"உன்னோட சினேகிதம் எல்லாம் சரியில்ல. பார்த்து நடந்துக்க!" என்றார் சிவப்பிரகாசம், தன் மகன் முருகேஷிடம்.
"ஏங்க, அவன் வளர்ந்த பையன். அவனுக்குத் தெரியாதா? அவனுக்குப் போய் உபதேசம் பண்ணிக்கிட்டிருக்கீங்க!" என்றாள் அவர் மனைவி செண்பகம்.
"ஏன், பெரியவனாயிட்டான்னா, பெத்தவங்க அவனுக்கு புத்தி சொல்லக் கூடாதா? காலம் காலமா பெரியவங்க சொல்லிட்டுப் போனதைத்தான் நான் அவனுக்குச் சொல்றேன். இதையெல்லாம் நம்மை மாதிரி பெரியவங்க சின்னவங்களுக்குச் சொல்லலேன்னா, அவங்களுக்கு எப்படித் தெரியும்?"
"பரவாயில்ல, சொல்லுங்கப்பா. என்னோட எந்த நண்பனைப் பத்தி நீங்க சொல்றீங்க?" என்றான் முருகேஷ்.
"நீ வேலைக்குப் போக ஆரம்பிச்சப்பறம், நண்பர்கள்னு நாலைஞ்சு பேரை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்கே. அவங்க யாருமே சரியில்ல!" என்றார் சிவப்பிரகாசம்.
"சரியில்லேன்னா?"
"அவங்க நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவங்களா எனக்குத் தெரியல. அது எப்படி எனக்குத் தெரியும்னு கேக்காதே! அவங்க பேச்சு, நடந்துக்கற முறை இதையெல்லாம் வச்சு சொல்றேன்!"
"அப்பா! அவங்கள்ளாம் ஏழ்மையான குடும்பத்தைச் சேந்தவங்க. அதனால, அவங்க நாகரீகமா இல்லாதவங்க மாதிரி தெரியலாம். அதுக்காக, அவங்களையெல்லாம் தப்பானவங்கன்னு முடிவு கட்டிட முடியுமா?" என்றான் முருகேஷ்.
"அவங்க தப்பானவங்கன்னு நான் சொல்லல. ஒத்தரோட நட்பு வச்சுக்கறதுக்கு முன்னால, அவரோட குடும்பப் பின்னணி, குணம், தன்னைச் சுத்தி இருக்கறவங்ககிட்ட அவர் எப்படி நடந்துக்கிறாரு இதையெல்லாம் பாக்கணும்! இது நான் சொல்றதில்ல. பெரியவங்க சொல்லி இருக்காங்க" என்றார் சிவப்பிரகாசம்.
"அப்பா! பெரியவங்க சொல்றதையெல்லாம் நாம அப்படியே பின்பற்றுவது இல்ல. சில விஷயங்களைக் காலத்துக்கு ஏத்தவாறு மாத்திக்கிறோம், சிலவற்றைத் தப்புன்னு உணர்ந்து மாத்திக்கறோம். குடும்பப் பின்னணியைப் பாக்கறது சரின்னு நான் நினைக்கல. ஆனா, மத்த விஷயங்களை ஒத்துக்கறேன். அவங்க குணம், அவங்களைச் சுத்தி இருக்கிறவங்ககிட்ட அவங்க நடந்துக்கற விதம் இதையெல்லாம் பார்க்கணும்னு நான் ஒத்துக்கறேன். இதில ஏதாவது எனக்கு தப்பாத் தெரிஞ்சா, நான் அவங்க நட்பை முறிச்சுப்பேன்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் முருகேஷ்.
"இந்தக் காலத்துப் பிள்ளைங்கள்ளாம் தங்களுக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சுக்கறாங்க. பெரியவங்க சொல்றதையே கேள்வி கேக்கறாங்க!" என்று சலித்துக் கொண்டார் சிப்பிரகாசம்.
"எனக்கென்னவோ முருகேஷ் நல்லா தெளிவா யோசிக்கிறான்னுதான் தோணுது!" என்றாள் செண்பகம்.
"என்னப்பா, உங்க நண்பர் கருணாகரனை அவர் கம்பெனியில ஏதோ மோசடி செஞ்சுட்டார்னு கைது செஞ்சுட்டாங்களாமே!" என்றான் முருகேஷ்.
"ஆமாம். அவனை நல்லவன்னு நினைச்சுத்தான் இத்தனை நாள் பழகினேன். அவன் இப்படிப் பண்ணுவான்னு எதிர்பாக்கல!" என்றார் சிவப்பிரகாசம்.
"இப்படிப்பட்ட மோசமான ஆளை எப்படி உங்க நண்பாரா வச்சுக்கிட்டீங்க? அன்னிக்கு முருகேஷுக்கு உபதேசம் பண்ணினீங்களே, கருணாகரனோட நட்பு வச்சுக்கறதுக்கு முன்னால, நீங்க அவர் குடும்பப் பின்னணி, குணம் இதையெல்லாம் பாக்கலியா?" என்றாள் செண்பகம், கேலியான குரலில்.
சிவப்பிரகாசம் அடிபட்டவர் போல் மனைவியைப் பார்த்தார்.
"என்னம்மா இது? அவர் குடும்பப் பின்னணி எல்லாம் நல்லாத்தான் இருந்திருக்கும். நல்ல குடும்பத்தில பிறந்தவங்க தப்பு பண்றதில்லையா? அவர் தப்பு பண்ணி இருக்கலாம். ஆனா, அப்பாவுக்கு எந்தக் கெடுதலும் பண்ணலியே! அப்பாவுக்கு நல்ல நண்பராத்தானே இருந்திருக்காரு?" என்றான் முருகேஷ்.
தனக்கு ஆதரவாகப் பேசிய மகனை வியப்புடன் பார்த்த சிவப்பிரகாசம், அன்று செண்பகம் சொன்னது போல் முருகேஷ் தெளிவாகத்தான் சிந்திக்கிறான் என்று நினைத்துக் கொண்டார்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல்
குறள் 793:
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு..
No comments:
Post a Comment