Wednesday, July 21, 2021

496. பெரிய வக்கீல், சின்ன வக்கீல்!

"ஊருக்குப் போன இடத்தில ஒழுங்கா இருந்துட்டு வராம, எதுக்கு அங்கே போய் கார் ஓட்டணும் இவன்? இப்பதான் ஓட்டக் கத்துக்கிட்டு, லைசன்ஸ் வாங்கி இருக்கான். அதை உடனே டெஸ்ட் பண்ணிப் பாக்கணுமா?" என்றார் வைத்திலிங்கம், கோபத்துடன்.

"அவனைக் கைது பண்ணி இருக்காங்க. அவனை ஜாமீன்ல வெளியில கொண்டு வர வழியைப் பாக்காம, அவன் மேல குத்தம் சொல்லிக்கிட்டிருக்கீங்க!" என்றாள் அவர் மனைவி ரோகிணி.

"ஜாமீன்ல வெளியில கொண்டு வரது பெரிசுல்ல. இவன் காரை மோதினது உள்ளூர்ல ஒரு பெரிய மனுஷனோட பையனோட பைக் மேல. அவன் அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்கான். போலீஸ்ல கேஸ் புக் பண்ணி இருக்காங்க. அது விசாரணைக்கு வந்து தீர்ப்பு வர வருஷக்கணக்கா ஆகும். முரளி அமெரிக்கா போய்ப் படிக்கணும்னு திட்டம் போட்டுக்கிட்டிருக்கான். அதுக்கெல்லாம் பெரிய தடங்கலா இருக்குமே இது! பார்க்கலாம். நான் உடனே கிளம்பிப் போய என்ன செய்யலாம்னு பாக்கறேன்" என்றார் வைத்திலிங்கம்.

முரளி தன் காரை சங்கர் ஓட்டிய மோட்டார் சைக்கிளின் மீது மோதிய வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒரு மாதம் தொடர்ந்து விசாரணை நடந்து, முரளியின் மீது தவறு இல்லையென்றும், சங்கரின் அஜாக்கிரதைதான் விபத்துக்குக் காரணம் என்றும் தீர்ப்பாகியது.

முரளிக்காக வாதிட்ட வழக்கறிஞர் சாந்தனின் கையைக் குலுக்கி, அவருக்கு நன்றி தெரிவித்தார் வைத்திலிங்கம்.

"என்ன சார் இது! நீங்க ஒரு சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர். நீங்களே உங்க பையனுக்காக வாதாடாம, இந்த ஊர்ல இருக்கிற ஒரு சாதாரண வக்கீலான எங்கிட்ட இந்த வழக்கைக் கொடுத்ததே பெரிய விஷயம். நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்" என்றார் சாந்தன்.

"ஆமாம். நானே உங்ககிட்ட கேட்டேன் நீங்க பதில் சொல்லல. ஏன் நீங்களே வாதாடமா, வழக்கை இந்த ஊர்ல இருக்கற ஒரு சின்ன வக்கீல் கிட்ட கொடுத்தீங்க?" என்றாள் ரோகிணி.

"நான் சுப்ரீம் கோர்ட் வக்கீல்தான். ஆனா, இது மாதிரி சின்ன கோர்ட்ல எல்லாம் வழக்கை நடத்தறது ஒரு கலை. சங்கரோட அப்பா ஒரு பெரிய மனுஷன் வேற. அதனால, தன் பையன் மேல தப்பு இல்லைன்னு நிரூபிக்க அவர் எல்லாத்தையும் செய்வாரு. அதோட, வழக்கு சீக்கிரம் முடியாம, வருஷக்கணக்கா இழுத்தடிக்கறதுக்கான வேலைகளையும் அவரால செய்ய முடியும். இதையெல்லாம் சமாளிக்க, ஒரு அனுபவமுள்ள உள்ளூர் ஆளாலதான் முடியும். நான் வழக்கை நடத்தி இருந்தா, என்னால எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்க முடியும்னு தெரியல!" என்று விளக்கினார் வைத்திலிங்கம்.

"என்னவோ, நீங்க சொல்றது எனக்குப் புரியல. ஒரு சின்ன வக்கீல் செஞ்சதை ஒரு பெரிய வக்கீல் செய்ய முடியாதா?" என்றாள் ரோகிணி, விடாமல்.

"உனக்குப் புரியணும்னா இப்படிச் சொல்றேன். கோர்ட்ல நான் பெரிய வக்கீல்களோடல்லாம் வாதாடி ஜெயிச்சிருக்கேன். ஆனா, வீட்டில உன்னோட வாதாடி என்னிக்காவது ஜெயிச்சிருக்கேனா?"

ரோகிணி பெருமை பொங்கப் புன்னகை செய்தாள் 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல்  
குறள் 496
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

பொருள்:
வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒட மாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓட மாட்டா.

Read 'Why Didn't You Argue the Case' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

Saturday, July 17, 2021

495. தலைமை அமைச்சர்!

கஜேந்திர வர்மா வியாச நாட்டின் தலைமை அமைச்சராக ஆனபோது, நாட்டின் நிர்வாகத்திலேயே பெரிய புரட்சி ஏற்பட்டு, அந்த நாடு ஒரு வல்லரசாக உருவாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது.

