Tuesday, March 31, 2020

402. நட்சத்திரப் பேச்சாளர்!

தொலைக்காட்சிகளில் வரும் பேச்சு நிகழ்ச்சிகளை அதிகம் பார்ப்பவர்களுக்கு முருகேஷ் என்ற பெயர் நன்கு பரிச்சயமாகி இருக்கும்.

பட்டிமன்றங்கள் உட்படப் பல பேச்சு நிகழ்ச்சிகளில் முருகேஷ் ஒரு நட்சத்திரப் பேச்சாளர் என்று கூறலாம்.

முருகேஷ் பேசுவதற்காக ஒலிபெருக்கியின் முன் வந்து நின்ற உடனேயே கைதட்டல் அரங்கைப் பிளக்கும். அவர் பேசும்போது ஒவ்வொரு வரிக்கும் ஒரு பெரிய சிரிப்பொலி அல்லது கைதட்டல் கிடைக்கும்.

சில சமயம் அவர் கைதட்டலை எதிர்பார்த்துச் சில வினாடிகள் மௌனம் காப்பார். பார்வையாளர்கள் சமிக்ஞையைப் புரிந்து கொண்டு கை தட்டுவார்கள்.

முருகேஷ் படித்தவர் இல்லை. சிறிய அளவில் ஒரு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். எப்படியோ தொலைக்காட்சி சானல்களின் பேச்சு நிகழ்ச்சிகளில் இடம் பிடித்து, பட்டிமன்றப் பேச்சாளராக வளர்ந்து, ஒரு  நட்சத்திரப் பேச்சாளர் என்ற அளவுக்கு உயர்ந்து விட்டார்.

அவரது தொலைக்காட்சிப் புகழின் விளைவாக அவர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் பேச அழைக்கப்பட்டார்.

'சிடி சிடிசன்ஸ் கிளப்' ஆண்டு விழாவுக்கு சிறப்புப் பேச்சாளராக முருகேஷை அழைப்பது என்று அந்த கிளப்பின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. செயற்குழுவின் ஒன்பது உறுப்பினர்களில் மூன்று பேர் மட்டும் இந்த யோசனையை எதிர்த்தார்கள்.

"நம் கிளப் உறுப்பினர்களில் பெரும்பாலோர் நன்கு படித்தவர்கள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் முருகேஷின் பேச்சை ரசிப்பார்களா?" என்றார் ஒரு மூத்த உறுப்பினர்.

"தொலைக்காட்சி பார்ப்பவர்களில் படித்தவர்கள் இல்லையா? அவர்களெல்லாம் அவர் பேச்சை ரசிக்கிறார்களே! முருகேஷ் பேசப் போவது ஒரு பொதுவான தலைப்பில்தான். அதை எல்லோரும் ரசிப்பார்கள்" என்றார் செயலாளர்.

முருகேஷுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு 'விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்.'

"நீங்க வழக்கமா பேசற மாதிரி இயல்பாப் பேசுங்க!" என்றார் செயலாளர்.

முருகேஷ் அறிமுகப்படுத்தப்பட்டதும், பார்வையாளர்கள் அவரை மெலிதான கைத்தட்டலுடன் வரவேற்றனர்.

"எனக்கு விஞ்ஞானமும் தெரியாது, மெய்ஞ்ஞானமும் தெரியாது. அப்படீன்னா, நான் எப்படி இந்தத் தலைப்பைப் பத்திப் பேசப் போறேன்னு பாக்கறீங்களா?" என்று துவங்கிய முருகேஷ் சில வினாடிகள் மௌனமாக இருந்தார்.

பார்வையாளர்கள் கிணற்றில் கல் போட்டதுபோல் அமைதியாக இருந்தனர். இதுவே தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்திருந்தால், பார்வையாளர்கள் பெரிதாகச் சிரித்துத் தங்கள் எதிர்பார்ப்பை வெளிக்காட்டி இருப்பார்கள்!

"ஆனால் எங்கிட்ட வேற ஒரு ஞானம் இருக்கு. அந்த ஞானத்தைப் பயன்படுத்தித்தான் நான் பேசப் போறேன். அது என்ன ஞானம் தெரியுமா?"

மீண்டும் ஒரு இடைவெளி விட்டார் முருகேஷ். பார்வையாளர்களிடம் எந்தச் சலனமும் இல்லை.

"அதுதான் அஞ்ஞானம்!" என்றார் முருகேஷ் அகலமாகப் புன்னகை செய்தபடி.

'வழக்கமாக இந்த இடத்தில் பலத்த சிரிப்பும், பெரிய கைதட்டலும் எழுந்திருக்க வேண்டும். இவர்கள் என்ன இப்படி இருக்கிறார்கள் கல்லுளி மங்கன்களாக!' என்று மனதுக்குள் நொந்து கொண்டார் முருகேஷ்.  .

தொடர்ந்து அவர் பேசிய அரை மணி நேரமும் இப்படித்தான் கழிந்தது. விஞ்ஞானம் பற்றியும் தெரியாமல்,மெய்ஞ்ஞானம் பற்றியும் அறியாமல், ஏதோ ஒரு வகையில் பேசிப் பார்வையாளர்களைக் கவர்ந்து விடலாம் என்று நினைத்த முருகேஷுக்குப் பெரும் ஏமாற்றம்தான் கிடைத்தது.

சில நிமிடங்களில் அவர் தன்னம்பிக்கை தேய்ந்து, பதற்றம் ஏற்படத் தொடங்கியது. தட்டுத் தடுமாறியபடி ஒரு வழியாகப் பேசி முடித்தார்.

ஒரு மணி நேரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தும், அரை மணி நேரம் பேசுவதே அவருக்குப் பெரும் பாடாக இருந்தது. ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு, அரை மணி நேரம் ஆனதும் பேச்சை முடித்துக் கொண்டார்.

அவர் பேச்சை முடித்ததும் மரியாதை நிமித்தமான கைதட்டல் மட்டும் ஒப்புக்கு எழுந்தது.

'இனிமே ஆடியன்ஸ் வகை தெரியாம இப்படி வந்து மாட்டிக்கக் கூடாது!" என்று மனதுக்குள் தீர்மானம் செய்து கொண்டார் முருகேஷ்.

'செயற்குழு உறுப்பினர்களின் காட்டமான விமர்சனத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?' என்று கவலைப்பட்டபடியே நன்றி சொல்ல எழுந்தார் கிளப்பின்  செயலாளர்.

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 402:
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

பொருள்:
கற்றவர் அரங்கில் கல்லாதவர் பேச விரும்புவது மார்பகங்கள் வளராத பெண் காதலில் ஈடுபட விரும்புவது போன்றது.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்









No comments:

Post a Comment

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம். தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்ம...