Sunday, September 17, 2023

962. புதிய வாய்ப்புகள்!

"இப்பல்லாம் குளோப் டிவியில நடக்கற பட்டிமன்றங்கள்ள உனக்குக் கண்டிப்பா ஒரு இடம் உண்டுன்னு ஆயிடுச்சு. வாழ்த்துக்கள், குமரன்!" என்றார் குமரன் பணி புரிந்த நிறுவனத்தின் பொது மேலாளர்.

"ரொம்ப நன்றி, சார்!" என்றான் குமரன்.

"இனிமே நீ இது மாதிரி நிகழ்ச்சிகளுக்குப் போகணும்னா, உனக்கு லீவ் கொடுக்கணும்னு உன்னோட டிபார்ட்மென்ட் மானேஜர்கிட்ட சொல்லி இருக்கேன்."

"ரொம்ப நன்றி, சார்!" என்றான் குமரன், திரும்பவும். 

ன்று குமரன் அலுவலகத்தில் இருந்தபோது, அவனைப் பொது மேலாளர் அழைப்பதாக, பியூன் வந்து அழைத்தான்.

பொது மேலாளர் அறைக்குச் சென்றதும், அங்கே அமர்ந்திருந்த ஒருவரைக் குமரனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பொது மேலாளர்.

"குமரன்! இவர் வினோத்குமார். நம்ம கம்பெனியோட மார்க்கெடிங் கன்சல்டன்ட். இவர் உங்கிட்ட ஏதோ சொல்ற விரும்பறார். கேளு!" என்றார் பொது மேலாளர்.

"மிஸ்டர் குமரன்! உங்க நிகழ்ச்சிகளை நான் பார்த்திருக்கேன். நீங்க நல்லாப் பேசறீங்க!" என்றார் வினோத்குமார்.

"நன்றி சார்!"

"இப்ப, நீங்க நம்ம கம்பெனிக்கு ஒரு அஸெட் ஆயிட்டீங்க. நீங்க பிரபலமா இருக்கறது நம்ம கம்பெனிக்கு நல்ல பப்ளிசிடியைக் கொடுத்திருக்கு. அதனால, உங்களுக்கு இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள் கிடைச்சு, உங்களுக்கு இன்னும் அதிகப் புகழ் கிடைக்கணும்னு கம்பெனி விரும்புது. அதனால, வேற சில தொலைக்காட்சிகள்ள நடக்கற சில  நிகழ்ச்சிகள்ள உங்களுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்க நான் முயற்சி செஞ்சேன்!" என்றார் வினோத்குமார்.

"நான் சொல்லித்தான் அவர் இதை செஞ்சாரு!" என்றார் பொது மேலாளர்.

"ஆனா, அவங்க நீங்க ரொம்ப சீரியசானவர்னும், அது மாதிரி நிகழ்ச்சிகளுக்கு நீங்க சரியா வர மாட்டீங்கன்னும் சொல்லிட்டாங்க."

"சார்! நான் சீரியசானவனாங்கறது எனக்குத் தெரியாது. ஆனா, பட்டிமன்றத்தில நகைச்சுவை இல்லாம பேச முடியாது. நானும் எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு நகைச்சுவையாப் பேசறேன். மக்களும் அதை ரசிக்கறாங்க. நீங்க எந்த நிகழ்ச்சியைப் பத்தி சொல்றீங்கன்னு எனக்குத் தெரியல!" என்றான் குமரன்.

"நீங்க சீரியசானவர்னா, உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லைன்னு அர்த்தம் இல்ல. பட்டிமன்றங்கள்ள, நீங்க நகைச்சுவையாப் பேசறீங்க, அதை மக்கள் ரசிக்கறாங்கங்கறது உண்மைதான். ஆனா, இதில உங்களுக்கு ஒரு சாசுரேஷன் வந்துடுச்சு. வருஷத்துக்கு நாலைஞ்சு தடவை உங்களைக் கூப்பிடறாங்க. அவ்வளவுதான். அதுக்குத்தான், உங்களை வேற நிகழ்ச்சிகள்ள பங்கேற்க வைக்க முயற்சி செய்யறோம்" என்றார் பொது மேலாளர்.