ஆனால், அவர் அரசாங்கத்தின் செயல்பாடு எல்லாத் துறைகளிலும் மிக மோசமாக இருந்தது. அதுவரை ஓரளவு சிறப்பாகவே இருந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்து, மிக வேகமாகக் கீழ் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

ஆயினும், நாட்டின் பல மாகாணங்களிலும் நடைபெற்ற தேர்தல்களில் வர்மாவின் வியாச மக்கள் கட்சி (வி.ம.க.) தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. இதற்குக் காரணம், வர்மாவும், அவருடைய வலதுகரமாக இருந்த அமர்நாத் என்ற அமைச்சரும் மக்களிடையே இருந்த சமுதாய வேறுபாடுகளைப் பயன்படுத்தி. அவர்களைப் பிளவுபடுத்தியதுதான் என்று பொதுவாகக் கருதப்பட்டது.

ஆயினும், பொன்னிநாடு என்ற மாகாணத்தில் மட்டும் வி.ம.க.வால் சிறிதளவு கூட மக்கள் ஆதரவைப் பெற முடியவில்லை. பல்வேறு வேறுபாடுகளுக்கிடையேயும், பொன்னிநாட்டு மக்களிடையே இருந்த சமுதாய நல்லிணக்கம், வர்மாவின் கட்சியினர் நாட்டின் பிற பகுதிகளில் செயல்படுத்திய பிரித்தாளும் உத்திகளை அங்கே எடுபடாமல் செய்து விட்டது.

பொன்னிநாட்டில் மட்டும், பொன்னி மக்கள் கட்சி (பொ.ம.க.), அனைத்துலக பொன்னி மக்கள் கட்சி (அ.பொ.ம.க.) என்ற இரண்டு வலுவான மாநிலக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. அங்கே ஆளும் கட்சியாக இருந்த அ.பொ.ம.க. செய்த முறைகேடுகளை வைத்து. அந்தக் கட்சியை மிரட்டித் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வைத்திருந்தது வி.ம.க 

டுத்த தேர்தலுக்கான நேரம் வந்து விட்டது. வி.ம.க. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஊடகங்கள் கணித்திருந்தன. 

தேர்தல் உத்தி பற்றி விவாதிக்க, வி.ம.க. வின் உயர்மட்டக் குழு கூடியது.

"நாம வெற்றி பெறப் போறது உறுதி. ஆனா, பொன்னிநாடு மட்டும் நமக்கு எதிராகத்தான் இருக்கு. அதை மாத்த முடிஞ்சா, நல்லா இருக்கும்!" என்றார் கட்சித் தலைவர் விஜய் நாயக்.

"அதுதான் எனக்கும் ஒரு குறையா இருக்கு" என்றார் கஜேந்திர வர்மா.

"எனக்கு ஒரு யோசனை தோணுது" என்றார் விஜய் நாயக்.

அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் அவரைப் பார்த்தனர்.

"நீங்க பொன்னிநாட்டில ஒரு தொகுதியிலேந்து போட்டி போட்டா, அது நம்ம கட்சிக்கு ஒரு பெரிய எழுச்சியைக் கொடுக்கும். அந்த மாகாணத்தில இருக்கற 40 தொகுதிகள்ள, நாலஞ்சு தொகுதிகள்ள நாம வெற்றி பெறலாம்."

"அது ரிஸ்க். தலைமை அமைச்சரை இது மாதிரி ரிஸ்க்குகளுக்கு உட்படுத்தக் கூடாது" என்றார் அமர்நாத்.

"என்ன பேசறீங்க அமர்நாத்? வியாச நாட்டில எந்தத் தொகுதியில நின்னாலும், வெற்றி பெறக் கூடிய ஒரே தலைவர் நம்ம தலைவர்தான். சாணக்கியர் நீங்க வேற இருக்கீங்க! அ.பொ.ம.க. ஆதரவோடதானே நாம நிக்கப் போறோம்?" என்றார் விஜய்.

"பொன்னிநாட்டு மக்கள் அ.பொ.ம.க வுக்கு எதிரான மனநிலையிலதானே இருக்காங்க?" என்றார் அமர்நாத்.

"நம்ம தலைவர் அங்கே நின்னா, அவங்களுக்கும் கூடுதல் பலமாத்தான் இருக்கும்."

"அப்ப, அவரோட பழைய தொகுதியைத் தவிர, பொன்னிநாட்டில ஒரு தொகுதியிலேயும் போட்டி போட்டடும்" என்றார் அமர்நாத்.

"தப்பு அமர்நாத். இப்பல்லாம், ரெண்டு தொகுதியில போட்டி போட்டா, மக்கள் அதை ஒரு பலவீனமாகத்தான் நினைப்பாங்க. பொன்னிநாட்டில ஒரு தொகுதியில மட்டும் போட்டி போட்டு, வெற்றியை அள்றதுதான் தலைவருக்குப் புகழைச் சேர்க்கும்" என்றார் விஜய் நாயக்.

சற்றுநேர விவாதத்துக்குப் பின், விஜய்நாயக்கின் யோசனை ஏற்கப்பட்டு, கஜேந்திர வர்மா பொன்னிநாட்டில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்ததும், விஜய் நாயக் கட்சி அலுவலகத்துக்குத் திரும்பினார். கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, விஜய் நாயக்குடன் அதே காரில் வந்த கட்சியின் துணைத்தலைவர் வசந்த் மெஹ்ரா, "நீங்க எப்படி இவ்வளவு நம்பிக்கையா இருக்கீங்கன்னு தெரியல. எனக்கு இது சரியான முடிவுதானான்னு சந்தேகமாத்தான் இருக்கு!" என்றார்.

