றார் அமைச்சர்.

"இது மனித ஒழுக்கம் பற்றிய ஒரு நீதி நூல். தலைவனாக இருப்பவனுக்கு நீதி, சரியான நடத்தை இதையெல்லாம் பற்றித்தெரிய வேண்டுமல்லவா? அதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன்!" என்றார் தலைவர்.

"உங்கள் ஊர் மக்களிடையே ஏதாவது தகராறு வந்தால் நீங்கள்தான் தீர்த்து வைப்பீர்களா?" என்றார் அரசர்.

"என்னிடம்தான் வருவார்கள். ஆனால் நான் இந்த ஊரில் இருக்கும் அறிஞர் ஒருவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, விசாரித்து, அவரிடம் ஆலோசனை கேட்டுத்தான் முடிவு செய்வேன்!" என்றார் ஊர்த்தலைவர்.

அரசரும், அமைச்சரும் இரவு அங்கே படுத்து உறங்கி விட்டு அடுத்த நாள் காலை கிளம்பி அரண்மனைக்கு வந்தனர்.

"அமைச்சரே! நேற்று நாம் பார்த்த ஊர்த்தலைவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்றார் அரசர் அமைச்சரிடம்.

"ஒரு சிறந்த மனிதர். இளம் வயதிலேயே நல்ல முதிர்ச்சி. தன் ஊர் மக்களைப் பாதுக்காப்பதில் அக்கறை, அதனால் ஊருக்கு யாரும் புதிதாக வந்தால் அவர்களைப் பற்றித் தனக்குத் தெரிவிக்க வேண்டுமென்று ஒரு விதியை உருவாக்கி, அதைக் கடுமையாகப் பின்பற்றுகிறார், மக்களிடம் அன்பும் அக்கறையும், தேவைப்படும்போது கடுமை, நீதி நூல்களைப் படிக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி, தேவைப்படும்போது அறிஞர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்து கொள்வது என்று அறிவு, அன்பு, பண்பு, கல்வி, உறுதியான நிலைப்பாடு போன்ற பல நல்ல தன்மைகள் உள்ளவராக இருக்கிறார். ஆமாம், இவரைப் பற்றி  உங்களுக்கு எப்படித் தெரிந்தது? என்னை ஏன் அவரைப் பார்க்க அழைத்துப் போனீர்கள்?" என்றர் அமைச்சர்.

"நான் நகர்வலம் போகும்போது அவரைத் தற்செயலாகப் பார்த்தேன். பிறகு சில நாட்கள் கொஞ்சம் நெருக்கமாக கவனித்தேன். உங்களை அழைத்துப் போய் அவரிடம் காட்டியதற்குக் காரணம்  ஒரு அமைச்சருக்குத் தேவையான குணங்கள் அவரிடம் இருக்கின்றனவா என்று உங்களிடம் கேட்டு அறிந்து கொள்ளத்தான்!"

"அரசே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றார் அமைச்சர், அரசர் கூறியதன் பொருளை உணர்ந்தவராக.

"நீங்கள் ஓய்வு பெறப் போவதாக அறிவித்து விட்டீர்கள். புதிய அமைச்சரை நான் தேர்ந்தெடுக்க வேண்டாமா? எப்படி என் தேர்வு?" என்றார் அரசர்.

"உங்கள் தேர்வு அற்புதம் அரசே! ஆனால் நீங்கள் அமைச்சராக்கப் போகும் நபரிடம் இருக்கும் குணங்கள் என்னிடம் இருந்திருக்கின்றனவா என்று நான் யோசிக்கிறேன்!" என்றார் அமைச்சர்.

பொருட்பால் 
அமைச்சியல்
அதிகாரம் 64
அமைச்சு 

குறள் 632:
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

பொருள்: 
செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...