Friday, July 9, 2021

492. வளர்த்த கடா!

"என்னங்க இவ்வளவு வருஷமா எவ்வளவோ பாடுபட்டு கட்சியை வளர்த்தவரு நீங்க. வளர்த்த கடா மார்ல பாய்ஞ்ச மாதிரி நீங்க வளர்த்த அந்த இளங்கோ உங்களையே கட்சித் தலைவர் பதிவியிலேருந்து தூக்கிட்டானே!" என்றான் சண்முகம். 

"முதுகுல குத்தறது அரசியல்ல ரொம்ப சகஜமாச்சே! கட்சிக்கு ஒரு நல்ல தலைவனா வருவான்னு நினைச்சுத்தான் பல மூத்த தலைவர்களோட எதிர்ப்பையும் மீறி அவனை வளர்த்து விட்டேன். நீ சொன்ன மாதிர் நான் வளர்த்த கடா என் மார்பிலேயே பாஞ்சுடுச்சு" என்றார் வேலாயுதம் விரக்தியுடன்.

"என்னங்க இது அக்கிரமம்! நம்ப கட்சிக்கு அடையாளமா இருக்கற உங்களை பொதுக்குழுவில தீர்மானம் போட்டு நீக்கிட்டாங்கங்கறதை ஏத்துக்கவே முடியல!" என்றான் ராமு என்ற இன்னொரு விசுவாசி.

"வரப்போற தேர்தல்ல நம்ம கட்சிதான் ஜெயிக்கப் போகுது. அப்படி ஜெயிச்சா நீங்கதான் முதல்வரா வருவீங்க. அதைத் தடுக்கறதுக்காகத்தான் சில மூத்த தலைவர்களோட சேர்ந்து சதி பண்ணி, நீங்க வெளிநாடு போயிருந்தப்ப அவசரமாப் பொதுக்குழுவைக் கூட்டி உங்களை நீக்கி இருக்கான் இளங்கோ. அப்படியும் கூட்டத்தில கலந்துக்கிட்ட 96 உறுப்பினர்ள்ள 46 பேரு உங்களுக்கு ஆதரவாத்தான் ஓட்டுப் போட்டிருக்காங்க. கட்சித் தொண்டர்கள் ஆதரவு உங்களுக்குத்தான். அவனால எதுவும் செய்ய முடியாது" என்றார் அன்பு என்ற மூத்த தலைவர்.

"இல்லை அன்பு. இளங்கோ கட்சியில தன் கை ஓங்கிட்டதா ஒரு பிம்பத்தை உருவாக்கிட்டான். ஜெயிச்சவன் பின்னாலதான் பல பேர் போவாங்க. இது உலக இயற்கை. அரசியல்ல இது இன்னும் அதிகமாவே நடக்கும்! நாம கவனமா இல்லேன்னா நம்மளை ஒண்ணுமில்லாம ஆக்கிடுவாங்க. தொண்டர்கள் நம்ம பக்கம் இருந்தாலும் கட்சி அவன் கட்டுப்பாட்டில இருந்தா, நம்மால எதுவும் செய்ய முடியாது" என்றார் வேலாயுதம்.

"இப்ப என்ன செய்யப் போறீங்க?"

"கட்சியில பிளவு ஏற்பட்டுடுச்சு. பெரும்பாலான தொண்டர்கள் நம்ம பக்கம்தான் இருக்காங்க, அதனால கட்சியோட சின்னத்தை நமக்குத்தான் கொடுக்கணும்னு கேட்டு தேர்தல் ஆணையத்தில மனு கொடுக்கப் போறேன். தேர்தல் ஆணையம் உடனே முடிவெடுக்காம சின்னத்தை முடக்கி நம்ம ரெண்டு பிரிவுகளுக்குமே வேற சின்னத்தைக் கொடுப்பாங்க. அப்ப  மக்கள் ஆதரவோட நம்மால தேர்தல்ல வெற்றி பெற முடியும். இளங்கோவன் ஒண்ணுமில்லாம போயிடுவான்.

"ஆனா, அவனுக்கு ஒன்றியத்தில ஆளும் கட்சியோட ஆதரவு இருக்கு. அதனால ஒருவேளை தேர்தல் ஆணையம் பொதுக்குழுவிலேயே என்னை நீக்கிட்டாங்கங்கறதை வச்சு சின்னத்தை அவனுக்குக் கொடுக்கலாம். சின்னம் அவங்கிட்ட இருந்தா அது அவனுக்கு சாதகமாப் போயிடும். என்னதான் மக்கள் ஆதரவு அவனை விட நமக்கு அதிகமா இருந்தாலும், சின்னத்தைப் பாத்து ஓட்டுப் போடறவங்க நிறைய பேரு இருக்கறதால அவன் தேர்தல்ல நம்மை விட அதிக இடங்கள்ள வெற்றிபெற வாய்ப்பு இருக்கு. ஏன், ஒன்றியத்தில ஆளும் கட்சியோட ஆதரவு இருக்கறதால, தேர்தல்ல வெற்றி பெற்று அவன் ஆட்சியைப் பிடிச்சாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல!" என்றார் வேலாயுதம்.