"நான் நினைக்கறது நிச்சயமா நடக்கும். நீங்க வேணும்னா பாருங்க" என்றார் விஜய் நாயக், உற்சாகமாக.

தேர்தலில் வி.ம.க பெரும்பான்மை இடங்களைப் பெற்றது. ஆனால், கஜேந்திர வர்மா பொன்னி நாட்டில் அவர் போட்டியிட்ட தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதனால், வி.ம.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறொரு நபரைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் தலைமை அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

கஜேந்திர வர்மாவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டாதாக ஊடகங்கள் கருத்துக் கூறின.

வி.ம.க.வின் தலைமை அலுவலகத்தில், வசந்த் மெஹ்ரா, விஜய் நாயக்குடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

"அவ்வளவு நம்பிக்கையா சொன்னீங்களே! என்ன ஆச்சு பாத்தீங்களா?" என்றார் வசந்த் மெஹ்ரா.

"நான் நினைக்கறது நடக்கும்னு சொன்னேன். அதான் நடந்திருக்கு!" என்றார் விஜய் நாயக் சிரித்தபடி.

"என்ன சொல்றீங்க?"

"கஜேந்திர வர்மாவோட ஆட்சி சரியாயில்லேன்னு நம்ம எல்லோருக்குமே தெரியும். ஆனா, அவரும் அமர்நாத்தும் சில உத்திகளைப் பயன்படுத்தி, ஜெயிச்சுக்கிட்டே வந்தாங்க. அவருக்கு பதிலா, நல்லா ஆட்சி செய்யக் கூடிய ஒத்தர் பதவிக்கு வந்தாதான் நாட்டுக்கும் நல்லது, நம்ம கட்சிக்கும் நல்லது.

"ஆனா, பலமா இருந்த அவரை மாத்த, நம்மால முயற்சியே எடுக்க முடியாத நிலை இருந்தது. நாட்டில பல பகுதிகள்ள, சில உத்திகளைப் பயன்படுத்தி, அவரால ஜெயிக்க முடிஞ்சது. ஆனா, பொன்னிநாடு மாதிரி சில பகுதிகள்ள அவரோட உத்தி எடுபடல. 

"தான் பலவீனமா இருக்கற ஒரு இடத்தில, எந்தத் தலைவரும் நின்னு தனக்கே அழிவைத் தேடிக்க மாட்டாரு. வர்மாவுக்கு அது அவசியமும் இல்ல. ஆனா, தொடர்ந்து கிடைச்ச வெற்றிகளால, வர்மாவுக்கு ஏற்பட்டிருந்த ஆணவமும், பொன்னிநாட்டில அவர் உத்திகள் பலிக்கலேங்கற ஆத்திரமும் சேர்ந்து, அவரை இந்த அடிப்படையான விஷயத்தைப் புரிஞ்சுக்க முடியாம செஞ்சுடுச்சு.

"அவரோட வியூக வகுப்பாளர் அமர்நாத்துக்கு இது ஓரளவுக்குப் புரிஞ்சுது. ஆனா, வர்மாகிட்ட உண்மையை தைரியமா பேசற தைரியம் அவருக்குக் கிடையாது. அதனால, முதல்ல கொஞ்சம் ஆட்சேபிச்சுட்டு, அப்புறம் பேசாம இருந்துட்டாரு.

" வர்மா நான் விரிச்ச வலையில விழுந்திட்டாரு. முதலையைக் கரையில ஏற வச்சு, அதை அழிக்கிற மாதிரி, வர்மாவோட ஈகோவைப் பயன்படுத்தி, அவரை ஒரு ஆபத்தை ஏத்துக்க வச்சு, அவர் கதையை முடிச்சுட்டேன். இப்ப ஒரு நல்ல தலைவர் நமக்குக் கிடைச்சிருக்காரு. இது நம்ம கட்சிக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது!" 

விஜய் நாயக்கின் விளக்கத்தைக் கேட்ட வசந்த் மெஹ்ரா, 'வர்மாவுக்கு ஆதரவா இருக்கற மாதிரி காட்டிக்கிட்டே, அவரைக் கவுத்துட்டாரே! என்ன இருந்தாலும் பழம் தின்னுக் கொட்டை போட்ட அனுபவசாலியாச்சே! இவர்கிட்ட நான் நிறைய கத்துக்கணும். கவனமாவும் இருக்கணும்!" என்று நினைத்துக் கொண்டார். 

 பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல் 
குறள் 495 
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

பொருள்:
ஆழமுள்ள நீரில், முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகி வந்தால், அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்.

Read 'The Invincible Leader' the English version of this story by the same author.
                                                                  குறள் 496 
                                            குறள் 494                                                           
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Friday, July 16, 2021

494. கௌரவ டைரக்டர்!

"எனக்கு உங்களை முன்னே பின்னே தெரியாது. நான் எப்படி உங்க கம்பெனியில டைரக்டரா இருக்க ஒத்துக்க முடியும்?" என்றார் மருதமுத்து.

