"நீங்க இது மட்டும் எத்தனையோ பொதுநல வழக்குகள் போட்டிருக்கீங்க. எத்தனையோ ஊழல்களை வெளியில கொண்டு வந்திருக்கீங்க. ஆனா இப்ப நீங்க இறங்கி இருக்கிறது ஒரு ஆபத்தான வேலை" என்றார் சகாயம்.
"எந்த விதத்தில?" என்றார் ராமசாமி.
"என்னங்க இப்படிக் கேக்கறீங்க? தொழிலதிபர் வேலுச்சாமியைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? அவருக்கு அரசியல் செல்வாக்கு நிறைய இருக்கு. அதனாலதான் நேர்மையான அதிகாரிகள் கூட அவர் அவர் மேல நடவடிக்கை எடுக்காம இருக்காங்க. வேலுச்சாமி கொலை செய்யக் கூடத் தயங்க மாட்டார்ங்கறது உங்களுக்குத் தெரியாதா? அவர் தொடங்கப்போற தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கக் கூடாதுன்னு பொதுநல வழக்குப் போடப் போறேன்னு சொல்றீங்களே! உங்களை அவர் சும்மா விட்டுடுவாரா?"
"எதிர்க்கட்சிக்காரங்க அவர் மேல பல குற்றச்சாட்டுக்களைச் சொல்லி இருக்காங்களே! அவங்களை அவர் எதுவும் செய்யலியே?"
"எதிர்க்கட்சிக்காரங்க பொதுப்படையாப் பேசுவாங்க. உங்களை மாதிரி ஆதாரங்களையெல்லாம் சேகரிச்சு வச்சுக்கிட்டு அவங்க பேசறது இல்ல. அதனால பெரும்பாலும் அதை யாருமே பெரிசு படுத்த மாட்டாங்க. வேலுச்சாமியும், இதெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கள், எனக்குக் கெட்ட பெயர் உண்டாக்கணுங்கறதுக்காக சில பேர் பரப்புகிற பொய்னு சொல்லிட்டு அதோட விட்டுடுவாரு. அந்த அரசியல்வாதிகளும் அந்தக் குற்றச்சாட்டைப் பத்தி அப்புறம் பேச மாட்டாங்க. ஆனா உங்க விஷயம் வேற. நீங்க ஒரு வழக்குப் போட்டீங்கன்னா, அதுக்கு எல்லாருமே பயப்படுவாங்க. அதனால உங்க விஷயத்தில வேலுச்சாமி சும்மா இருக்க மாட்டாரு. இன்னொரு விஷயத்தையும் நீங்க ஞாபகம் வச்சுக்கணும்."
"என்ன அது?" என்றார் ராமசாமி.
சகாயம் கூறிய பதிலைக் கேட்டு சற்று நேரம் யோசனை செய்த ராமசாமி, "சரி. நீங்க சொல்றதை நான் சோசிச்சுப் பாக்கறேன். வழக்குப் போடறதை இப்போதைக்குத் தள்ளிப் போடறேன்" என்றார்.
தான் சொன்னதை ராமசாமி ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி அடைந்த சகாயம், 'சில விஷயங்களுக்கு எல்லாருமே பயந்துதானே ஆகணும்!" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
சில மாதங்களுக்குப் பிறகு, ராமசாமியைச் சந்தித்த சகாயம், "என்ன இப்படிப் பண்ணிட்டீங்க?" என்றார்.
"இவ்வளவு வலுவான ஆதாரம் இருக்கும்போது, வழக்குப் போடாம இருக்கறது தப்புன்னு தோணிச்சு. அதனால வழக்குப் போட்டுட்டேன். எப்படியும், இந்த வழக்கில, வேலுச்சாமிக்கு எதிராத்தான் தீர்ப்பு வருங்கறதில எனக்கு எந்த சந்தேகமும் இல்ல!" என்றார் ராமசாமி.
"அதில்ல. திடீர்னு, எதிர்க் கட்சியா இருக்கற த.ந.க. வில போய்ச் சேர்ந்திருக்கீங்களே, அதைக் கேட்டேன்" என்றார் சகாயம்.
"நீங்கதானே அன்னிக்கு சொன்னீங்க, அரசியல் கட்சியில இருக்கறவங்களுக்கு ஒருவிதப் பாதுகாப்பு உண்டு, அவங்களைத் தாக்கறதுக்கு வேலுச்சாமி மாதிரி ஆட்கள் கூடத் தயங்குவாங்க, அதனாலதான், அரசியல் கட்சிக்காரங்க தைரியமா அவர் மேல குற்றச்சாட்டுக்களைச் சொல்லுவாங்கன்னு? அதனாலதான், ஒரு கட்சியில சேர்ந்துட்டு, அப்புறம் அவர் மேல வழக்குப் போட்டிருக்கேன். அரசியல் கட்சியில இருக்கற பாதுகாப்பை, என் நோக்கத்தை நிறைவேத்திக்கப் பயன்படுத்திக்கறேன் அவ்வளவுதான்!" என்றார் ராமசாமி.
"ஆனா, எல்லாக் கட்சிகளுமே மோசம்னுதானே நீங்க எங்கிட்ட அடிக்கடி சொல்லுவீங்க?"
"உண்மைதான். ஆனா, இப்ப பதவியில இருக்கறவங்க ரொம்ப மோசமா இருக்காங்க. த ந க அந்த அளவுக்கு மோசமா இருந்ததில்ல. அதனால, என் நோக்கத்தை நிறைவேத்திக்கறதுக்காக, என் கருத்துக்களைக் கொஞ்சம் சமரசம் செஞ்சுக்கிட்டிருக்கேங்கறது உண்மைதான். ஒருவேளை, இவங்க பதவிக்கு வந்தப்பறம், ஏதாவது முறைகேடுகள்ள ஈடுபட்டா, அப்ப இந்தக் கட்சியிலேந்து விலகிட வேண்டியதுதான்" என்றார் ராமசாமி.
தன் உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதில், தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ள, ராமசாமி செய்து கொண்ட சமரசம் சரிதானா என்று சகாயத்தால் தீர்மானிக்க முடியவில்லை.
(செய்யும் வழிவகைகளைக்) குறைவில்லாமல் சிந்தித்துத் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், ஒருவருக்கு அஞ்சாமை தவிர வேறு துணை வேண்டியதில்லை.
No comments:
Post a Comment