"அப்படின்னா, நாம என்ன செய்யப் போறோம்?" என்றான் சண்முகம் கவலையுடன்.

"பார்க்கலாம். தேர்தலுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு. தேர்தல் ஆணையம் என்ன முடிவு செய்யுதுன்னு பார்க்கலாம். ஒருவேளை சின்னத்தை அவனுக்குகக் கொடுத்துட்டாங்கன்னா, நாம பெரிய சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்."

வேலாயுதம் பயந்தபடியே, தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னத்தை இளங்கோவின் பிரிவுக்கு வழங்கி விட்டது. 

வேலாயுதம் தன் ஆதரவாளர்களின் கூட்டத்தை அழைத்தார்.

"நான் பயந்தபடியே ஆயிடுச்சு. ஒன்றியத்தில் ஆளும் கட்சியோடு இளங்கோ கூட்டணி வச்சுக்கப் போறான். ஏகப்பட்ட பணம் செலவழிச்சு, எல்லாவிதத் தில்லுமுல்லுகளையும் பண்ணி அவன் ஜெயிக்கப் பார்ப்பான். ஒருவேளை அவன் வெற்றி பெற்று முதல்வர் ஆயிட்டா, நம்மளை மொத்தமா ஒழிச்சுடுவான். இதைத் தடுக்க ஒரு வழிதான் இருக்கு!" என்று சொல்லி நிறுத்தினார் வேலாயுதம்.

"என்ன வழி?"

வேலாயுதம் சற்றுத் தயங்கி விட்டு,"முதல்வர் தன்னோட தூதூவர் ஒத்தர் மூலமா எனக்கு ஒரு செய்தி அனுப்பி இருக்காரு. அவர் கட்சியோட நாம கூட்டணி வச்சுக்கிட்டா, நமக்கு 40 சதவீத இடங்கள் கொடுக்கறதாகவும், துணை முதல்வர் பதவி, மற்றும் 10 அமைச்சர் பதவிகள் நமக்குக் கொடுக்கறதாகவும் சொல்லி இருக்காரு. என்ன சொல்றீங்க? இதை ஏத்துக்கலாமா?" என்றார்.

"என்னங்க இது? நாம தனியாப் போட்டி போட்டே ஆட்சியைப் பிடிக்கிற நிலையில இருந்தோம். நாம கடுமையா எதிர்த்த கட்சியோட கூட்டணி வச்சுக்கிட்டு, அவங்களோட ஜுனியர் பார்ட்னரா சேர்ந்து, இதுக்கு முன்னால முதல்வரா இருந்த நீங்க துணை முதல்வரா இருக்க ஒத்துக்கிட்டு... இதை எப்படிங்க ஏத்துக்க முடியும்?" என்றார் அன்பு.

"என்னதான் நமக்கு அரசியல் அனுபவம், மக்கள் செல்வாக்கு, திறமை எல்லாம் இருந்தாலும், நம்ம எதிரியை நாம குறைச்சு மதிப்பிடக் கூடாது. இளங்கோ முதல்வரானா நாம ஒழிஞ்சோம். அதைத் தடுக்க இது ஒண்ணுதான் வழி. முதல்வர் கட்சியோட நாம கூட்டு சேர்ந்தா, நம்ம கூட்டணி பெரிய வெற்றி பெறும். அப்புறம் இளங்கோ ஒண்ணுமில்லாம போயிடுவான். நான் துணைமுதல்வரா ஆகப் போறதில்ல. அன்புதான் துணை முதல்வர். நான் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்ங்கற முக்கிய பொறுப்பில இருப்பேன்னு சொல்லப் போறேன். முதல்வர் அதுக்கு ஒத்துப்பார். அவருக்கு வேற வழியில்லை. அதனால கடிவாளம் நம் கையிலதான் இருக்கும். என்ன சொல்றீங்க?" என்றார் வேலாயுதம்.

அனைவரும் ஆரவாரமாகக் கைதட்டி வேலாயுதத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல்  
குறள் 492
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.

பொருள்:
பகைவர்கள் உள்ளவர்கள் ஆற்றல் மிகுந்தவர்களாக இருந்தாலும் பாதுகாப்பான இடத்தில் இருப்பது பல பயன்களையும் தரும்.

அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...