"சார்! நான் அஞ்சு வருஷமா இந்த பிசினஸை நடத்திக்கிட்டு வரேன். பிரைவேட் லிமிடட் கம்பெனியாத்தான் ஆரம்பிச்சேன். இந்த அஞ்சு வருஷத்தில, மார்க்கெட்ல எனக்கு நல்ல பேரு கிடைச்சு, என் கம்பெனி பெரிசா வளர்ந்துடுச்சு. டர்ன் ஓவர் அதிகமாப் போனதால, இப்ப டீம்ட் பப்ளிக் லிமிடட் கம்பெனியா ஆயிடுச்சு. என் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் இதில டைரக்டர்கள். வெளியாட்கள் யாரும் இதல முதலீடு செய்யல. நான் பப்ளிக் இஷ்யூ எதுக்கும் போகப் போறதில்ல. எனக்கு பாங்க் லோன் எதுவும் கிடையாது. என் பாங்க்ல நீங்க என்னைப் பத்தி விசாரிச்சுக்கலாம். மார்க்கெட்லேயும் விசாரிச்சுக்கலாம். கம்பெனியோட அஞ்சு வருஷம் பாலன்ஸ் ஷீட் கொண்டு வந்திருக்கேன். உங்க நிறுவனத்தில இருக்கற நிபுணர்களை இதைப் பாக்க சொல்லுங்க. எங்ககிட்ட தப்பா எந்த விஷயமும் கிடையாது" என்றான் அரவிந்தன்.

"அதெல்லாம் சரிதான். நான் எதுக்கு உங்க நிறுவனத்தில கௌரவ டைரக்டரா சேரணும்? இதனால உங்களுக்கு என்ன லாபம். இல்ல, எனக்குத்தான் என்ன லாபம்?"

"சார்! உங்களுக்கு எந்த லாபமும் இல்ல. உங்களால முடிஞ்சப்ப, வருஷத்துக்கு ஒரு தடவையோ ரெண்டு தடவையோ போர்டு மீட்டிங்குக்கு நீங்க வந்தா போதும். எங்களுக்காக வருஷத்தில ரெண்டு மணி நேரமோ, மூணு மணி நேரமோ நீங்க செலவழிக்க வேண்டி இருக்கும். இது உங்களுக்கு ஒரு சின்ன சுமைதான், ஆனாலும் சுமைதான். எங்களுக்கு என்ன பயன்னு கேட்டா, உங்க அசோசியேஷன்தான். நான் உங்க வளர்ச்சியைப் பல வருஷங்களா கவனிச்சுக்கிட்டே வரேன். நீங்க எனக்கு ஒரு ரோல் மாடல். நீங்க என் கம்பெனியில டைரக்டரா இருக்கணுங்கறது, முழுக்க முழுக்க என்னோட சுயநலமான விருப்பம்தான். உங்ககிட்ட வெளிப்படையா சொல்லிட்டேன். நீங்கதான் ஒரு நல்ல முடிவைச் சொல்லணும்."

"சாரி, அரவிந்தன். உங்க தொழிலுக்கும் என் தொழிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கூடுதலா ஒரு பொறுப்பை நான் ஏத்துக்க விரும்பல. ஐ ஆம் சாரி" என்றார் மருதமுத்து.

ஆனால் அரவிந்தன் விடவில்லை. இன்னும் இரண்டு முறை அவரைச் சென்று பார்த்தான். ஒவ்வொரு முறையும், தன் நிறுவனத்தின் பொது மேலாளர் செல்வாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.

 ஆனால், மருதமுத்து தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

"சாரி சார்! இனிமேல் உங்களை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்!" என்றான் அரவிந்தன், மூன்றாவது முறை அவரைப் பார்த்தபோது.

"பரவாயில்லை. உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்க எனக்கு அறிமுகம் ஆயிட்டதால, நீங்க எப்ப வேணும்னா என்னை வந்து பார்க்கலாம். ஆனா இந்த டாபிக் மட்டும் வேண்டாம்!" என்றார் மருதமுத்து, சிரித்தபடி.

"நிச்சயமா இதைப் பத்தி இனிமே நான் பேச மாட்டேன். உங்க அறிமுகம் எனக்குக் கிடைச்சதே எனக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம்தான்!" என்று சொல்லி விடைபெற்றான் அரவிந்தன்.

ருதமுத்துவைப் பார்த்து விட்டுத் திரும்பியதும், அரவிந்தனின் அறைக்கு வந்த செல்வா, "சார்! உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்" என்றார்.

"நீங்க என்ன கேக்கப் போறீங்கன்னு தெரியும். அதுக்கு முன்னால, நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும். நம்மகிட்ட வேலை செஞ்ச எஞ்சினியர் சுகுமார் எப்படி இருக்கான்?"

"தெரியலியே சார்! ஏன் கேக்கறீங்க? அவன் மோசடி பண்ணினான்னுதானே, நாம வேலையை விட்டுத் தூக்கினோம்? அவனுக்கு வேற எங்கேயும் வேலை கிடைக்கலேன்னு நினைக்கிறேன்" என்றார் செல்வா, ஏன் அரவிந்தன் இதைப் பற்றிக் கேட்கிறான் என்று புரியாமல்.

"இல்லை. நம்ம போட்டியாளர் சபேசன் இண்டஸ்ட்ரீஸ், அவனை வச்சுக்கிட்டு, நம்ம தொழில்நுட்பத்தைத் திருட்டுத்தனமாப் பயன்படுத்தத் திட்டம் போட்டுக்கிட்டிருக்கறதா, நீங்கதானே எங்கிட்ட சொன்னீங்க?"

