Saturday, July 17, 2021

495. தலைமை அமைச்சர்!

கஜேந்திர வர்மா வியாச நாட்டின் தலைமை அமைச்சராக ஆனபோது, நாட்டின் நிர்வாகத்திலேயே பெரிய புரட்சி ஏற்பட்டு, அந்த நாடு ஒரு வல்லரசாக உருவாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது.

ஆனால் அவர் அரசாங்கத்தின் செயல்பாடு எல்லாத் துறைகளிலும் மிக மோசமாக இருந்தது. அதுவரை ஓரளவு சிறப்பாகவே இருந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்து மிக வேகமாகக் கீழ் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

ஆயினும் நாட்டின் பல மாகாணங்களிலும் நடைபெற்ற தேர்தல்களில் வர்மாவின் வியாச மக்கள் கட்சி (வி.ம.க.) தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. இதற்குக் காரணம் வர்மாவும், அவருடைய வலதுகரமாக இருந்த அமர்நாத் என்ற அமைச்சரும் மக்களிடையே இருந்த சமுதாய வேறுபாடுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிளவுபடுத்தியதுதான் என்று பொதுவாகக் கருதப்பட்டது.

ஆயினும், பொன்னிநாடு என்ற மாகாணத்தில் மட்டும் வி.ம.க. வால் சிறிதளவு கூட மக்கள் ஆதரவைப் பெற முடியவில்லை. பல்வேறு வேறுபாடுகளுக்கிடையேயும், பொன்னிநாட்டு மக்களிடையே இருந்த சமுதாய நல்லிணக்கம், வர்மாவின் கட்சியினர் நாட்டின் பிற பகுதிகளில் செயல்படுத்திய பிரித்தாளும் உத்திகளை அங்கே எடுபடாமல் செய்து விட்டது.

பொன்னி நாட்டில் மட்டும் பொன்னி மக்கள் கட்சி (பொ.ம.க.), அனைத்துலக பொன்னி மக்கள் கட்சி (அ.பொ.ம.க.) என்ற இரண்டு வலுவான மாநிலக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. அங்கே ஆளும் கட்சியாக இருந்த அ.பொ.ம.க. செய்த முறைகேடுகளை வைத்து இந்தக் கட்சியை மிரட்டித் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வைத்திருந்தது வி.ம.க 

டுத்த தேர்தலுக்கான நேரம் வந்து விட்டது. வி.ம.க. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஊடகங்கள் கணித்திருந்தன. 

தேர்தல் உத்தி பற்றி விவாதிக்க, வி.ம.க. வின் உயர்மட்டக் குழு கூடியது.

"நாம வெற்றி பெறப் போறது உறுதி. ஆனா பொன்னி நாடு மட்டும் நமக்கு எதிராகத்தான் இருக்கு. அதை மாத்த முடிஞ்சா நல்லா இருக்கும்!" என்றார் கட்சித் தலைவர் விஜய் நாயக்.

"அதுதான் எனக்கும் ஒரு குறையா இருக்கு" என்றார் கஜேந்திர வர்மா.

"எனக்கு ஒரு யோசனை தோணுது" என்றார் விஜய் நாயக்.

அவர் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவலில் அனைவரும் அவரையே பார்த்தனர்.

"நீங்க பொன்னிநாட்டில ஒரு தொகுதியிலேந்து போட்டி போட்டா. அது நம்ம கட்சிக்கு ஒரு பெரிய எழுச்சியைக் கொடுக்கும். அந்த மாகாணத்தில இருக்கற 40 தொகுதிகள்ள நாலஞ்சு தொகுதிகள்ள நாம வெற்றி பெறலாம்."

"அது ரிஸ்க். தலைமை அமைச்சரை இது மாதிரி ரிஸ்க்குகளுக்கு உட்படுத்தக் கூடாது" என்றார் அமர்நாத்.

"என்ன பேசறீங்க அமர்நாத்? வியாச நாட்டில எந்தத் தொகுதியில நின்னாலும் வெற்றி பெறக் கூடிய ஒரே தலைவர் நம்ம தலைவர்தான். சாணக்கியர் நீங்க வேற இருக்கீங்க! அ.பொ.ம.க. ஆதரவோடதானே நாம நிக்கப் போறோம்?" என்றார் விஜய்.

"பொன்னிநாட்டு மக்கள் அ.பொ.ம.க வுக்கு எதிரான மனநிலையிலதானே இருக்காங்க?" என்றார் அமர்நாத்.

"நம்ம தலைவர் அங்கே நின்னா, அவங்களுக்கும் கூடுதல் பலமாத்தான் இருக்கும்."

"அப்ப அவரோட பழைய தொகுதியைத் தவிர, பொன்னிநாட்டில ஒரு தொகுதியிலேயும் போட்டி போட்டடும்" என்றார் அமர்நாத்.

"தப்பு அமர்நாத். இப்பல்லாம், ரெண்டு தொகுதியில போட்டி போட்டா, மக்கள் அதை ஒரு பலவீனமாகத்தான் நினைப்பாங்க. பொன்னிநாட்டில ஒரு தொகுதியில மட்டும் போட்டி போட்டு வெற்றியை அள்றதுதான் தலைவருக்குப் புகழைச் சேர்க்கும்" என்றார் விஜய் நாயக்.

