"என்ன சார், எம்.டி. என்ன சொல்றாரு?" என்றான் சுகுமார், நிர்வாக இயக்குனர் அறைக்குச் சென்று வந்த ஜெனரல் மானேஜர் பிரபுவைப் பார்த்து.
சீனியாரிடி காரணமாக பிரபுவுக்கு ஜெனரல் மானேஜர் என்ற பதவி அளிக்கப்பட்டிருந்தாலும், அந்தச் சிறிய நிறுவனத்தில் மற்ற ஊழியர்களுடன் கிட்டத்தட்ட சமமான நிலையில்தான் இருந்தார் அவர்.
"தினம் புதுசு புதுசா ஏதோ திட்டங்களைச் சொல்றாரு. அதையெல்லாம் எப்படி நிறைவேற்றப் போறார்னு தெரியல. எனக்குத் தலையை சுத்துது!" என்றார் பிரபு.
"உங்களை அதையெல்லாம் நிறைவேற்றச் சொல்றாரா?"
"அப்படிச் சொல்லல. தன் மனசில உள்ளதை யார்கிட்டேயாவது சொல்லணும்னு நினைக்கிறாரு. அதுக்காக என்னைப் பயன்படுத்தறாருன்னு நினைக்கிறேன். ஆனா, எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு?"
"என்ன பயம்?"
"அவரோட திட்டங்களை நிறைவேற்ற முயற்சி எடுக்கிற அளவுக்கு எனக்குத் திறமையோ, அனுபவமோ கிடையாது. ஒருவேளை நான் பிரயோசனமில்லைன்னு நினைச்சு, என்னை வேலையை விட்டு அனுப்பிட்டு வேற யாரையாவது நியமிச்சுடுவாரோன்னுதான்!"
"அப்படியெல்லாம் நடக்காது. நீங்க அவர் அப்பா காலத்திலேந்தே இருக்கீங்க. உங்களையே தூக்கிடுவார்னா, என் கதியெல்லாம் என்ன ஆறது?" என்று பிரபுவின் பயத்தை அதிகப்படுத்தினான் சுகுமார்.
"இவரோட அப்பா ஒரு பெரிய சாதனையாளர். தான் பாத்துக்கிட்டிருந்த நல்ல வேலையை விட்டுட்டு, இந்தத் தொழிலை ஆரம்பிச்சாரு. எவ்வளவோ சோதனைகளை சந்திச்சுத் தொழிலை இந்த அளவுக்கு வளர்த்திருக்காரு. இப்ப தொழில் ரொம்ப ஸ்டெடியாப் போய்க்கிட்டிருக்கு. ஆட்டோபைலட்ன்னு சொல்லுவாங்க. நாம ஒண்ணுமே செய்யாட்டாக் கூடத் தொழில் அது பாட்டுக்குப் போகும். ஆனா, இவரு தன் பங்குக்கு ஏதோ செய்யணும்னு நினைக்கிறார் போல இருக்கு!"
"என்னோட அப்பா இப்படி ஒரு நிறுவனத்தை உருவாக்கி இருந்தார்னா, நான் ஜாலியா உக்காந்துக்கிட்டு வருமானத்தை வாங்கிக்கிட்டு வாழ்க்கையை அனுபவிச்சுக்கிட்டிருப்பேன்!" என்றான் சுகுமார், பெருமூச்சுடன்.
"பிரபு சார்! சில நாட்களா உங்ககிட்ட என்னோட திட்டங்களைப் பத்தி சொல்லிக்கிட்டிருக்கேன் இல்ல, அதையெல்லாம் பத்தி என்ன நினைக்கிறீங்க?" என்றான் நிர்வாக இயக்குனர் நந்தன்.
"ரொம்ப பிரமிப்பா இருக்கு சார்! ஆனா, இதையெல்லாம் செயல்படுத்த நமக்கு ஒரு செட் அப் வேணுமே!" என்ற பிரபு, சற்றுத் தயங்கி விட்டு, "இப்பவே நம்ம கம்பெனி சிறப்பாத்தானே சார் போய்க்கிட்டிருக்கு?" என்றார்.
"நீங்க சொன்ன ரெண்டுமே கரெக்ட்தான். நம்ம கம்பெனி நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு. என் அப்பா இதை ரொம்ப நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விட்டுட்டுத்தான் போயிருக்காரு. நான் கையைக் கட்டிக்கிட்டு உக்காந்துக்கிட்டிருந்தாலே போதும்தான். ஆனா, நம் பெற்றோர்களை நாம பின்பற்றி நடந்துக்கணும், அவங்க செஞ்சு வச்சதை அனுபவிச்சுக்கிட்டிருந்தா மட்டும் போதாதுன்னு நான் நினைக்கிறேன். அதனால, நம் நிறுவனத்தை விரிவுபடுத்தலாம்னு நினைச்சுத்தான், அது தொடர்பா என் யோசனைகளை உங்ககிட்ட சொன்னேன்."
தான் ஏதாவது சொன்னால் தவறாகி விடுமோ என்று நினைத்து, பிரபு மௌனமாக இருந்தார்.
"ஆனா, நீங்க சொன்ன மாதிரி, அதுக்கான செட் அப் நம்மகிட்ட இல்ல. இப்ப இருக்கிற செட் அப்பை வச்சுக்கிட்டு அதைச் செய்ய முடியாது. அதனால, புது செட் அப் ஒண்ணை உருவாக்கப் போறேன். முதல்ல, ப்ராஜக்ட் மானேஜர் ஒத்தரை நியமிக்கப் போறேன்."
நந்தன் தொடரந்து என்ன சொல்லப் போகிறானோ என்ற பயத்துடன் பிரபு காத்திருந்தார்.
"ஆனா, அது இப்ப இருக்கிற செட் அப்பை பாதிக்கக் கூடாது. அதனால, ஒரு புது டிவிஷனை உருவாக்கி, அதுக்கு ப்ராஜக்ட் மானேஜரை பொறுப்பானவரா போடப் போறேன். இந்த ஆஃபீஸ் பக்கத்தில புதுசா ஒரு கட்டிடம் கட்டி, அதை ப்ராஜக்ட் ஆஃபீஸா ஆக்கப் போறேன். அப்பதான் உங்க ஆஃபீஸுக்கும் அதுக்கும் தொடர்பு இல்லாம இருக்கும். ஆனா, உங்க ஆஃபீஸ்லேயும் சில மாற்றங்களைக் கொண்டு வரணும்!"
மாற்றங்கள் தன்னை எப்படி பாதிக்குமோ என்ற கவலையில் பிரபு காத்திருந்தார்.
"உங்களுக்கு ஜெனரல் மானேஜர்னு டெசிக்னேஷன் கொடுத்திருந்தாலும், உங்களுக்கு ஒரு கேபின் கூட இல்லை. அதனால, உங்களுக்கு ஒரு கேபின் கொடுத்து, உங்களுக்கு சில அதிகாரங்கள் கொடுத்து, மற்றவங்களுக்கும் பொறுப்புகளை வரையறுத்துச் சில மாறுதல்களைச் செய்யணும். என்ன சொல்றீங்க?" என்றான் நந்தன்.
"உங்க அப்பா உருவாக்கினதை இன்னும் பெரிசா, சிறப்பா ஆக்கணுங்கற உங்க சிந்தனை ரொம்ப உயர்ந்தது சார்!" என்றார் பிரபு.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)
குறள் 602:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
பொருள்:
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர், சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு, முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.
No comments:
Post a Comment