"ஆமாம் சார்! சுகுமாரே இதை நம்ம ஊழியர்கள்ள ஒத்தர்கிட்ட சொல்லி, நம்மைப் பழி வாங்கப் போறதா சொல்லிக்கிட்டிருந்தான். சபேசன் இண்டஸ்ட்ரீஸ் இப்ப அந்த எண்ணத்தைக் கைவிட்டுட்டாங்கன்னு தோணுது. சுகுமார் மறுபடி அவங்களைப் பாக்கப் போனப்ப, அவங்க எம் டி சபேசன் அவனைப் பாக்கவே இல்லையாம். அவனை இனிமே அங்கே வர வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். என்ன ஆச்சுன்னே தெரியலேன்னு சுகுமார் புலம்பிக்கிட்டே இருக்கானாம். ஆமாம். இதையெல்லாம் எதுக்குக் கேக்கறீங்க?"

அரவிந்தன் உற்சாகமாகச் சிரித்தபடி, "சரி, இப்ப நீங்க கேக்க வந்ததைக் கேளுங்க!" என்றான்.

இவர் ஏன் தலைப்பை மாற்றிக்கொண்டே இருக்கிறார் என்று குழம்பிய செல்வா, "இல்ல, மருதமுத்து நம்ப கம்பெனியில டைரக்டரா இருக்க ஒத்துக்க மாட்டாரு, அவரு டைரக்டரா இருக்கறதால நமக்கு எந்தப் பிரயோசனமும் இல்லேங்கறப்ப, ஏன் அவர்கிட்ட திரும்பத் திரும்ப டைரக்டரா இருக்கச் சொல்லிக் கேட்டீங்கன்னு எனக்குப் புரியல" என்றார்.

"சுகுமாரைச் சேத்துக்கிட்டு, சபேசன் நமக்கு எதிரா செயல்படறாருன்னு நீங்க சொன்னதும், அதை எப்படி சமாளிக்கறதுன்னு யோசிச்சேன். அவங்க திருட்டுத்தனமா நம்ம தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தறதை நம்மால தடுக்கவும் முடியாது. அதை நிரூபிச்சு, அவங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடியாது. அப்பதான், சபேசன் ஆரம்பக் காலத்தில மருதமுத்துகிட்ட வேலை செஞ்சிருக்கார்னும், மருதமுத்து அவருக்கு வழிகாட்டின்னும், அவர் தொழில் ஆரம்பிக்கக் கூட மருதமுத்து உதவி இருக்கார்னும் தெரிய வந்தது. அதனால, மருதமுத்து நமக்கு நெருக்கமானவர்னு காட்டிக்கிட்டா, சபேசன் நம்மகிட்ட வாலாட்ட மாட்டார்னு நினைச்சுத்தான், மருதமுத்துவை மூணு தடவை பாத்து, மருதமுத்து நமக்கு நெருக்கமானவர்னு காட்டிக்கிட்டேன். சபேசன் நம்மை எப்பவும் கவனிச்சுக்கிட்டிருக்கிறதால, இந்தத் தகவல் அவருக்குப் போகும்னு எனக்குத் தெரியும். ஆனா மருதமுத்துகிட்ட நாம என்ன பேசினோம்னு சபேசனுக்குத் தெரியாது. அவரால இதைப் பத்தி மருதமுத்துகிட்ட நேரடியா கேக்கவும் முடியாது. நான் எதிர்பார்த்த மாதிரியே, மருதமுத்து நமக்கு நெருக்கமானவர்னு நினைச்சு, சபேசன் பின்வாங்கிட்டாரு. மருதமுத்து நம்ம கம்பெனியில டைரக்டர் ஆக ஒத்துக்க மாட்டார்னு தெரிஞ்சும், அவரைத் திரும்பத் திரும்பப் பாத்து கேட்டது இதுக்காகத்தான்" என்றான் அரவிந்தன். 

"ரொம்ப எளிமையான, ஆனா அற்புதமான ஸ்ட்ராஜடி சார்! ஒரு கட்டத்தில கௌரவ டைரக்டரா ஆக அவர் ஒத்துப்பாரோன்னு கூட நான் நினைச்சேன்" என்றார் செல்வா.

"ஒரு விதத்தில, மூணு மாசத்துக்கு மருதமுத்து நம்ம கம்பெனியோட கௌரவ டைரக்டரா இருந்து, நமக்குப் பெரிய உதவி செஞ்சிருக்காருன்னுதான் சொல்லணும்!" என்றான் அரவிந்தன், சிரித்தபடி. 

அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல்  
குறள் 494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

பொருள்:
ஒருவர் தக்க இடத்தை அறிந்து, பொருத்தமான விதத்தில் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர், தம் எண்ணத்தை இழந்து விடுவர்.

Read 'Honorary Director' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

Sunday, July 11, 2021

493. பாதுகாப்பான ஒரு இடம்!

"நீயும் நல்லதம்பியும் ஒரே சமயத்திலதான் இந்த நிறுவனத்தில வேலைக்குச் சேர்ந்தீங்க. ஆனா, அவன் உன்னை முந்திக்கிட்டு மேல போயிட்டானே!" என்றான் முத்து, செந்திலிடம். இருவரும் ஒரே நிறுவனத்தில், வெவ்வேறு பிரிவில் பணியாற்றுபவர்கள்.

