Sunday, April 26, 2020

404. கன்னையாவின் கவலை

சுகுமார் தன் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கி அதைத் தன் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளிடம் விவாதித்து அநேகமாகத் திட்டத்தை இறுதியாக்கி விட்டான். 

அவன் தன் அறையில் தனியாக இருந்தபோது, அவனைப் பார்க்க கன்னையா வந்தார்.

கன்னையா அவனுடைய நிறுவனத்தில் நீண்ட காலமாகப்  பணியாற்றுபவர். அதிகம் படிக்காதவர் என்றாலும், நிறுவனத்தின் ஒரு மூத்த அதிகாரிக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் அவருக்கு உண்டு. 

நிறுவனத்தின் பொது மேலாளர் உட்பட எல்லா மூத்த அதிகாரிகளும் அவரிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்வார்கள்.

அவருக்கென்று ஒரு குறிப்பிட்ட வேலை கிடையாது. அவரே விருப்பப்பட்டு எந்த வேலையையும் செய்யலாம். யாரும் அவரிடம் எதுவும் கேட்க மாட்டார்கள்.

கன்னையாவும் மூத்த அதிகாரிகளின் வேலைகளில் தலையிடாமல், தொழிலாளர்களையும் கீழ்நிலை ஊழியர்களையும் வழி நடத்தும் வேலையை மட்டும் செய்து வந்தார். 

சில சமயம் மூத்த அதிகாரிகளிடம் சில யோசனைகளைப் பணிவுடன் சொல்லுவார். அவர்களும் அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்வார்கள். அவற்றை ஏற்பதா வேண்டாமா என்பதைப் பற்றி அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள்.

வாடிக்கையாளர்களையும், நிறுவனத்துக்குப் பொருட்கள் வழங்குபவர்களையும், கன்னையா அவ்வப்போது சென்று சந்திப்பார். அவர்கள் கூறும் நிறைகுறைகளைக் கேட்டறிந்து, அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், சில சமயம் சுகுமாரிடமும் கூறுவார். 

கன்னையாவின் இந்தச் செயல்பாடு, வாடிக்கையாளர்களிடமும், பொருட்கள் வழங்குபவர்களிடமும் அவர்கள் நிறுவனத்துக்கு இருந்த உறவை மேம்படுத்தியதால், சுகுமார் அதை ஊக்குவித்தான்.

"வாங்க, கன்னையா!" என்று அவரை வரவேற்றான் சுகுமார்.

"சார்! கம்பெனியை விரிவுபடுத்தப் போறீங்கன்னு கேள்விப்பட்டேன்" என்றார் கன்னையா.

"ஆமாம், கன்னையா. அது விஷயமாத்தான் ஆலோசனை செஞ்சுக்கிட்டிருக்கேன். கிட்டத்தட்ட எல்லாம்  முடிவாயிடுச்சு!" என்றான் சுகுமார்.

"பாங்க் லோன் வாங்கித்தானே செய்வீங்க?" என்றார்  கன்னையா.

"ஆமாம். பெரிய ப்ராஜக்ட் ஆச்சே! நிச்சயம் பாங்க் லோன் வாங்கித்தான் செய்யணும். எதுக்குக் கேக்கறீங்க?" என்றான் சுகுமார்.

"இல்லை, சார்!...சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. மார்க்கெட்ல பல பேர்கிட்ட பேசறதால, நான் கேள்விப்பட்ட விஷயங்களைச் சொல்றேன். நம்ம தயாரிப்புக்கு இப்ப போட்டி அதிகமாகிக்கிட்டிருக்காம். வெளிநாட்டிலேந்து வேற நம்ப பொருளை அதிகமா இறக்குமதி பண்ண ஆரம்பிச்சுருக்காங்களாம். கொஞ்ச நாள்ள விலை கூடக் குறைஞ்சுடும்னு சொல்றாங்க. இந்த சமயத்தில, கடன் வாங்கித் தொழிலைப் பெரிசு பண்ணப் போறதா சொல்றீங்களே, அதுதான் உங்ககிட்ட சொல்லாலாம்னுட்டு..." என்று இழுத்தார் கன்னையா.

