Saturday, September 16, 2023

961. வேலை கிடைக்க ஒரு வழி

"இன்டர்வியூவுக்குப் போயிட்டு வந்தியே, என்ன ஆச்சு?" என்றார் மோகனரங்கன், தன் மகன் வாசுவிடம்.

"இன்டர்வியூ நல்லாத்தான் பண்ணி இருக்கேன். ரெண்டு மூணு வாரத்தில ரிசல்ட் தெரியும்" என்றான் வாசு.

"அவன் படிப்பை முடிச்சு ஆறு மாசம் ஆச்சு. இது மட்டும் எத்தனையோ இன்டர்வியூவுக்குப் போயிட்டு வந்துட்டான். ஆனா, வேலை கிடைக்க மாட்டேங்குதே!" என்றாள் மோகனரங்கத்தின் மனைவி கல்யாணி.

"கிடைக்கும்!" என்றார் மோகனரங்கம்.

"இந்த ஊரிலேயே பெரிய குடும்பம் நம்மோடது. உங்க அப்பாவும் சரி, நீங்களும் சரி, ஊர்ல எத்தனேயோ பேருக்குக் கணக்குப் பார்க்காம காசு, பணம், நெல்லு, அரிசின்னு வாரிக் கொடுத்திருக்கீங்க. நம்மகிட்ட உதவி கேட்டு வந்தவங்கல்லாம் இப்ப வசதியா வாழறாங்க. ஆனா, நாம நொடிச்சுப் போயிட்டோம்!" என்று புலம்பினாள் கல்யாணி.

"அதுக்கு என்ன செய்யணுங்கற? நாம யாருக்கு உதவி செஞ்சோமோ, அவங்ககிட்டே எல்லாம் போய்ப் பிச்சை கேக்கணுங்கறியா?" என்றார் மோகனரங்கம்.

"இந்தப் பையனுக்கு ஒரு வேலை கிடைச்சா, நம்ம கஷ்டம் கொஞ்சமாவது விடியும்னு பாக்கறேன். ஆனா, கிடைக்க மாட்டேங்குதே!" என்றாள் கல்யாணி, ஆதங்கத்துடன்

"அப்பா! என் நண்பன் ஒரு விஷயம் சொன்னான். நான் இன்டர்வியூவுக்குப் போயிட்டு வந்தேனே, அந்த கம்பெனியில நம்ம ஊர்க்காரர் ஒத்தர் டைரக்டரா இருக்காராம்!" என்றான் வாசு.

"யாரு?" என்றார் மோகனரங்கம்.

"கார்த்திகேயன். அவங்க அப்பா பேரு தர்மலிங்கம்னு சொன்னாங்க."

"ஓ, தர்மலிங்கம் பையனா? பாவம்! தர்மலிங்கம் சின்ன வயசிலேயே செத்துப் போயிட்டாரு. அவர் மனைவி தன்னோட ஒரு வயசுக் குழந்தையை வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டாங்க. எப்படியோ அந்தப் பையன் படிச்சு முடிச்சு வேலை கிடைச்சு, தன் அம்மாவை அழைச்சுக்கிட்டு இந்த ஊரை விட்டுப் போயிட்டான். அவன் ஒரு பெரிய பதவியில இருக்கான்னு கேக்க சந்தோஷமா இருக்கு!"

"அவர் சிபாரிசு பண்ணினா, வேலை கண்டிப்பாக் கிடைக்கும். அது ரொம்ப நல்ல கம்பெனி. அதில வேலை கிடைச்சா, வாழ்க்கையில செட்டில் ஆயிடலாம். உங்களுக்கு அவரைத் தெரியும் இல்ல, அப்பா?" என்றான் வாசு, தயக்கத்துடன்.

"அவங்க குடும்பம் கஷ்டப்பட்டதா உங்கப்பா சொன்னாரே, அந்தப் பையனோட படிப்புக்கு உதவி செஞ்சது உங்கப்பாதான்! பள்ளிக்கூடத்தில சேக்கறதிலேந்து, காலேஜ் ஃபீஸ் கட்டற வரையிலேயும், முழுக்க முழுக்க உதவினவரு உங்கப்பாதான்!" என்றாள் கல்யாணி.

"அப்புறம் என்னப்பா? நீங்க சென்னைக்குப் போய், கார்த்திகேயனைப் பார்த்து, அவரோட கம்பெனியில நான் இன்டர்வியூவுக்குப் போயிட்டு வந்திருக்கேன்னு சொன்னாப் போதுமே!" என்றான் வாசு, உற்சாகத்துடன்.

"சொன்னாப் போதும்தான். ஆனா, உங்க அப்பா சொல்ல மாட்டாரு!" என்றாள் கல்யாணி.

"நாம ஒத்தருக்கு உதவி செஞ்சிருக்கோங்கறதுக்காக, அவங்ககிட்ட போய் பதிலுக்கு ஒரு உதவி கேக்கறதைப் போல அவமானமான விஷயம் எதுவும் இல்ல. உனக்கு அந்த வேலை அதுவா கிடைச்சா கிடைக்கட்டும். இல்லேன்னா, வேற வேலைக்கு முயற்சி பண்ணு!" என்றார் மோகனரங்கம், உறுதியான குரலில்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 961:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

பொருள்: 
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும் கூட, அவற்றால் தனது பெருமை குறையுமானால், அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...