"என்னை அவன் முறையா முந்திக்கிட்டுப் போயிருந்தா, என்னை விட அவன் திறமையானவன்னு நினைச்சு, நான் பேசாம இருந்திருப்பேன். ஒவ்வொரு தடவையும் ஒரு சூழ்ச்சி பண்ணி, என்னைக் கீழே அழுத்திட்டுல்ல, அவன் மேல போய்க்கிட்டிருக்கான்? அதுதான் எனக்கு ஆத்திரமா இருக்கு" என்றான் செந்தில்.

"அவன் சூழ்ச்சி பண்ணி உன்னை அழுத்தினான்னா, அதுக்கு நீ இடம் கொடுத்தேன்னுதானே அர்த்தம்?"

"உண்மைதான். அவன் அடுத்தவங்களைக் கீழே தள்ளிட்டு, அவங்களையே படிக்கட்டாப் பயன்படுத்தி மேலே போவான். என்னால அப்படிச் செய்ய முடியாது. அந்த விதத்தில நான் பலவீனமானவன்தான். மூணு வருஷமா, அவன் நம்ப துணை நிறுவனத்துக்கு மானேஜராப் போயிருந்தான்னு கொஞ்சம் நிம்மதியா இருந்தேன். இப்ப, அவன் திரும்பி வந்துட்டான். இப்ப அவனுக்குக் கீழ நான் வேலை செய்யணும். இந்த நிலையில, என்னால அவனைச் சமாளிக்க முடியாது" என்றான் செந்தில், யோசனையுடன்.

"என்ன செய்யப் போற? வேற வேலைக்கு முயற்சி செய்யப் போறியா?"

"இது ஒரு நல்ல நிறுவனம். நல்லதம்பிக்கு பயந்து, இந்த நல்ல நிறுவனத்தை விட்டு நான் ஏன் போகணும்? அதுவும் என்னோட உழைப்பாலயும், திறமையாலயும், நான் நல்ல பேரு வாங்கி இருக்கறப்ப? எனக்கு வேற ஒரு யோசனை இருக்கு."

"என்ன?"

"நம்ப துணை நிறுவனத்திலேயே ஒரு பொறுப்பு காலியா இருக்கு. அங்கே போகலாம்னு பாக்கறேன்."

"நல்லதம்பி பார்த்த அதே மானேஜர் வேலைக்கா?"

"இல்லை. அங்கே துணை மானேஜரா இருந்த ரகுவையே மானேஜராப் போட்டுட்டாங்க. இப்ப, துணை மானேஜர் வேலைதான் காலியா இருக்கு. நான் முயற்சி பண்ணினா, அது எனக்குக் கிடைக்கும்."

"அது உனக்கு நல்லதா?"

"தெரியல. இப்போதைக்கு, நல்லதம்பிகிட்டேந்து என்னைக் காப்பாத்திக்கறதுக்கு வேற வழி தெரியல."

"யோசிச்சு செய்!" என்றான் காளிமுத்து.

"யோசிச்சுட்டேன்" என்றான் செந்தில்.

று மாதங்களுக்குப் பிறகு, துணை நிறுவனத்தில் நடந்த தணிக்கையில் நல்லதம்பி செய்த சில முறைகேடுகள் வெளிப்பட்டன. அதைத் தொடர்ந்து நல்லதம்பி வேலையிலிருந்து நீக்கப்பட்டான். 

அப்போது துணை மானேஜராக இருந்து, பிறகு மானேஜராகப் பதவி உயர்த்தப்பட்ட ரகு, நல்லதம்பியின் முறைகேடுகளுக்குக் கண்மூடித்தனமாகத் துணைபோனதாகவும், தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

ஆயினும், ரகு தெரிந்தே அந்த முறைகேடுகளில் ஈடுபடவில்லை என்பதாலும், நல்லதம்பியால் தவறாக வழிநடத்தப்பட்டான் என்பதாலும், அவனுக்கு தண்டனை அளிக்கப்படாமல், அவன் எச்சரிக்கை செய்யப்பட்டு, துணை மானேஜராகப் பதவி இறக்கம் செய்யப்பட்டான்.

தணிக்கையாளர்கள் முறைகேடுகளைக் கண்டுபிடிக்க உதவியதற்காக, செந்தில் பாராட்டுப் பெற்று, மானேஜராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டான்.

"கங்கிராட்ஸ் செந்தில்! உன் எதிரி ஒழிஞ்சான். நல்லதம்பிகிட்டேந்து தப்பிக்,க நீ துணை நிறுவனத்தில ஒரு பொறுப்பை எடுத்துக்கிட்டது, தற்செயலா உனக்கு நன்மையா முடிஞ்சுடுச்சே!" என்றான் காளிமுத்து.

"தற்செயல் இல்லை, தன் செயல், அதாவது என் செயல்தான் இது!" என்றான் செந்தில், சிரித்தபடி.

"உன் செயலா? எப்படி?"

"நல்லதம்பி அவ்வளவு கை சுத்தமானவன் இல்லேன்னு எனக்குத் தெரியும். துணை நிறுவனத்தோட மானேஜர்ங்கறது தனிக்காட்டு ராஜா மாதிரி. அங்கே அவன் முறைகேடா ஏதாவது செஞ்சிருப்பான்னு எனக்குத் தெரியும். ரகு ஒரு அப்பாவி, அதோட விஷயம் தெரியாதவன், நல்லதம்பியால அவனை சுலபமா ஆட்டி வைக்க முடியும்னு எனக்குத் தெரியும். தன் தவறுகள் வெளியில வரக்கூடாதுங்கறதுக்காகத்தான், நல்லதம்பி, தான் அந்தப் பதவியை விட்டு வரும்போதே, மானேஜ்மென்ட்ல சொல்லி, ரகுவை மானேஜரா ஆக்கிட்டு வந்தான்.

