"அமைச்சரே! நம் எல்லைப்புறத்தில் நடக்கும் போராட்டத்தை ஒடுக்க, நீங்கள் ஒரு முயற்சியும் செய்யவில்லையே!" என்றார் அரசர்.
"அரசே! மக்கள் அரசாங்கத்தின் மீது கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் கோபத்தைப் போக்குவதற்கான வழிமுறையை யோசித்துக் கொண்டிருக்கிறேன். அங்குள்ள நம் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். விரைவிலேயே ஒரு தீர்வுக்கான திட்டம் தங்கள் அனுமதியுடன் செயல்படுத்தப்படும்" என்றார் அமைச்சர்.
"படைகளை அனுப்பிப் போராட்டக்கார்களை அடக்குவதை விட்டு, அவர்கள் கோபத்தைப் போக்கும் வழி பற்றி யோசிப்பதாகச் சொல்கிறீர்களே!"
"மன்னிக்க வேண்டும் அரசே! அது எல்லைப்பகுதி. அந்தப் பகுதியை ஆக்கிரமிக்க, நம் அண்டை நாடு சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கிறது. மக்கள் மீது நாம் அடக்குமுறையை ஏவினால், அவர்கள் நம் மீது கோபம் கொண்டு, அண்டை நாட்டின் சூழ்ச்சிக்கு ஆளாகி விடக் கூடும். அவர்கள் பிரச்னையை அனுதாபத்துடன் அணுகுவதுதான் நல்லது."
"மக்கள் எதற்காகப் போராடுகிறார்கள்? அவர்களுக்கு நாம் வசதிகள் செய்து கொடுக்கவில்லையா?"
"அரசே! மக்கள் போராடுவது வசதிகளுக்காக அல்ல. அங்கே அண்டை நாட்டார் ஊடுருவல் அதிகம் இருப்பதால், நம் ராணுவத்தினரின் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. சந்தேகத்தின் பேரில் பலரை நம் படை வீரர்கள் பிடித்து, ராணுவ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கிறார்கள். இதனால் சில அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் சில இடங்களில் மக்கள் போராடுகிறார்கள்."
"அதற்கு என்ன செய்ய முடியும்? ராணுவம் கடுமையாக நடந்து கொள்ளாவிட்டால்ர ஊடுருவல்காரர்களை எப்படி அடையாளம் காண்பது?"
"அரசே! அங்கிருக்கும் நம் ராணுவ வீரர்களுடன் கலந்து பேசி, ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறேன். திட்டத்தை இறுதியாக்கிய பின், உங்களிடம் விளக்கிக் கூறி, உங்கள் அனுமதி பெற்று, அதைச் செயல்பட நினைத்திருந்தேன். தாங்கள் கேட்பதால், இப்போதே விவரங்களைக் கூறுகிறேன்.
"உள்ளூர் மக்கள் சிலரைக் கொண்டு, குடிமக்கள் படை என்ற ஒரு படையை உருவாக்கப் போகிறோம். அவர்கள் ரகசியமாகச் செயல்பட்டு, ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு ராணுவத்திடம் தெரிவிப்பார்கள்.
"குடிமக்கள் படையால் அடையாளம் காட்டப்பட்டவர்களை மட்டும் ராணுவம் ரகசியமாகக் கைது செய்து விசாரிக்கும். குடிமக்கள் படை உள்ளூர் மக்களைக் கொண்டதால், அவர்களால் நம் நாட்டவர் யார், ஊடுருவல்காரர் யார் என்று சரியாக இனம் காண முடியும். இதனால் அப்பாவி மக்கள் கைது செய்யப்படுவது பெருமளவு தவிர்க்கப்படும். ஊடுருவல்காரர்களைக் கைது செய்து, அவர்களிடமிருந்து தகவல் பெற்று, அண்டை நாட்டின் திட்டங்களை அறிய முடியும். இதனால் அண்டை நாட்டின் திட்டங்களை முறியடித்து, நம் எல்லைப்புறத்தை நம்மால் பாதுகாக்கவும் முடியம்"
அமைச்சரின் விளக்கத்தைக் கேட்ட அரசர், "இது நல்ல திட்டம்தானே! உடனே இதைச் செயல்படுத்தலாமே! ஏன் தாமதம் செய்கிறீர்கள்?" என்றார்.
"அரசே! குடிமக்கள் படை என்பது பிரச்னையைத் தீர்ப்பதற்கான ஒரு கருவி. இதை எப்படிப் பயன்படுத்துவது, திட்டத்தை எப்போது செயல்படுத்துவது, எந்த வகையில் செயல்படுத்துவது, எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதைப் பற்றி எல்லாம் நம் படைத்தலைவருடன் கலந்தாலோசித்து, விவரமாகத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறோம்.
"முதலில், மக்களின் கோபம் குறைய, நாம் சற்று அவகாசம் கொடுக்க வேண்டும். அதுவரை, நம் படைகளின் நடவடிக்கைகளைச் சற்றுக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
"குடிமக்கள் படையில் இடம் பெறப் போகும் முக்கியத் தலைவர்களை முதலில் அடையாளம் கண்டு, அவர்களிடம் இதை விளக்கி, அவர்களைப் படையில் சேர்த்த பின், அவர்கள் மூலம் இன்னும் பல உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்.
"இந்தக் குடிமக்கள் படையில் அந்நியர்கள் ஊடுருவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும், படையில் சேர்ந்தவர்களையும், நம் ஒற்றர்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரியாகச் செய்தால்தான், இந்தத் திட்டம் வெற்றி பெறும்."
"நல்லது அமைச்சரே! நன்கு யோசித்துத் திட்டமிட்டுச் சிறப்பாகச் செயல்படுத்துங்கள். இதற்காக நீங்கள் செய்ய வேண்டிய எந்த ஒரு செயலுக்கும், என் முழுமையான அனுமதியை இப்போதே வழங்குகிறேன்!" என்றார் அரசர்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 64
அமைச்சு
குறள் 631:
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
No comments:
Post a Comment