"சார்! வணக்கம். நான் மிக்மேக் மார்க்கெடிங்லேந்து பிரியா பேசறேன். எங்களோட நெட்வொர்க் மார்க்கெடிங் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்க..."
"சாரி..." என்று மோகன் அழைப்பைத் துண்டிக்கப் போனபோது, "சார்! ஒரு நிமிஷம். உங்க நண்பர் பரத் இந்த வாரம் மீட்டிங்குக்கு உங்களை ஸ்பான்ஸர் பண்ணி இருக்காரு" என்றாள் பிரியா.
"ஸ்பான்ஸர் பண்றதுன்னா?"
"மிஸ்டர் பரத் எங்க திட்டத்தில சேர்ந்திருக்காரு. அவர் தனக்குக் கீழே உறுப்பினர்களை சேர்க்கறதுக்காக, சில ப்ராஸ்பெக்ட்ஸை இன்வைட் பண்ணணும். அதாவது, வர சனிக் கிழமை, ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல நடக்கிற டின்னர் மீட்டிங்குக்கு அவங்களை வரச் சொல்லணும். அவர் ப்ராஸ்பெக்ட்ஸோட பெயர்களையும், ஃபோன் நம்பர்களையும் கொடுத்தா போதும், நாங்களே அவங்களை இன்வைட் பண்ணுவோம். மீட்டிங்குக்கு வந்து, திட்டங்களோட விவரங்களைக் கேட்டுக்கிட்டு, உங்களுக்கு விருப்பம் இருந்தா, நீங்க இதில சேர்ந்துக்கலாம்!"
"பரத் எங்கிட்ட எதுவும் சொல்லியே!"
"சார்! சில பேர் தங்களோட நண்பர்களை நேரடியாக் கூப்பிடத் தயங்குவாங்க. அதனாலதான், நாங்களே இன்வைட் பண்றோம். மீட்டிங்குக்கு வந்து விவரங்களைத் தெரிஞ்சுக்கிட்டா, உங்களுக்கே இது எவ்வளவு நல்ல ஸ்கீம்னு தெரியும். மீட்டிங்குக்கு வந்தா, எங்க திட்டத்தில சேரணும்னு அவசியம் இல்ல, ஆனா நிறைய பேர், இது எவ்வளவு நல்ல திட்டம்னு தெரிஞ்சுக்கிட்டப்பறம், உற்சாகமா முன்வந்து சேந்துப்பாங்க. ஒருவேளை நீங்க இந்தத் திட்டத்தில சேர்ந்தா, அடுத்த வாரம் நீங்க கொடுக்கிற லிஸ்ட்படி, உங்க நண்பர்களை நாங்க இன்வைட் பண்ணுவோம். வீ ஆர் மேக்கிங் ஸ்பான்ஸரிங் ஸோ ஈஸி ஃபார் அவர் மெம்பர்ஸ்!" என்று முத்தாய்ப்பாகத் தன் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தினாள் பிரியா.
"யோசிச்சு சொல்றேன்!" என்றான் மோகன்.
வெள்ளிக்கிழமை இரவு, மோகனுக்கு ஃபோன் செய்த பரத், "மிக்மேக்கிலேந்து ஃபோன் பண்ணினாங்களா?" என்றான், தயக்கத்துடன்.
"பண்ணினாங்க. ஆனா, நீ எங்கிட்ட எதுவும் சொல்லலியே!" என்றான் மோகன்.
"உனக்கு இந்த நெட்வொர் மார்க்கெடிங் எல்லாம் பிடிக்குமான்னு எனக்குத் தெரியல. இந்த ஸ்கீம் எனக்கு ரொம்பப் பிடிச்சதால, நான் சேர்ந்துட்டேன். அஞ்சு ப்ராஸ்பெக்ட்ஸ் பேரு கொடுக்கணும்னு கேட்டாங்க. அவங்களே ஃபோன் பண்ணி, விவரம் சொல்லி இன்வைட் பண்றதாச் சொன்னாங்க. எனக்குத் தெரிஞ்சவங்க அதிகம் பேர் கிடையாது. அதனால உன் பேரையும் இன்னும் நாலு நண்பர்கள் பேரையும் கொடுத்தேன்."
பரத்தின் பேச்சில், ஏதோ தவறு செய்து விட்டு, அதற்கு மன்னிப்புக் கேட்பது போன்ற தொனி ஒலித்தது.
"மீட்டிங்குக்கு வரேன். அங்கே பேசிக்கலாம்" என்றான் மோகன்.
