Friday, July 16, 2021

494. கௌரவ டைரக்டர்!

"எனக்கு உங்களை முன்னே பின்னே தெரியாது. நான் எப்படி உங்க கம்பெனியில டைரக்டரா இருக்க ஒத்துக்க முடியும்?" என்றார் மருதமுத்து.

"சார்! நான் அஞ்சு வருஷமா இந்த பிசினஸை நடத்திக்கிட்டு வரேன். பிரைவேட் லிமிடட் கம்பெனியாத்தான் ஆரம்பிச்சேன். அஞ்சவருஷத்தில மார்க்கெட்ல எனக்கு நல்ல பேரு கிடைச்சு என் கம்பெனி பெரிசா வளர்ந்துடுச்சு. டர்ன் ஓவர் அதிகமாப் போனதால இப்ப டீம்ட் பப்ளிக் லிமிடட் கம்பெனியா ஆயிடுச்சு. என் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் இதில டைரக்டர்கள். வெளியாட்கள் யாரும் இதல முதலீடு செய்யல. நான் பப்ளிக் இஷ்யூ எதுக்கும் போகப் போறதில்ல. எனக்கு பாங்க் லோன் எதுவும் கிடையாது. என் பாங்க்ல நீங்க என்னைப் பத்தி விசாரிச்சுக்கலாம். மார்க்கெட்லேயும் விசாரிச்சுக்கலாம். கம்பெனியோட அஞ்சு வருஷம் பாலன்ஸ் ஷீட் கொண்டு வந்திருக்கேன். உங்க நிறுவனத்தில இருக்கற நிபுணர்களை இதைப் பாக்க சொல்லுங்க. எங்ககிட்ட தப்பா எந்த விஷயமும் கிடையாது" என்றான் அரவிந்தன்.

"அதெல்லாம் சரிதான். நான் எதுக்கு உங்க நிறுவனத்தில கௌரவ டைரக்டரா சேரணும்? இதால உங்களுக்கு என்ன லாபம். இல்ல எனக்குத்தான் என்ன லாபம்?"

"சார்! உங்களுக்கு எந்த லாபமும் இல்ல. உங்களால முடிஞ்சப்ப வருஷத்துக்கு ஒரு தடவையோ ரெண்டு தடவையோ போர்டு மீட்டிங்குக்கு நீங்க வந்தா போதும். வருஷத்தில எங்களுக்காக ரெண்டு மணி நேரமோ, மூணு மணி நேரமோ நீங்க செலவழிக்க வேண்டி இருக்கும். இது உங்களுக்கு ஒரு சின்ன சுமைதான், ஆனாலும் சுமைதான். எங்களுக்கு என்ன பயன்னு கேட்டா, உங்க அசோசியேஷன்தான். நான் உங்க வளர்ச்சியை பல வருஷங்களா கவனிச்சுக்கிட்டே வரேன். நீங்க எனக்கு ஒரு ரோல் மாடல். நீங்க என் கம்பெனியில டைரக்டரா இருக்கணுங்கறது முழுக்க முழுக்க என்னோட சுயநலமான விருப்பம்தான். உங்ககிட்ட வெளிப்படையா சொல்லிட்டேன். நீங்கதான் ஒரு நல்ல முடிவைச் சொல்லணும்."

"சாரி, அரவிந்தன். உங்க தொழிலுக்கும் என் தொழிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கூடுதலா ஒரு பொறுப்பை நான் ஏத்துக்க விரும்பல. ஐ ஆம் சாரி" என்றார் மருதமுத்து.

ஆனால் அரவிந்தன் விடவில்லை. இன்னும் இரண்டு முறை அவரைச் சென்று பார்த்தான். ஒவ்வொரு முறையும் தன் நிறுவனத்தின் பொது மேலாளர் செல்வாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.

 ஆனால் மருதமுத்து தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

"சாரி சார்! இனிமேல் உங்களை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்!" என்றான் அரவிந்தன் மூன்றாவது முறை அவரைப் பார்த்தபோது.

"பரவாயில்லை. உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்க எனக்கு அறிமுகம் ஆயிட்டதால, நீங்க எப்ப வேணும்னா என்னை வந்து பார்க்கலாம். ஆனா இந்த டாபிக் மட்டும் வேண்டாம்!" என்றார் மருதமுத்து சிரித்தபடி.

"நிச்சயமா இதைப் பத்தி இனிமே நான் பேச மாட்டேன். உங்க அறிமுகம் எனக்குக் கிடைச்சதே எனக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம்தான்!" என்று சொல்லி விடைபெற்றான் அரவிந்தன்.

ருதமுத்துவைப் பார்த்து விட்டுத் திரும்பியதும், அரவிந்தனின் அறைக்கு வந்த செல்வா, "சார்! உங்கிட்ட ஒண்ணு கேட்கணும்" என்றார்.

"நீங்க என்ன கேக்கப் போறீங்கன்னு தெரியும். அதுக்கு முன்னால நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும். நம்மகிட்ட வேலை செஞ்ச எஞ்சினியர் சுகுமார் எப்படி இருக்கான்?"

