"ஏன் சார் கடைசி நிமிஷத்தில டெண்டரை வித்டிரா பண்ணச் சொல்றீங்க? நாமதான் குறைவா கோட் பண்ணி இருக்கோம்னு நினைக்கிறேன். நமக்குத்தான் ஆர்டர் கிடைக்கும்" என்றார் மானேஜர் பலராமன்.
"நாம வித்டிரா பண்ணினா, அடுத்தாப்பல யாருக்கு ஆர்டர் கிடைக்கும்னு நினைக்கிறீங்க?" என்றார் மானேஜிங் டைரக்டர் சிவராம்.
"அநேகமா, பூர்ணிமா இண்டஸ்டிரீஸுக்குக் கிடைக்காலாம். அவங்க பெரிய க்ரூப். ஆனா அவங்களை பீட் பண்ணி நாம ஜெயிச்சா, நமக்கு அது ஒரு பெரிய கிரடிட் ஆச்சே!"
"வேண்டாம், வித்டிரா பண்ணிடுங்க, வேற எத்தனையோ டெண்டர்கள் இருக்கு! பாத்துக்கலாம்" என்றார் சிவராம், சுருக்கமாக.
பலராமன் புரியாமல் சிவராமைப் பார்த்தார்.
சிவராமின் நிறுவனம் டெண்டரை விலக்கிக் கொண்ட பிறகு, டெண்டர்கள் திறந்து பார்க்கப்பட்டதும், பூர்ணிமா இண்டஸ்ட்ரீஸின் டெண்டர் தொகை எல்லாவற்றுக்குள்ளும் குறைவாக இருந்ததால், அவர்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டது.
"பூர்ணிமா இண்டஸ்ட்ரீஸோட சேர்மன் மதுசூதனன் எனக்கு ஃபோன் பண்ணினாரு!" என்றார் சிவராம்.
"அப்படியா? ஆச்சரியமா இருக்கே! அவர் ரொம்ப பிசியானவர், அவரைப் பாக்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்கறது கஷ்டம்னு சொல்லுவாங்களே!" என்றார் பலராமன்.
"நாம டெண்டரை விலக்கிக்கிட்டது அவருக்குக் கொஞ்சம் ஆச்சரியமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன். நாம எவ்வளவு கோட் பண்ணினோம் ஏன் விலக்கிக்கிட்டோம்னு கேட்டாரு. நாம கோட் பண்ணின தொகையைச் சொன்னதும், அப்படின்னா உங்களுக்குத்தான் டெண்டர் கிடைச்சிருக்கும், ஏன் விலக்கிக்கிட்டீங்கன்னு கேட்டாரு" என்று சொல்லி நிறுத்தினார் சிவராம்.
"நீங்க என்ன சொன்னீங்க?" என்றார் பலராமன், காரணத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்.
"நான் அவர்கிட்ட சொன்னது இருக்கட்டும். காரணத்தை உங்ககிட்ட சொல்றேன். நான் டெண்டரை விலக்கிக்கச் சொன்ன காரணம் மதுசூதனனோட தொடர்பு ஏற்படுத்திக்கணும்னுதான். நாம கடைசி நிமிஷத்தில டெண்டரை விலக்கிக்கிட்டா, அது ஏன்னு தெரிஞ்சுக்க அவர் முயற்சி செய்வாரு, அப்ப அவரோட தொடர்பு ஏற்படுத்திக்கலாம்னு நினைச்சேன். ஆனா, அவரே ஃபோன் பண்ணுவார்னு எதிர்பாக்கல!" என்றார் சிவராம்.
"அவரோட எதுக்கு சார் தொடர்பு ஏற்படுத்திக்கணும்? அவங்க நம்ம காம்பெடிடர் ஆச்சே?" என்றார் பலராம்.
"அவரோடது பெரிய நிறுவனம். நாலைஞ்சு தலைமுறையா இருக்காங்க. நல்ல பேரோட கௌரவமா இருக்காங்க. நம்மளோடது ரொம்ப சின்ன நிறுவனம். நமக்கும் அவங்களுக்கும் போட்டின்னு சொல்ல முடியாது. எப்பவாவது இது மாதிரி சில டெண்டர்கள்ள போட்டி வரலாம். மத்தபடி, அவங்க மார்க்கெட் வேற, நம்ம மார்க்கெட் வேற. மதுசூனன் ஒரு நல்ல தொழில் பரம்பரையில வந்தவர். அதோட, அவர் ஒரு நேர்மையான மனிதர். ஒரு தடவை, ஒரு அமைச்சரோட உதவியாலதான் அவருக்கு ஒரு அரசாங்க ஆர்டர் கிடைச்சதுன்னு ஒரு பத்திரிகையில செய்தி போட்டாங்க. அமைச்சர் அந்தப் பத்திரிகை மேல வழக்குப் போடப் போறதாச் சொன்னதும், அந்தப் பத்திரிகை ஆதாரம் இல்லாம அந்தச் செய்தியைப் போட்டுட்டதாச் சொல்லி மன்னிப்புக் கேட்டுது. ஆனா, மதுசூதனன் அந்த ஆர்டரை வேண்டாம்னுட்டாரு. முதலமைச்சர், சில பெரிய தொழிலதிபர்கள் உட்படப் பல பேர் சொல்லியும், அவர் தன் முடிவை மாத்திக்கல. இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்தப்பறம், அந்த ஆர்டரை எடுத்துச் செய்ய விரும்பலைன்னு சொல்லிட்டாரு. அதனால தன் கம்பெனிக்குக் கிடைக்க வேண்டிய லாபம் கைவிட்டுப் போனதைப் பத்திக் கூட அவர் கவலைப்படல. பழிக்கு அஞ்சற ஒரு நல்ல மனிதரோட நட்பு கிடைக்கட்டும்னுதான் இந்த டெண்டர்லேந்து விலகச் சொன்னேன். அதனால நமக்குக் கிடைக்கக் கூடிய லாபம் கைநழுவிப் போனதைப் பத்தி நான் கவலைப்படல!" என்றார் சிவராம்.
"ஒரு விதத்தில, நீங்களும் மதுசூதனன் மாதிரிதான் சார் நடந்துக்கிட்டிருக்கீங்க! அவர் பழிக்கு அஞ்சி, கிடைச்ச ஆர்டரை விட்டாரு. நீங்க அவரோட நட்புக்காக, கிடைக்க வேண்டிய ஆர்டரை விட்டுட்டீங்க! ஆனா, அவர் உங்களுக்கு ஃபோன் பண்ணிப் பேசினதை வச்சு, அவரோட நட்பு உங்களுக்குக் கிடைக்கும்னு சொல்ல முடியுமா?" என்றார் பலராமன்.
"அவர் என்னை நாளைக்கு அவர் வீட்டுக்கு டின்னருக்குக் கூப்பிட்டிருக்காரே! என் மனைவியையும் அழைச்சுக்கிட்டு வரச் சொல்லி இருக்காரே!" என்றார் சிவராம், உற்சாகத்துடன்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல்
குறள் 794:
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
No comments:
Post a Comment