"ஊருக்குப் போன இடத்தில ஒழுங்கா இருந்துட்டு வராம, எதுக்கு அங்கே போய் கார் ஓட்டணும் இவன்? இப்பதான் ஓட்டக் கத்துக்கிட்டு, லைசன்ஸ் வாங்கி இருக்கான். அதை உடனே டெஸ்ட் பண்ணிப் பாக்கணுமா?" என்றார் வைத்திலிங்கம், கோபத்துடன்.
"அவனைக் கைது பண்ணி இருக்காங்க. அவனை ஜாமீன்ல வெளியில கொண்டு வர வழியைப் பாக்காம, அவன் மேல குத்தம் சொல்லிக்கிட்டிருக்கீங்க!" என்றாள் அவர் மனைவி ரோகிணி.
"ஜாமீன்ல வெளியில கொண்டு வரது பெரிசுல்ல. இவன் காரை மோதினது உள்ளூர்ல ஒரு பெரிய மனுஷனோட பையனோட பைக் மேல. அவன் அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்கான். போலீஸ்ல கேஸ் புக் பண்ணி இருக்காங்க. அது விசாரணைக்கு வந்து தீர்ப்பு வர வருஷக்கணக்கா ஆகும். முரளி அமெரிக்கா போய்ப் படிக்கணும்னு திட்டம் போட்டுக்கிட்டிருக்கான். அதுக்கெல்லாம் பெரிய தடங்கலா இருக்குமே இது! பார்க்கலாம். நான் உடனே கிளம்பி வரேன்" என்றார் வைத்திலிங்கம்.
முரளி தன் காரை சங்கர் ஓட்டிய மோட்டார் சைக்கிளின் மீது மோதிய வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒரு மாதம் தொடர்ந்து விசாரணை நடந்து, முரளியின் மீது தவறு இல்லையென்றும், சங்கரின் அஜாக்கிரதைதான் விபத்துக்குக் காரணம் என்றும் தீர்ப்பாகியது.
முரளிக்காக வாதிட்ட வழக்கறிஞர் சாந்தனின் கையைக் குலுக்கி, அவருக்கு நன்றி தெரிவித்தார் வைத்திலிங்கம்.
"என்ன சார் இது! நீங்க ஒரு சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர். நீங்களே உங்க பையனுக்காக வாதாடாம, இந்த ஊர்ல இருக்கிற ஒரு சாதாரண வக்கீலான எங்கிட்ட இந்த வழக்கைக் கொடுத்ததே பெரிய விஷயம். நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்" என்றார் சாந்தன்.
"ஆமாம். நானே உங்ககிட்ட கேட்டேன் நீங்க பதில் சொல்லல. ஏன் நீங்களே வாதாடமா, வழக்கை இந்த ஊர்ல இருக்கற ஒரு சின்ன வக்கீல் கிட்ட கொடுத்தீங்க?" என்றாள் ரோகிணி.
"நான் சுப்ரீம் கோர்ட் வக்கீல்தான். ஆனா, இது மாதிரி சின்ன கோர்ட்ல எல்லாம் வழக்கை நடத்தறது ஒரு கலை. சங்கரோட அப்பா ஒரு பெரிய மனுஷன் வேற. அதனால, தன் பையன் மேல தப்பு இல்லைன்னு நிரூபிக்க அவர் எல்லாத்தையும் செய்வாரு. அதோட, வழக்கு சீக்கிரம் முடியாம, வருஷக்கணக்கா இழுத்தடிக்கறதுக்கான வேலைகளையும் அவரால செய்ய முடியும். இதையெல்லாம் சமாளிக்க, ஒரு அனுபவமுள்ள உள்ளூர் ஆளாலதான் முடியும். நான் வழக்கை நடத்தி இருந்தா, என்னால எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்க முடியும்னு தெரியல!" என்று விளக்கினார் வைத்திலிங்கம்.
"என்னவோ, நீங்க சொல்றது எனக்குப் புரியல. ஒரு சின்ன வக்கீல் செஞ்சதை ஒரு பெரிய வக்கீல் செய்ய முடியாதா?" என்றாள் ரோகிணி, விடாமல்.
"உனக்குப் புரியணும்னா இப்படிச் சொல்றேன். கோர்ட்ல நான் பெரிய வக்கீல்களோடல்லாம் வாதாடி ஜெயிச்சிருக்கேன். ஆனா, வீட்டில உன்னோட வாதாடி என்னிக்காவது ஜெயிச்சிருக்கேனா?"
ரோகிணி பெருமை பொங்கப் புன்னகை செய்தாள்
No comments:
Post a Comment