Sunday, June 12, 2022

792. புதிதாகக் கிடைத்த நட்பு!

சிறு வயது முதலே, மனோகருக்கு நெருக்கமான நண்பர்கள் என்று யாரும்  இருந்ததில்லை. பள்ளி, கல்லூரி நட்புகள் எல்லாம் விரைவிலேயே தேய்ந்து மறைந்து விட்டன. 

வேலை பார்த்த இடத்திலும் நீண்டகால நட்பு எதுவும் ஏற்படவில்லை.

அதனால்தானோ என்னவோ, ரவியின் நட்பு கிடைத்ததும், அவனிடம் மிகவும் நெருங்கிப் பழக ஆரம்பித்து விட்டான் மனோகர்.

ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசிய ரவியை, "வீட்டுக்கு வரீங்களா?" என்று ஒரு மரியாதைக்கு மனோகர் அழைத்தபோது, "வரியான்னு கூப்பிட்டா வருவேன். மரியாதை கொடுத்து வரீங்களான்னு கேட்டா எப்படி வருவேன்?" என்று ரவி சிரித்துக் கொண்டே கூறியபோது, அவன் தனக்கு நெருக்கமாகி விட்டதாக மனோகர் உணர்ந்தான்.

ஆனால், எதனாலோ அவன் மனைவி மாதவிக்கு ரவியைப் பிடிக்கவில்லை.

ரவி முதல் தடவை மனோகரின் வீட்டுக்கு வந்து விட்டுப் போனதுமே, "எங்கே பிடிச்சீங்க இவரை?" என்றாள் மாதவி, மனோகரிடம்.

"ஏன் அப்படிக் கேக்கற?" என்றான் மனோகர்.

"எனக்கு என்னவோ அவரைப் பிடிக்கல. இன்னிக்கு வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்ததோட போதும், இனிமே அவரோட பழகாதீங்க!"

மனோகர் மௌனமாக இருந்தான்.

சில நாட்களுக்குப் பிறகு, ரவி அவர்கள் இருவரையும் தங்கள் வீட்டுகு வரச் சொல்லிக் கூப்பிட்டதால், இருவரும் ரவியின் வீட்டுக்குச் சென்றனர். 

திரும்பி வந்ததும், "நான் நினைச்சது சரியாப் போச்சு. ரவியோட மனைவி நிர்மலா சந்தோஷமாவே இல்லை. எங்கிட்ட அவங்க சரியா கூடப் பேசல. ரவிகிட்ட ஏதோ தப்பு இருக்கு!" என்றாள் மாதவி.

மனோகர் பதில் சொல்லவில்லை. 

அதற்குப் பிறகு ரவி அவர்கள் வீட்டுக்கு வரவில்லை. ஒருவேளை மனோகர் ரவியை வெளியே எங்காவது சந்திக்கிறானோ என்னவோ! ஆனால், இதைப் பற்றி மனோகரிடம் கேட்க மாதவி விரும்பவில்லை. தானே எதற்கு ரவியைப் பற்றி மனோகருக்கு நினைவுபடுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

ருநாள், ரவி இரவில் மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்தான்.

"ஏன் இவ்வளவு லேட்? எனக்கு ரொம்பக் கவலையாயிடுச்சு!" என்று மனோகரிடம் மாதவி கேட்டபோதே, அவனிடமிருந்து மது வாடை வருவதை கவனித்தாள்.

"குடிச்சிருக்கீங்களா?" என்றாள் மாதவி, அதிர்ச்சியுடன். "இத்தனை வருஷமா உங்களுக்கு இந்தப் பழக்கமே இருந்ததில்லையே?"

மனோகர் மௌனமாக இருந்தான்.

"ரவியோட சேர்ந்துதானே குடிச்சீங்க?" என்றாள், சட்டென்று.

மனோகர் பதில் சொல்லவில்லை.

"அன்னிக்கு அவர் வீட்டுக்குப் போனபோது, அவர் மனைவியோட சோகத்தைப் பார்த்தப்பவே, இது மாதிரி ஏதாவது இருக்கும்னு நினைச்சேன். இப்ப உங்களுக்கும் பழக்கி வச்சுட்டாரா? நான் சொல்றதைக் கேளுங்க. மறுபடி அவரைப் பாக்காதீங்க. அவரோட பழகாட்டா உங்களுக்கு இந்தப் பழக்கமெல்லாம் வராது. இதுவே முதலும் கடைசியாகவும் இருக்கட்டும்!" என்றாள் மாதவி, கெஞ்சும் குரலில்.

ஆனால், அது முதலாக மட்டும்தான் இருந்தது, மனோகருக்கு ரவியுடனான நட்பும், குடிப்பழக்கமும் தொடர்ந்தன. 

மாதவி பலமுறை சொல்லிப் பார்த்து விட்டு ஓய்ந்து விட்டாள். 

சில மாதங்கள் கழித்து, மனோகரின் குடிப்பழக்கத்தால் குடும்ப்ப் பொருளாதராம் பாதிக்கப்படுவதைப் பற்றி அவள் கவலைப்பட வேண்டி இருந்தது. ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, மனோகரின் உடல்நிலை பற்றியும் கவலைப்பட வேண்டி இருந்தது.

"குடல் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கும்மா. இப்ப டிரீட்மென்ட் கொடுத்து அனுப்பறோம். இந்தப் பழக்கம் தொடர்ந்தா, உயிருக்கே ஆபத்து. ஜாக்கிரதையாப் பாத்துக்கங்க!" என்றார் டாக்டர்.

திடீரென்று ஒருநாள் மனோகர் ஏற்படுத்திக் கொண்ட நட்பு, சில வருஷங்களில் அவன் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதே என்று நினைத்தபோது, பெருகி வந்த துயரம் மாதவியின் தொண்டையை அடைத்தது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 792:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்..

பொருள்: 
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...