"என்னைக் காப்பாத்திக்கத்தான், நான் நல்லதம்பிகிட்டேந்து தூரமா இருக்கணும்னு நினைச்சு அங்கே போனேன். நான் எதிர்பார்த்ததை விட, நிறைய முறைகேடுகள் அங்கே நடந்திருந்தது. நான்தான் ஆடிட்டர்களுக்கு எல்லா விவரங்களையும் எடுத்துக் கொடுத்து, நல்லதம்பியை மாட்ட வச்சேன். ரகு அப்பாவிங்கறதால, ஆடிட்டர்கள்கிட்டேயும், மானேஜ்மென்ட்கிட்டேயும் சொல்லி, அவன் வேலை போகாம காப்பாத்தினேன். இத்தனை வருஷமா என்னை வேட்டையாடிக்கிட்டிருந்த ஒரு எதிரியை ஒழிச்சட்டதில, இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு" என்றான் செந்தில்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல் 
குறள் 493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

பொருள்:
தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக் கொண்டு, பகைவருடன் மோதினால், வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

Read 'A Safe Place for Senthil' the English version of this story by the same author.
                                   குறள் 492                                    
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Friday, July 9, 2021

492. வளர்த்த கடா!

"என்னங்க, இவ்வளவு வருஷமா எவ்வளவோ பாடுபட்டுக் கட்சியை வளர்த்தவரு நீங்க. வளர்த்த கடா மார்ல பாய்ஞ்ச மாதிரி, நீங்க வளர்த்த அந்த இளங்கோ, உங்களையே கட்சித் தலைவர் பதிவியிலேருந்து தூக்கிட்டானே!" என்றான் சண்முகம். 

"முதுகுல குத்தறது அரசியல்ல ரொம்ப சகஜமாச்சே! கட்சிக்கு ஒரு நல்ல தலைவனா வருவான்னு நினைச்சுத்தான், பல மூத்த தலைவர்களோட எதிர்ப்பையும் மீறி, அவனை வளர்த்து விட்டேன். நீ சொன்ன மாதிரி, நான் வளர்த்த கடா என் மார்பிலேயே பாஞ்சுடுச்சு" என்றார் வேலாயுதம், விரக்தியுடன்.

"என்னங்க இது அக்கிரமம்! நம்ப கட்சிக்கு அடையாளமா இருக்கற உங்களை, பொதுக்குழுவில தீர்மானம் போட்டு நீக்கிட்டாங்கங்கறதை ஏத்துக்கவே முடியல!" என்றான் ராமு என்ற இன்னொரு விசுவாசி.

"வரப்போற தேர்தல்ல, நம்ம கட்சிதான் ஜெயிக்கப் போகுது. அப்படி ஜெயிச்சா, நீங்கதான் முதல்வரா வருவீங்க. அதைத் தடுக்கறதுக்காகத்தான், சில மூத்த தலைவர்களோட சேர்ந்து சதி பண்ணி, நீங்க வெளிநாடு போயிருந்தப்ப அவசரமாப் பொதுக்குழுவைக் கூட்டி, உங்களை நீக்கி இருக்கான் இளங்கோ. அப்படியும், கூட்டத்தில கலந்துக்கிட்ட 96 உறுப்பினர்கள்ள, 46 பேரு உங்களுக்கு ஆதரவாத்தான் ஓட்டுப் போட்டிருக்காங்க. கட்சித் தொண்டர்கள் ஆதரவு உங்களுக்குத்தான். அவனால எதுவும் செய்ய முடியாது" என்றார் அன்பு என்ற மூத்த தலைவர்.

"இல்லை அன்பு. இளங்கோ கட்சியில தன் கை ஓங்கிட்டதா ஒரு பிம்பத்தை உருவாக்கிட்டான். ஜெயிச்சவன் பின்னாலதான் பல பேர் போவாங்க. இது உலக இயற்கை. அரசியல்ல இது இன்னும் அதிகமாவே நடக்கும்! நாம கவனமா இல்லேன்னா, நம்மளை ஒண்ணுமில்லாம ஆக்கிடுவாங்க. தொண்டர்கள் நம்ம பக்கம் இருந்தாலும், கட்சி அவன் கட்டுப்பாட்டில இருந்தா, நம்மால எதுவும் செய்ய முடியாது" என்றார் வேலாயுதம்.

"இப்ப என்ன செய்யப் போறீங்க?"

"கட்சியில பிளவு ஏற்பட்டுடுச்சு. பெரும்பாலான தொண்டர்கள் நம்ம பக்கம்தான் இருக்காங்க, அதனால, கட்சியோட சின்னத்தை நமக்குத்தான் கொடுக்கணும்னு கேட்டு, நாம தேர்தல் ஆணையத்தில மனு கொடுக்கலாம். தேர்தல் ஆணையம் உடனே முடிவெடுக்காம, சின்னத்தை முடக்கி, நம்ம ரெண்டு பிரிவுகளுக்குமே வேற சின்னத்தைக் கொடுப்பாங்க. அப்ப  மக்கள் ஆதரவோட, நம்மால தேர்தல்ல வெற்றி பெற முடியும். இளங்கோவன் ஒண்ணுமில்லாம போயிடுவான்.