"என்ன மாதிரி நிகழ்ச்சிகள், சார்?"

"'ஊர் சிரிக்குது!' மாதிரி நிகழ்ச்சிகள்."

"சார்! அது மாதிரி நிகழ்ச்சிகள் எனக்குச் சரியா வராது சார்!"

"அந்த நிகழ்ச்சியை நடத்தறவங்களும் எங்கிட்ட அப்படித்தான் சொன்னாங்க. உங்களுக்குக் கொஞ்சம் டிரெயினிங் கொடுத்தா சரியாயிடும்" என்றார் வினோத்குமார்.

"எதுக்கு சார்?"

"குமரன்! அந்த நிகழ்ச்சியில நீ கலந்துக்கிட்டா, வாராவாரம் டிவியில வருவே. நிறையப் பணம் கிடைக்கும். அதை விட, உனக்கு எவ்வளவு புகழ் வரும்னு நினைச்சுப் பாரு. நீ ஆஃபீசுக்கே வர வேண்டாம். உன்னோட சம்பளம் மாசாமாசம் உன்னோட அக்கவுன்ட்டுக்கு வந்துடும். இன்க்ரிமென்ட் ஆடோமாடிக்கா வரும். புரொமோஷன் எல்லாம் சீக்கிரமே வரும். இவ்வளவு புகழோட இருக்கற நீ, எங்க கம்பெனியில வேலை செய்யறேங்கற பெருமை மட்டும் எங்களுக்குப் போதும். உன் ஃபோட்டோவை நம் கம்பெனி விளம்பரங்கள்ள பயன்படுத்திப்போம். அவ்வளவுதான். மிஸ்டர் வினோத் ரெண்டு மூணு மாசத்தில உனக்கு டிரெயினிங் கொடுத்து, உன்னை அவங்க செலக்ட் பண்ற மாதிரி தயார் செஞ்சுடுவார். என்ன சொல்ற?" என்றார் பொது மேலாளர்.

"சார்! எங்கப்பா ஒரு தமிழறிஞர். அவரைப் பார்த்துதான் எனக்குத் தமிழ்ல ஆர்வம் வந்தது. பட்டிமன்ற நிகழ்ச்சிகள்ள கலந்துக்கற வாய்ப்பு கிடைச்சது.  குளோப் தொலைக்காட்சியில வாய்ப்புக் கிடைச்சதும், எனக்குப் பேரும் புகழும் கிடைச்சது. நீங்க சொல்ற மாதிரி, வருஷத்துக்கு நாலைஞ்சு தடவைதான் வாய்ப்புக் கிடைக்குதுன்னாலும், எனக்கு அதில ஒரு திருப்தி இருக்கு. என் பேச்சை ரசிக்கிறவங்க, என் மேல நல்ல மதிப்பு வச்சிருக்காங்க. நீங்க சொல்ற 'ஊர் சிரிக்குது' நிகழ்ச்சியை நான் பார்த்திருக்கேன். அதை நிறைய பேர் பார்க்கறாங்கறது உண்மையாக இருக்கலாம். ஆனா, எனக்கு அது ஒரு தரக்குறைவான நிகழ்ச்சியாத் தோணுது. அதில நான் கலந்துக்கிட்டா, எனக்கு அதிகப் பணமும், புகழும் கிடைக்கலாம். ஆனா, அந்த மாதிரிப் புகழை நான் விரும்பல. 'இவனோட அப்பா ஒரு தமிழறிஞர், ஆனா, இவன் இப்படிப்பட்ட மட்டமான நிகழ்ச்சிகள்ள கலந்துக்கறானே!'ன்னு யாரும் நினைக்கறதை நான் விரும்பல. என்னை மன்னிச்சுடுங்க சார்!" என்றான் குமரன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 962:
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

பொருள்: 
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்ய மாட்டார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...