சற்றுநேர விவாதத்துக்குப் பின், விஜய்நாயக்கின் யோசனை ஏற்கப்பட்டு, கஜேந்திர வர்மா பொன்னி நாட்டில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்ததும், விஜய் நாயக் கட்சி அலுவலகத்துக்குத் திரும்பினார். கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு விஜய் நாயக்குடன் அதே காரில் வந்த கட்சியின் துணைத்தலைவர் வசந்த் மெஹ்ரா, "நீங்க எப்படி இவ்வளவு நம்பிக்கையா இருக்கீங்கன்னு தெரியல. எனக்கு இது சரியான முடிவுதானான்னு சந்தேகமாத்தான் இருக்கு!" என்றார்.

"நான் நினைக்கறது நிச்சயமா நடக்கும். நீங்க வேணும்னா பாருங்க" என்றார் விஜய் நாயக் உற்சாகமாக.

தேர்தலில் வி.ம.க பெரும்பான்மை இடங்களைப் பெற்றது. ஆனால் கஜேந்திர வர்மா பொன்னி நாட்டில் அவர் போட்டியிட்ட தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதனால், வி.ம.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறொரு நபரைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் தலைமை அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

கஜேந்திர வர்மாவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டாதாக ஊடகங்கள் கருத்துக் கூறின.

வி.ம.க.வின் தலைமை அலுவலகத்தில் வசந்த் மெஹ்ரா, விஜய் நாயக்குடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

"அவ்வளவு நம்பிக்கையா சொன்னீங்களே! என்ன ஆச்சு பாத்தீங்களா?" என்றார் வசந்த் மெஹ்ரா.

"நான் நினைக்கறது நடக்கும்னு சொன்னேன். அதான் நடந்திருக்கு!" என்றார் விஜய் நாயக் சிரித்தபடி.

"என்ன சொல்றீங்க?"

"கஜேந்திர வர்மாவோட ஆட்சி சரியாயில்லேன்னு நம்ம எல்லோருக்குமே தெரியும். ஆனா அவரும் அமர்நாத்தும் சில உத்திகளைப் பயன்படுத்தி ஜெயிச்சுக்கிட்டே வந்தாங்க. அவருக்கு பதிலா நல்லா ஆட்சி செய்யக் கூடிய ஒத்தர் பதவிக்கு வந்தாதான் நாட்டுக்கும் நல்லது, நம்ம கட்சிக்கும் நல்லது.

"ஆனா பலமா இருந்த அவரை மாத்த நம்மால முயற்சியே எடுக்க முடியாத நிலை இருந்தது. நாட்டில பல பகுதிகள்ள சில உத்திகளைப் பயன்படுத்தி அவரால ஜெயிக்க முடிஞ்சது. ஆனா பொன்னி நாடு மாதிரி சில பகுதிகள்ள அவரோட உத்தி எடுபடல. 

"தான் பலவீனமா இருக்கற ஒரு இடத்தில எந்தத் தலைவரும் நின்னு தனக்கே அழிவைத் தேடிக்க மாட்டாரு. வர்மாவுக்கு அது அவசியமும் இல்ல. ஆனா தொடர்ந்து கிடைச்ச வெற்றிகளால வர்மாவுக்க ஏற்பட்டிருந்த ஆணவமும், பொன்னி நாட்டில அவர் உத்திகள் பலிக்கலேங்கற ஆத்திரமும் சேர்ந்து அவரை இந்த அடிப்படையால விஷயத்தைப் புரிஞ்சுக்க முடியாம செஞ்சுடுச்சு.

"அவரோட வியூக வகுப்பாளர் அமர்நாத்துக்கு இது ஓரளவுக்குப் புரிஞ்சுது. ஆனா வர்மாகிட்ட உண்மையை தைரியமா பேசற தைரியம் அவருக்குக் கிடையாது. அதனால முதல்ல கொஞ்சம் ஆட்சேபிச்சுட்டு அப்புறம் பேசாம இருந்துட்டாரு.

" வர்மா நான் விரிச்ச வலையில விழுந்திட்டாரு. முதலையைக் கரையில ஏற வச்சு அதை அழிக்கிற மாதிரி வர்மாவோட ஈகோவைப் பயன்படுத்தி அவரை ஒரு ஆபத்தை ஏத்துக்க வச்சு அவர் கதையை முடிச்சுட்டேன். இப்ப ஒரு நல்ல தலைவர் நமக்குக் கிடைச்சிருக்காரு. இது நம்ம கட்சிக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது!" 

விஜய் நாயக்கின் விளக்கத்தைக் கேட்ட வசந்த் மெஹ்ரா, 'வர்மாவுக்கு ஆதரவா இருக்கற மாதிரி காட்டிக்கிட்டே அவரைக் கவுத்துட்டாரே! என்ன இருந்தாலும் பழம் தின்னுக் கொட்டை போட்ட அனுபவசாலியாச்சே! இவர்கிட்ட நான் நிறைய கத்துக்கணும். கவனமாவும் இருக்கணும்!" என்று நினைத்துக் கொண்டார். 

அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல் 
குறள் 495 
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

பொருள்:
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகி வந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.
                                                                  குறள் 496 
                                            குறள் 494                                                           
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...