"ஆனா, அவனுக்கு ஒன்றியத்தில ஆளும் கட்சியோட ஆதரவு இருக்கு. அதனால, ஒருவேளை தேர்தல் ஆணையம் பொதுக்குழுவிலேயே என்னை நீக்கிட்டாங்கங்கறதை வச்சு, சின்னத்தை அவனுக்குக் கொடுக்கலாம். சின்னம் அவங்கிட்ட இருந்தா, அது அவனுக்கு சாதகமாப் போயிடும். என்னதான் மக்கள் ஆதரவு அவனை விட நமக்கு அதிகமா இருந்தாலும், சின்னத்தைப் பாத்து ஓட்டுப் போடறவங்க நிறைய பேரு இருக்கறதால, அவன் தேர்தல்ல நம்மை விட அதிக இடங்கள்ள வெற்றிபெற வாய்ப்பு இருக்கு. ஏன், ஒன்றியத்தில ஆளும் கட்சியோட ஆதரவு இருக்கறதால, தேர்தல்ல வெற்றி பெற்று, அவன் ஆட்சியைப் பிடிச்சாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல!" என்றார் வேலாயுதம்.

"அப்படின்னா, நாம என்ன செய்யப் போறோம்?" என்றான் சண்முகம், கவலையுடன்.

"பார்க்கலாம். தேர்தலுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு. தேர்தல் ஆணையம் என்ன முடிவு செய்யுதுன்னு பார்க்கலாம். ஒருவேளை சின்னத்தை அவனுக்குக் கொடுத்துட்டாங்கன்னா, நாம பெரிய சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்."

வேலாயுதம் பயந்தபடியே, தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னத்தை இளங்கோவின் பிரிவுக்கு வழங்கி விட்டது. 

வேலாயுதம் தன் ஆதரவாளர்களின் கூட்டத்தை அழைத்தார்.

"நான் பயந்தபடியே ஆயிடுச்சு. ஒன்றியத்தில் ஆளும் கட்சியோடு இளங்கோ கூட்டணி வச்சுக்கப் போறான். ஏகப்பட்ட பணம் செலவழிச்சு, எல்லாவிதத் தில்லுமுல்லுகளையும் பண்ணி, அவன் ஜெயிக்கப் பார்ப்பான். ஒருவேளை அவன் வெற்றி பெற்று, முதல்வர் ஆயிட்டா, நம்மளை மொத்தமா ஒழிச்சுடுவான். இதைத் தடுக்க ஒரு வழிதான் இருக்கு!" என்று சொல்லி நிறுத்தினார் வேலாயுதம்.

"என்ன வழி?"

வேலாயுதம் சற்றுத் தயங்கி விட்டு, "முதல்வர் தன்னோட தூதூவர் ஒத்தர் மூலமா, எனக்கு ஒரு செய்தி அனுப்பி இருக்காரு. அவர் கட்சியோட நாம கூட்டணி வச்சுக்கிட்டா, நமக்கு 40 சதவீத இடங்கள் கொடுக்கறதாகவும், துணை முதல்வர் பதவி, மற்றும் 10 அமைச்சர் பதவிகள் நமக்குக் கொடுக்கறதாகவும் சொல்லி இருக்காரு. என்ன சொல்றீங்க? இதை ஏத்துக்கலாமா?" என்றார்.

"என்னங்க இது? நாம தனியாப் போட்டி போட்டே ஆட்சியைப் பிடிக்கிற நிலையில இருந்தோம். நாம கடுமையா எதிர்த்த கட்சியோட கூட்டணி வச்சுக்கிட்டு, அவங்களோட ஜுனியர் பார்ட்னரா சேர்ந்து, இதுக்கு முன்னால முதல்வரா இருந்த நீங்க, துணை முதல்வரா இருக்க ஒத்துக்கிட்டு... இதை எப்படிங்க ஏத்துக்க முடியும்?" என்றார் அன்பு.

"என்னதான் நமக்கு அரசியல் அனுபவம், மக்கள் செல்வாக்கு, திறமை எல்லாம் இருந்தாலும், நம்ம எதிரியை நாம குறைச்சு மதிப்பிடக் கூடாது. இளங்கோ முதல்வரானா, நாம ஒழிஞ்சோம். அதைத் தடுக்க, இது ஒண்ணுதான் வழி. முதல்வர் கட்சியோட நாம கூட்டு சேர்ந்தா, நம்ம கூட்டணி பெரிய வெற்றி பெறும். அப்புறம், இளங்கோ ஒண்ணுமில்லாம போயிடுவான். நான் துணைமுதல்வரா ஆகப் போறதில்ல. அன்புதான் துணை முதல்வர். நான் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்ங்கற முக்கிய பொறுப்பில இருப்பேன்னு சொல்லப் போறேன். முதல்வர் அதுக்கு ஒத்துப்பார். அவருக்கு வேற வழியில்லை. அதனால, கடிவாளம் நம் கையிலதான் இருக்கும். என்ன சொல்றீங்க?" என்றார் வேலாயுதம்.

அனைவரும் ஆரவாரமாகக் கைதட்டி, வேலாயுதத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல்  
குறள் 492
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.

பொருள்:
பகைவர்கள் உள்ளவர்கள் ஆற்றல் மிகுந்தவர்களாக இருந்தாலும், பாதுகாப்பான இடத்தில் இருப்பது பல பயன்களையும் தரும்.

Read 'The Calf That Kicked the Master' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...