சுகுமார் கோபத்தை அடக்கிக் கொண்டு, "இங்க பாருங்க, கன்னையா! வாடிக்கையாளர்களை நீங்க அடிக்கடி பாத்துப் பேசறதால, அவங்க பிரச்னைகளை நம்மளால புரிஞ்சுக்கிட்டு, அதுக்கு ஏத்த மாதிரி நம்பளால செயல்பட முடியுதுங்கறதுக்காகத்தான், நீங்க வாடிக்கையாளர்களைப் பாத்துப் பேசறதை நான் ஊக்குவிக்கறேன். ஆனா, மார்க்கெட்ல யாராரோ பேசறதைக் கேட்டுக்கிட்டு வந்து, எங்கிட்ட இப்படியெல்லாம் பேசாதீங்க. உங்க மேல நான் நிறைய மரியாதை வச்சிருக்கேன். அந்த மரியாதையைக் காப்பாத்திக்கங்க!" என்றான், கடுமையாக.

கன்னையா எதுவும் பேசாமல், அறையை விட்டு வெளியேறினார். 

ரண்டு மாதங்களுக்குப் பிறகு, சுகுமாரின் விரிவாக்கத் திட்டம் கைவிடப்பட்டது. காரணம், சுகுமார் இரண்டு லட்ச ரூபாய் கட்டணம் கொடுத்து நியமித்திருந்த மார்க்கெட் சர்வே நிறுவனம், சுகுமாரின் நிறுவனம் தயாரிக்கும் பொருளுக்குச் சந்தையில் போட்டி அதிகரித்து விட்டதாகவும், அரசாங்கத்தின் இறக்குமதிக் கொள்கை மாற்றம் காரணமாக இறக்குமதிகள் அதிகமாகி விட்டதாகவும், அதனால் அவர்களுடைய தற்போதைய விற்பனையை நிலைநிறுத்திக் கொள்வதே கடினமாக இருக்குமென்றும், சப்ளை அதிகரித்து விட்டதால், விரைவில் விலையில் வீழ்ச்சி ஏற்படக்  கூடும் என்பதால், அவர்கள் லாபமும் பெரிதும் குறையும் என்றும், புள்ளி விஙரங்களுடன் கூடிய ஒரு விரிவான அறிக்கையை அளித்திருந்ததுதான்! 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 404:
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

பொருள்:
கல்லாதவனுடைய அறிவு ஒருவேளை நன்றாகவே இருந்தாலும், கற்றவர்கள் அதை அறிவு என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
           அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Wednesday, April 8, 2020

403. என்னை விட்டு விடுங்கள்!

தான் படிக்காதவன் என்ற உணர்வு ராஜாங்கத்துக்கு எப்போதுமே உண்டு. 

நான்கைந்து  பேர் கூடிப் பேசிக் கொண்டிருக்கும்போது அதில் ஓரிருவர் படித்தவர்களாக இருந்தால், ராஜாங்கம் அந்தக் குழுவின் பேச்சில் கலந்து கொள்ள மாட்டான். 

அவர்களில் ராஜாங்கத்துக்குத் தெரிந்தவர்கள்  யாராவது இருந்து, அவர்கள் அவனைக் கூப்பிட்டால் கூட, "இல்ல. வேலை இருக்கு. ஒரு இடத்துக்குப் போகணும்!" என்று சொல்லி நழுவி விடுவான். 

அவனுடைய நண்பர்களில் விஸ்வநாதன் மட்டும்தான் படித்தவன். அவனிடம் மட்டும் ராஜாங்கம் இயல்பாகப் பேசுவான். அவனும் ராஜாங்கத்தின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவனிடம் இயல்பாகப் பேசுவான். 

