Monday, October 10, 2022

821. நகுலன் கொடுத்த விலை!

நகுலனைத் தன் நிறுவனத்தில் ஒர்க்கிங் பார்ட்னராகச் சேரும்படி சுகுமார் அழைத்தபோது, நகுலன் முதலில் தயங்கினான்.

இருவரும் கல்லுரியில் இணைந்து படித்திருந்தாலும், படித்த காலத்தில் இருவருக்குமிடையே அவ்வளவு நெருக்கம் இருந்ததில்லை. 

பல வருடங்களுக்குப் பிறகு தற்செயலாகச் சந்தித்த பிறகு, இருவருக்குமிடையே சற்று நெருக்கம் ஏற்பட்டது.

"நீ மார்க்கெடிங்ல நல்ல அனுபவம் உள்ளவன். எங்கிட்ட தொழிற்சாலை இருக்கு. ஒரு மார்க்கெடிங் மானேஜர் இருந்தா, என் கம்பெனியை என்னால இன்னும் மேலே கொண்டு வர முடியும்" என்றான் சுகுமார்.

"அதுக்கு ஒரு நல்ல மார்க்கெடிங் மானேஜரைப் போட வேண்டியதுதானே? எதுக்கு என்னை ஒர்க்கிங் பார்ட்னரா வரச் சொல்ற?" என்றான் நகுலன்

"நான் நிறைய பேரை இன்டர்வியூ பண்ணிட்டேன். யாரும் எனக்குத் திருப்தியா இல்ல. அதனால, உனக்கு இந்த வேலையை ஆஃபர் பண்ண நினைச்சேன். என் நண்பனான உன்னை எங்கிட்ட வேலை செய்யச் சொல்றது சரியா இருக்காது. அதனாலதான், உன்னை ஒர்க்கிங் பார்ட்னரா சேரச் சொல்றேன். நீ மார்க்கெடிங்கைப் பாத்துக்க. நான் ப்ரொடக்‌ஷனைப் பாத்துக்கறேன்!"

சில நாட்கள் யோசித்து விட்டு, சுகுமாரின் நிறுவனத்தில் ஒர்க்கிங் பார்ட்னராகச் சேர்ந்தான் நகுலன்.

 கூறியபடியே மார்க்கெடிங் துறையைக் கையாள நகுலனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, உற்பத்தியை மட்டும் பார்த்துக் கொண்டான் சுகுமார்.

"மும்பையிலிருந்து ஒரு என்கொயரி வந்திருக்கு. அவங்களுக்கு ராணுவத்திலேந்து சில உபகரணங்களுக்கு ஆர்டர் வந்திருக்காம். அதுக்கான சில பாகங்களை நாம தயாரிச்சுக் கொடுக்க முடியுமான்னு கேக்கறாங்க" என்றான் நகுலன், சுகுமாரிடம்.

"அதுக்கு ஏன் என்னைக் கேக்கற? நீதானே முடிவு செய்யணும்?" என்றான் சுகுமார்.

"இதுக்கு முன்னால உங்கிட்ட கேட்டப்ப, நீ முடியாதுன்னு சொல்லிட்டியாமே!என்னோட உதவியாளர் சொன்னாரு. அவர்தானே நான் வரதுக்கு முன்னாலேந்தே மார்க்கெடிங் டிபார்ட்மென்ட்ல வேலை செஞ்சுக்கிட்டிருக்காரு?"

"ஓ, அவங்களா? அப்ப மார்க்கெடிங்குக்கு சரியான ஆள் இல்லாததால, அதை நான் எடுத்துக்க விரும்பல. ஏன்னா, அது ரெகுலர் ஆர்டர். அவங்களோட தேவைகளைப் புரிஞ்சுக்கிட்டு, அவங்களுக்கு சர்வீஸ் பண்றது கஷ்டம்னு நினைச்சு அப்ப அதை ஏத்துக்கல. இப்பதான் நீ இருக்கியே!" என்றான் சுகுமார்.