ஒரு நட்சத்திர ஓட்டலில், கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடுத்தர வருமானம் உள்ள ஒரு நபர் கூட எப்படி அந்தத் திட்டம் மூலம் ஒரு சில மாதங்களிலேயே ஆயிரக்கணக்கில் தொடர் வருமானம் பெற முடியும் என்று நிறுவனத்தின் சில அதிகாரிகள் விளக்கினார்கள்.
ஏற்கெனவே உறுப்பினர்களாக இருக்கும் சிலர், தங்களால் எப்படி விரைவிலேயே பெரும் தொகை ஈட்ட முடிந்தது என்று விளக்கினார்கள்.
கூட்டம் முடிந்ததும், உணவு அருந்திக் கொண்டே, பலரும் சிறு குழுக்களாக நின்று, திட்டம் பற்றிப் பேசிக் கொண்டனர்.
"என்ன நினைக்கிறே?" என்றான் பரத்.
மோகன் பதில் சொல்வதற்குள், அவர்களுடைய நண்பர்கள் சரவணன், முத்து இருவரும் அங்கே வந்தார்கள். "மோகன், நீ இந்த மீட்டிங்குக்கு வர மாட்டேன்னு நான் முத்துகிட்ட அடிச்சுச் சொன்னேன்! ஆனா நீ வந்திருக்கே. ஆச்சரியம்தான்!" என்றான்.
"இதில என்ன ஆச்சரியம்?" என்றான் மோகன்.
"உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? நீ சிட்ஃபண்ட்ல கூட சேர மாட்டே! எம் எல் எம்-ல சேருவியா என்ன?"
"முட்டாள்தனமாப் பேசாதே! பரத்துக்கு என்னை எத்தனையோ வருஷமா தெரியும். எனக்கு இதில ஆர்வம் இல்லேன்னா, அவன் என்னை இந்த மீட்டிங்குக்குக் கூப்பிட்டிருக்கவே மாட்டானே!" என்றான் மோகன்.
"அப்படின்னா, நீ இதில சேரப் போறியா என்ன?" என்றான் சரவணன், வியப்புடன்.
"ஐயாயிரம் ரூபாய்தானே முதலீடு? ஐயாயிரம் ரூபாய்க்கு வேற ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்க முடியுமா என்ன? சேர்ந்து பாக்கறது. என்ன ஆயிடப் போகுது?" என்றான் மோகன்.
நம்ப முடியாத மகிழ்ச்சியுடன், பரத் மோகனைப் பார்த்தான்.
"உங்களுக்கு யார்கிட்டேயும் போய் எதையும் கேட்கப் பிடிக்காது. ஏதாவது ஒரு ஆஃபீசுக்குப் போயிருக்கறப்ப, அங்கே எதிலேயாவது கையெழுத்துப் போடணும்னா, பக்கத்தில இருக்கிறவர்கிட்ட ஒரு பேனா இரவல் கேட்கக் கூடத் தயங்குவீங்க. நீங்க எதுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுத்து இதில சேர்ந்திருக்கீங்க? உங்களால யாரையாவது சேர்க்க முடியுமா? நீங்க யாரையும் கேக்கக் கூட மாட்டீங்களே?" என்றாள் மோகனின் மனைவி மல்லிகா.
"என்னைப் பத்தித் தெரியாம, பரத் என்னை இந்த மீட்டிங்குக்குக் கூப்பிட்டுட்டான்னு சரவணனும் மத்தவங்களும் சொன்னப்ப, பரத்துக்கு ஆதரவா இருக்கணும்னு தோணிச்சு. அதனால, எனக்கும் இந்த பிசினஸ்ல ஆர்வம் இருக்கிறதாக் காட்டிக்கிட்டு இதில சேர்ந்தேன். ஆனா, நான் இந்த பிசினஸைப் பண்ணப் போறதில்ல, யாரையும் இதில சேர்க்க முயற்சி செய்யப் போறதல்ல. கொஞ்ச நாள் கழிச்சு, என் நண்பர்கள்கிட்ட 'முயற்சி செஞ்சேன், ஆனா என்னால முடியலே'ன்னு சொல்லிடப் போறேன்! கம்பெனியில கொடுத்த பொருட்களோட மதிப்பு ஆயரம் ரூபா இருக்கும். மீதித்தொகையை நஷ்டம்னு நினைச்சுக்க வேண்டியதுதான்" என்றான் மோகன்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு)
குறள் 803:
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.
No comments:
Post a Comment