"நீயும் நல்லதம்பியும் ஒரே சமயத்திலதான் இந்த நிறுவனத்தில வேலைக்குச் சேர்ந்தீங்க. ஆனா, அவன் உன்னை முந்திக்கிட்டு மேல போயிட்டானே!" என்றான் முத்து, செந்திலிடம். இருவரும் ஒரே நிறுவனத்தில், வெவ்வேறு பிரிவில் பணியாற்றுபவர்கள்.
"என்னை அவன் முறையா முந்திக்கிட்டுப் போயிருந்தா, என்னை விட அவன் திறமையானவன்னு நினைச்சு, நான் பேசாம இருந்திருப்பேன். ஒவ்வொரு தடவையும் ஒரு சூழ்ச்சி பண்ணி, என்னைக் கீழே அழுத்திட்டுல்ல, அவன் மேல போய்க்கிட்டிருக்கான்? அதுதான் எனக்கு ஆத்திரமா இருக்கு" என்றான் செந்தில்.
"அவன் சூழ்ச்சி பண்ணி உன்னை அழுத்தினான்னா, அதுக்கு நீ இடம் கொடுத்தேன்னுதானே அர்த்தம்?"
"உண்மைதான். அவன் அடுத்தவங்களைக் கீழே தள்ளிட்டு, அவங்களையே படிக்கட்டாப் பயன்படுத்தி மேலே போவான். என்னால அப்படிச் செய்ய முடியாது. அந்த விதத்தில நான் பலவீனமானவன்தான். மூணு வருஷமா, அவன் நம்ப துணை நிறுவனத்துக்கு மானேஜராப் போயிருந்தான்னு கொஞ்சம் நிம்மதியா இருந்தேன். இப்ப, அவன் திரும்பி வந்துட்டான். இப்ப அவனுக்குக் கீழ நான் வேலை செய்யணும். இந்த நிலையில, என்னால அவனைச் சமாளிக்க முடியாது" என்றான் செந்தில், யோசனையுடன்.
"என்ன செய்யப் போற? வேற வேலைக்கு முயற்சி செய்யப் போறியா?"
"இது ஒரு நல்ல நிறுவனம். நல்லதம்பிக்கு பயந்து, இந்த நல்ல நிறுவனத்தை விட்டு நான் ஏன் போகணும்? அதுவும் என்னோட உழைப்பாலயும், திறமையாலயும், நான் நல்ல பேரு வாங்கி இருக்கறப்ப? எனக்கு வேற ஒரு யோசனை இருக்கு."
"என்ன?"
"நம்ப துணை நிறுவனத்திலேயே ஒரு பொறுப்பு காலியா இருக்கு. அங்கே போகலாம்னு பாக்கறேன்."
"நல்லதம்பி பார்த்த அதே மானேஜர் வேலைக்கா?"
"இல்லை. அங்கே துணை மானேஜரா இருந்த ரகுவையே மானேஜராப் போட்டுட்டாங்க. இப்ப, துணை மானேஜர் வேலைதான் காலியா இருக்கு. நான் முயற்சி பண்ணினா, அது எனக்குக் கிடைக்கும்."
"அது உனக்கு நல்லதா?"
"தெரியல. இப்போதைக்கு, நல்லதம்பிகிட்டேந்து என்னைக் காப்பாத்திக்கறதுக்கு வேற வழி தெரியல."
"யோசிச்சு செய்!" என்றான் காளிமுத்து.
"யோசிச்சுட்டேன்" என்றான் செந்தில்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, துணை நிறுவனத்தில் நடந்த தணிக்கையில் நல்லதம்பி செய்த சில முறைகேடுகள் வெளிப்பட்டன. அதைத் தொடர்ந்து நல்லதம்பி வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.
அப்போது துணை மானேஜராக இருந்து, பிறகு மானேஜராகப் பதவி உயர்த்தப்பட்ட ரகு, நல்லதம்பியின் முறைகேடுகளுக்குக் கண்மூடித்தனமாகத் துணைபோனதாகவும், தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஆயினும், ரகு தெரிந்தே அந்த முறைகேடுகளில் ஈடுபடவில்லை என்பதாலும், நல்லதம்பியால் தவறாக வழிநடத்தப்பட்டான் என்பதாலும், அவனுக்கு தண்டனை அளிக்கப்படாமல், அவன் எச்சரிக்கை செய்யப்பட்டு, துணை மானேஜராகப் பதவி இறக்கம் செய்யப்பட்டான்.
தணிக்கையாளர்கள் முறைகேடுகளைக் கண்டுபிடிக்க உதவியதற்காக, செந்தில் பாராட்டுப் பெற்று, மானேஜராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டான்.
"கங்கிராட்ஸ் செந்தில்! உன் எதிரி ஒழிஞ்சான். நல்லதம்பிகிட்டேந்து தப்பிக்,க நீ துணை நிறுவனத்தில ஒரு பொறுப்பை எடுத்துக்கிட்டது, தற்செயலா உனக்கு நன்மையா முடிஞ்சுடுச்சே!" என்றான் காளிமுத்து.
"தற்செயல் இல்லை, தன் செயல், அதாவது என் செயல்தான் இது!" என்றான் செந்தில், சிரித்தபடி.
"உன் செயலா? எப்படி?"
"நல்லதம்பி அவ்வளவு கை சுத்தமானவன் இல்லேன்னு எனக்குத் தெரியும். துணை நிறுவனத்தோட மானேஜர்ங்கறது தனிக்காட்டு ராஜா மாதிரி. அங்கே அவன் முறைகேடா ஏதாவது செஞ்சிருப்பான்னு எனக்குத் தெரியும். ரகு ஒரு அப்பாவி, அதோட விஷயம் தெரியாதவன், நல்லதம்பியால அவனை சுலபமா ஆட்டி வைக்க முடியும்னு எனக்குத் தெரியும். தன் தவறுகள் வெளியில வரக்கூடாதுங்கறதுக்காகத்தான், நல்லதம்பி, தான் அந்தப் பதவியை விட்டு வரும்போதே, மானேஜ்மென்ட்ல சொல்லி, ரகுவை மானேஜரா ஆக்கிட்டு வந்தான்.
"என்னைக் காப்பாத்திக்கத்தான், நான் நல்லதம்பிகிட்டேந்து தூரமா இருக்கணும்னு நினைச்சு அங்கே போனேன். நான் எதிர்பார்த்ததை விட, நிறைய முறைகேடுகள் அங்கே நடந்திருந்தது. நான்தான் ஆடிட்டர்களுக்கு எல்லா விவரங்களையும் எடுத்துக் கொடுத்து, நல்லதம்பியை மாட்ட வச்சேன். ரகு அப்பாவிங்கறதால, ஆடிட்டர்கள்கிட்டேயும், மானேஜ்மென்ட்கிட்டேயும் சொல்லி, அவன் வேலை போகாம காப்பாத்தினேன். இத்தனை வருஷமா என்னை வேட்டையாடிக்கிட்டிருந்த ஒரு எதிரியை ஒழிச்சட்டதில, இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு" என்றான் செந்தில்.
அரசியல் இயல்
தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக் கொண்டு, பகைவருடன் மோதினால், வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.
No comments:
Post a Comment