"தெரியலியே சார்! ஏன் கேக்கறீங்க. அவன் மோசடி பண்ணினான்னுதானே நாம வேலையை விட்டுத் தூக்கினோம்? அவனுக்கு வேற எங்கேயும் வேலை கிடைக்கலேன்னு நினைக்கிறேன்" என்றார் செல்வா, ஏன் அரவிந்தன் இதைப் பற்றிக் கேட்கிறான் என்று புரியாமல்.

"இல்லை. நம்ம போட்டியாளர் சபேசன் இண்டஸ்ட்ரீஸ் அவனை வச்சுக்கிட்டு நம்ம தொழில்நுட்பத்தைத் திருட்டுத்தனமாப் பயன்படுத்தத் திட்டம் போட்டுக்கிட்டிருக்கறதா நீங்கதானே எங்கிட்ட சொன்னீங்க?"

"ஆமாம் சார்! சுகுமாரே இதை நம்ம ஊழியர்கள்ள ஒத்தர்கிட்ட சொல்லி நம்மைப் பழி வாங்கப் போறதா சொல்லிக்கிட்டிருந்தான். சபேசன் இண்டஸ்ட்ரீஸ் இப்ப அந்த எண்ணத்தைக் கைவிட்டுட்டாங்கன்னு தோணுது. சுகுமார் மறுபடி அவங்களைப் பாக்கப் போனப்ப அவங்க எம் டி சபேசன் அவனைப் பாக்கவே இல்லையாம். அவனை இனிமே அங்கே வர வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். என்ன ஆச்சுன்னே தெரியலேன்னு சுகுமார் புலம்பிக்கிட்டே இருக்கானாம். ஆமாம். இதையெல்லாம் எதுக்குக் கேக்கறீங்க?"

அரவிந்தன் உற்சாகமாகச் சிரித்தபடி, "சரி, இப்ப நீங்க கேக்க வந்ததைக் கேளுங்க!" என்றான்.

இவர் ஏன் தலைப்பை மாற்றிக்கொண்டே இருக்கிறார் என்று குழம்பிய செல்வா, "இல்ல, மருதமுத்து நம்ப கம்பெனியில டைரக்டரா இருக்க ஒத்துக்க மாட்டாரு, அவரு டைரக்டரா இருக்கறதால நமக்கு எந்தப் பிரயோசனமும் இல்லேங்கறப்ப ஏன் அவர்கிட்ட திரும்பத் திரும்ப டைரக்டரா இருக்கச் சொல்லிக் கேட்டீங்கன்னு எனக்குப் புரியல" என்றார்.

"சுகுமாரைச் சேத்துக்கிட்டு சபேசன் நமக்கு எதிரா செயல்படறாருன்னு நீங்க சொன்னதும் அதை எப்படி சமாளிக்கறதுன்னு யோசிச்சேன். அவங்க திருட்டுத்தனமா நம்ம தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தறதை நம்மால தடுக்கவும் முடியாது. அதை நிரூபிச்சு அவங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடியாது. அப்பதான் சபேசன் ஆரம்பக் காலத்தில மருதமுத்துகிட்ட வேலை செஞ்சிருக்கார்னும், மருதமுத்து அவருக்கு வழிகாட்டின்னும், அவர் தொழில் ஆரம்பிக்கக் கூட மருதமுத்து உதவி இருக்கார்னும் தெரிய வந்தது. அதனால மருதமுத்து நமக்கு நெருக்கமானவர்னு காட்டிக்கிட்டா சபேசன் நம்மகிட்ட வாலாட்ட மாட்டார்னு நினைச்சுத்தான் மருதமுத்துவை மூணு தடவை பாத்து மருதமுத்து நமக்கு நெருக்கமானவர்னு காட்டிக்கிட்டேன். சபேசன் நம்மை எப்பவும் கவனிச்சுக்கிட்டிருக்கிறதால இந்தத் தகவல் அவருக்குப் போகும்னு எனக்குத் தெரியும். ஆனா மருதமுத்துகிட்ட நாம என்ன பேசினோம்னு சபேசனுக்குத் தெரியாது. அவரால இதைப் பத்தி மருதமுத்துகிட்ட நேரடியா கேக்கவும் முடியாது. நான் எதிர்பார்த்த மாதிரியே மருதமுத்து நமக்கு நெருக்கமானவர்னு நினைச்சு சபேசன் பின்வாங்கிட்டாரு. மருதமுத்து நம்ம கம்பெனியில டைரக்டர் ஆக ஒத்துக்க மாட்டார்னு தெரிஞ்சும், அவரைத் திரும்பத் திரும்பப் பாத்து கேட்டது இதுக்காகத்தான்" என்றான் அரவிந்தன். 

"ரொம்ப எளிமையான ஆனா அற்புதமான ஸ்ட்ராஜடி சார்! ஒரு கட்டத்தில கௌரவ டைரக்டரா ஆக அவர் ஒத்துப்பாரோன்னு கூட நான் நினைச்சேன்" என்றார் செல்வா.

"ஒரு விதத்தில மூணு மாசத்துக்கு மருதமுத்து நம்ம கம்பெனியோட கௌரவ டைரக்டரா இருந்து நமக்குப் பெரிய உதவி செஞ்சிருக்காருன்னுதான் சொல்லணும்!" என்றான் அரவிந்தன் சிரித்தபடி. 

அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல்  
குறள் 494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

பொருள்:
ஒருவர் தக்க இடத்தை அறிந்து பொருத்தமான விதத்தில் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்து விடுவர்.

அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...