Monday, August 7, 2023

960. ஸ்டாஃப் மீட்டிங்

"ஸ்டாஃப் மீட்டிங்கில நீ பேசினதை யாரும் ரசிக்கல!" என்றான் பாலு, தன் சக ஊழியன் ரமேஷிடம்.

"ஏன், தப்பா ஏதாவது பேசினேனா என்ன?" என்றான் ரமேஷ்.

"ஸ்டாஃப் மீட்டிங்ல நமக்கு ஏதாவது பிரச்னைகள் இருந்தாலோ, ஆலோசனைகள் இருந்தாலோ, அதையெல்லாம் சொல்லச் சொன்னாங்க. மத்தவங்க அப்படித்தான் செஞ்சாங்க. நீ மட்டும்தான் உன்னோட பெருமைகளைப் பத்திப் பேசின." 

"எனக்கு சொல்றதுக்குப் பிரச்னைகள், ஆலோசனைகள் எதுவும் இல்லை. அதனால என்னோட சாதனைகளைப் பத்திப் பேசினேன். அட்மினிஸ்டிரேஷன் டிபார்ட்மென்ட்ல இருந்தப்ப நல்ல நடைமுறைகளைக் கொண்டு வந்தேன். இப்ப சேல்ஸ் எக்சிக்யூடிவா இருக்கறப்ப அதிகமா விற்பனை செய்யறேன். பல மாசங்கள் நான்தான் டாப்ல இருக்கேன். இதைச் சொல்லிக்கறதில என்ன தப்பு இருக்கு?" என்றான் ரமேஷ்.

"அதை மட்டுமா சொன்ன? ஆஃபீசுக்கு வெளியில நீ செய்யற காரியங்களைப் பத்தியும்தான் பேசின! ஒரு கிளப்புக்கு செகரட்டரியா இருக்கறது, விடுமுறை நாட்கள்ள சமூக சேவை செய்யறது, இது மாதிரி பல விஷயங்களைப் பத்திப் பேசினியே!"

"நான் சொன்னதெல்லாம் உண்மைதானே?"

"உண்மையா இருக்கலாம். ஆனா, உன்னோடபெருமைகளைப் பத்தி நீயே பேசிக்கிட்டா, மத்தவங்க எப்படி அதை ரசிப்பாங்க? கம்பெனி விஷத்திலேயே, நீ செஞ்சதை மத்தவங்கதான் சொல்லிப் பாராட்டணும். அதையெல்லாம் நீயே சொல்லிக்கிட்டதும் இல்லாம, உன் தனிப்பட்ட வாழ்க்கையில செஞ்ச விஷயங்ளைப் பத்தியும் பெருமையாப் பேசின. நீ பேசினதைக் கேட்டுட்டு சில பேர் என்ன சொன்னாங்க தெரியுமா"

"என்ன சொன்னாங்க?"

"என்ன, இவ்வளவு அல்பத்தனமா இருக்கான்? இவன் பேசறதைக் கேட்டா, கௌரவமான குடும்பத்தில பொறந்தவன் மாதிரி தெரியலியேன்னு பேசிக்கிட்டாங்க!" என்றான் பாலு, சற்றுத் தயக்கத்துடன்.

"யார் அப்படிப் பேசினது? என் குடும்பத்தைப் பத்தி அவங்களுக்கு என்ன தெரியும்?" என்றான் ரமேஷ், கோபத்துடன்.

"ரமேஷ்! நான் சொல்றதைப் புரிஞ்சுக்க. மத்தவங்க நம்மகிட்ட சிலவற்றை எதிர்பாக்கறாங்க. நமக்கு நல்லது நடக்கணும்னா, கொஞ்சம் பணிவா, அடக்கமா இருக்கணும். நம்மோட பெருமையைப் பத்திப் பேசக் கூச்சப்படணும். ஒத்தன் பணிவா, அடக்கமா இருந்தா, அவன் நல்ல குடும்பத்தில பொறந்திருக்கான், அதான் பண்போட இருக்கான்னு சொல்லுவாங்க. அப்படி இல்லேன்னா, நல்ல குடும்பத்தில பொறந்திருக்க மாட்டான்னுதான் பேசுவாங்க. இது உலகத்தோட இயல்பு. உன்னோட குறையை நான் எடுத்துச் சொல்றது உனக்குப் பிடிக்காதுன்னாலும், இதை நீ புரிஞ்சுக்கணும்னுதான் உங்கிட்ட இதைச் சொல்றேன்" என்றான் பாலு. 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை

குறள் 960:
நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.

பொருள்: 
ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால், அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நல்ல குடியில் பிறந்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், அவனிடம் பணிவு இருக்க வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...