அப்படியும், சில சமயங்களில், விஸ்வநாதன் பேசும் சில விஷயங்கள் அவனுக்குப் புரியாவிட்டால், "இதெல்லாம் எனக்கு எப்படிப்பா தெரியும்? நான் என்ன, உன்னை மாதிரி படிச்சிருக்கேனா என்ன?" என்பான் ராஜாங்கம்.

ருநாள் விஸ்வநாதன் வீட்டுக்கு ராஜாங்கம் சென்றபோது, அங்கே விஸ்வநாதனின் கல்லூரி நண்பர்கள் சிலர் வந்திருந்தனர்.

"சரி. நான் அப்புறம் வரேன்!" என்று கிளம்ப முயன்ற ராஜாங்கத்தை விஸ்வநாதன் தடுத்து நிறுத்தி, அங்கேயே இருக்கச் செய்தான். வேறு வழியில்லாமல், ராஜாங்கம் அவர்களுடன் அமர்ந்து கொண்டான்.

விஸ்வநாதனும், அவனுடைய நண்பர்களும் பல விஷயங்களைப் பற்றிப் பேசினர். அவற்றில் பலவற்றைப் பற்றி ராஜாங்கத்துக்கும் ஓரளவு தெரியும் என்றாலும், அவன் எதுவும் பேசாமல், அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

சில சமயம் தலையாட்டியதையும், இலேசாகச் சிரித்ததையும் தவிர, ராஜாங்கம் எதுவுமே சொல்லவில்லை. 

"நீங்க என்ன சொல்றீங்க?" என்று ஓரிரண்டு முறை அவனிடம் யாராவது கேட்டபோதும், மௌனமாகச் சிரித்ததோடு சரி. 

சற்று நேரம் கழித்து, அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினான் ராஜாங்கம்.

றுநாள் ராஜாங்கம் விஸ்வநாதனைச் சந்தித்தபோது, "என்னடா நேத்திக்கு என்னை உன் நண்பர்கள்கிட்ட மாட்டி விட்டுட்ட? அவங்க என்னைப்  பத்தி ரொம்ப மட்டமா நினைச்சிருப்பாங்க!" என்றான் ராஜாங்கம்.

"அதுதான் இல்லை. அவங்க உன்னைப் பத்தி ரொம்ப உயர்வா சொன்னாங்க. 'உன் நண்பர் ரொம்பப் பணிவாவும், அடக்கமாவும் இருக்காரே!' ன்னு பாராட்டினாங்க" என்றான் விஸ்வநாதன்.

"நான் படிக்காதவன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்காது!"

"ஓரளவு தெரிஞ்சிருக்கும். உன் நண்பர் என்ன படிச்சிருக்கார்னு அவங்க கேட்டப்ப, 'அவன்  நம்மை மாதிரி காலேஜில படிச்சவன் இல்ல. பள்ளிப் படிப்போட நிறுத்திட்டான்'னு சொன்னேன். அதுக்கு அவங்க, 'அதனால என்ன? ஒரு விஷயத்தைப் பத்திக் கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசறவங்கதான் அதிகம். இவர் எவ்வளவு அடக்கமா இருந்தாரு! நல்ல பண்புள்ளவரா இருக்காரு. அதை விட வேற என்ன வேணும்?'னு சொன்னாங்க. எனக்கே ரொம்பப் பெருமையா இருந்ததுன்னா பாத்துக்கயேன்!" என்றான் விஸ்வநாதன்.

ராஜாங்கத்துக்கும் சற்றுப் பெருமையாகத்தான் இருந்தது. 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 403:
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

பொருள்:
கற்றவர்கள் முன் ஏதும் பேசாமல் இருந்தால், கல்லாதவர்களும் நல்லவர்கள் (மதிக்கத் தக்கவர்கள்) என்றே கருதப்படுவர்.
          அறத்துப்பால்                                                                      காமத்துப்பால்

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...