
நான்கைந்து பேர் கூடிப் பேசிக் கொண்டிருக்கும்போது அதில் ஓரிருவர் படித்தவர்களாக இருந்தால் ராஜாங்கம் அந்தக் குழுவின் பேச்சில் கலந்து கொள்ள மாட்டான்.
அவர்களில் ராஜாங்கத்துக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்து, அவர்கள் அவனைக் கூப்பிட்டால் கூட, "இல்ல. வேலை இருக்கு. ஒரு இடத்துக்குப் போகணும்!" என்று சொல்லி நழுவி விடுவான்.
அவனுடைய நண்பர்களில் விஸ்வநாதன் மட்டும்தான் படித்தவன். அவனிடம் மட்டும் ராஜாங்கம் இயல்பாகப் பேசுவான். அவனும் ராஜாங்கத்தின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவனிடம் இயல்பாகப் பேசுவான்.
அப்படியும், சில சமயங்களில் விஸ்வநாதன் பேசும் சில விஷயங்கள் அவனுக்குப் புரியாவிட்டால், "இதெல்லாம் எனக்கு எப்படிப்பா தெரியும்? நான் என்ன உன்னை மாதிரி படிச்சிருக்கேனா என்ன?" என்பான் ராஜாங்கம்.
ஒருநாள் ராஜாங்கம் விஸ்வநாதன் வீட்டுக்குச் சென்றபோது, அங்கே விஸ்வநாதனின் கல்லூரி நண்பர்கள் சிலர் வந்திருந்தனர்.
"சரி. நான் அப்புறம் வரேன்!" என்று கிளம்ப முயன்ற ராஜாங்கத்தை விஸ்வநாதன் தடுத்து நிறுத்தி அங்கேயே இருக்கச் செய்தான். வேறு வழியில்லாமல் ராஜாங்கம் அவர்களுடன் அமர்ந்து கொண்டான்.
விஸ்வநாதனும், அவனுடைய நண்பர்களும் பல விஷயங்களைப் பற்றிப் பேசினர். அவற்றில் பலவற்றைப் பற்றி ராஜாங்கத்துக்கும் ஓரளவு தெரியும் என்றாலும் அவன் எதுவும் பேசாமல் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
சில சமயம் தலையாட்டியதையும், இலேசாகச் சிரித்ததையும் தவிர ரா ஜாங்கம் எதுவுமே சொல்லவில்லை.
"நீங்க என்ன சொல்றீங்க?" என்று ஓரிரண்டு முறை அவனிடம் யாராவது கேட்டபோதும் மௌனமாகச் சிரித்ததோடு சரி.
சற்று நேரம் கழித்து அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினான் ராஜாங்கம்.
மறுநாள் ராஜாங்கம் விஸ்வநாதனைச் சந்தித்தபோது, "என்னடா நேத்திக்கு என்னை உன் நண்பர்கள் கிட்ட மாட்டி விட்டுட்ட? அவங்க என்னைப் பத்தி ரொம்ப மட்டமா நினைச்சிருப்பாங்க!" என்றான் ராஜாங்கம்.
"அதுதான் இல்லை. அவங்க உன்னைப் பத்தி ரொம்ப உயர்வா சொன்னாங்க. 'உன் நண்பர் ரொம்பப் பணிவாவும், அடக்கமாவும் இருக்காரே!' ன்னு பாராட்டினாங்க" என்றான் விஸ்வநாதன்.
"நான் படிக்காதவன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்காது!"
"ஓரளவு தெரிஞ்சிருக்கும். உன் நண்பர் என்ன படிச்சிருக்கார்னு அவங்க கேட்டப்ப 'அவன் நம்மை மாதிரி காலேஜில படிச்சவன் இல்ல. பள்ளிப்படிப்போட நிறுத்திட்டான்'னு சொன்னேன். அதுக்கு அவங்க, 'அதனால என்ன? ஒரு விஷயத்தைப் பத்திக் கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசறவங்கதான் அதிகம். இவரு எவ்வளவு அடக்கமா இருந்தாரு! நல்ல பண்புள்ளவரா இருக்காரு. அதை விட வேற என்ன வேணும்?'னு சொன்னாங்க. எனக்கே ரொம்பப் பெருமையா இருந்ததுன்னா பாத்துக்கயேன்!" என்றான் விஸ்வநாதன்.
ராஜாங்கத்துக்கும் சற்றுப் பெருமையாகத்தான் இருந்தது.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 41
கல்லாமை
குறள் 403:கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
பொருள்:
கற்றவர்கள் முன் ஏதும் பேசாமல் இருந்தால், கல்லாதவர்களும் நல்லவர்கள்(மதிக்கத் தக்கவர்கள்) என்றே கருதப்படுவர்.
No comments:
Post a Comment