"உங்க நண்பர் உங்களை திட்டம் போட்டு ஏமாத்தி இருக்காரு. சட்ட விரோதமா ஆயுதங்கள் தயாரிச்சு, அதையெல்லாம் இயந்திரப் பகுதிகள்ங்கற பெயரில வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யற ஒரு நிறுவனம், மூணு மாசம் முன்னால, சுகுமாருக்குத் தெரிஞ்சவங்க மூலமா, அவரை அப்ரோச் பண்ணி, பாகங்கள் சப்ளை பண்ணச் சொல்லிக் கேட்டிருக்காங்க. முதல்ல மாட்டேன்னு சொன்னவர், உங்களை சந்திச்சப்புறம், திட்டம் போட்டு உங்களை ஒர்க்கிங் பார்ட்னரா எடுத்துக்கிட்டு, அவங்ககிட்ட உங்களைத் தொடர்பு கொள்ளச் சொல்லி இருக்காரு. ஒருவேளை நீங்க இந்த ஆர்டரை எடுத்துக்கிட்டு சப்ளை பண்ணி, பின்னால கம்பெனி போலீஸ் விசாரணைக்குள்ள வந்திருந்தா, உங்களைக் கை காட்டிட்டு அவர் தப்பிக்கப் பாத்திருப்பாரு. உங்களுக்கு எதனால சந்தேகம் வந்தது?" என்றார் பிரைவேட் டிடெக்டிவ் சந்தர்.

"இதுக்கு முன்னால ஒரு நிறுவனத்தில நான் வேலை செஞ்சுக்கிட்டிருந்தபோது, இண்டஸ்ட்ரி அசோசியேஷன்லேந்து வந்த ஒரு சர்க்குலரைப் பார்த்தேன். ஆயுதங்களுக்கான பாகங்கள் கேட்டு ஏதாவது ஆர்டர் வந்தா, அவங்ககிட்ட அரசாங்கத்துக்கிட்டேந்து வந்த ஆர்டர் காப்பியை வாங்கி வச்சுக்கிட்டு, அப்புறம்தான் ஆர்டரே எடுத்துக்கணும்னு அதில சொல்லி இருந்தாங்க. அ ந்த சர்க்குலர் சுகுமாருக்கும் வந்திருக்கணும். ஆனா, அவன் அது பத்தி எதுவுமே தெரியாத மாதிரி, என்னை அந்த ஆர்டரை எடுத்துக்கச் சொன்னதாலதான், உங்களை அந்த மும்பை நிறுவனம் பற்றி ரகசியமா விசாரிக்கச் சொன்னேன். நீங்களும் உடனே விசாரிச்சு, அவங்க போலீஸ் வாட்ச் லிஸ்ட்ல இருக்கறதா சொல்லிட்டீங்க. ரொம்ப நன்றி!" என்றான் நகுலன்.

"இப்ப என்ன செய்யப் போறீங்க?"

"சுகுமாரைப் பார்த்து நீங்க கண்டுபிடிச்சுச் சொன்ன விஷயங்களை அவன்கிட்ட சொல்லி, உடனே என்னைப் பொறுப்பிலேந்து விடுவிக்கச் சொல்லப் போறேன். ஏதாவது தகராறு பண்ணினான்னா, போலீசுக்குப் போவேன்னு சொல்லுவேன். அப்புறம் வேற வேலை தேடணும்! என்ன செய்யறது? அவசரப்பட்டு, நம்பக் கூடாத ஒத்தனை நண்பனா நினைச்சு ஏமாந்ததுக்கு ஏதாவது விலை கொடுத்துத்தானே ஆகணும்?" என்றான் நகுலன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு

குறள் 821:
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.

பொருள்: 
மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, அடிக்கப்படும் இரும்பைத் தாங்கி நிற்கும் பட்டடைக் கல்லுக்கு (இரும்புப் பட்டறையில் உள்ள கல்) ஒப்பாகும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...