Friday, September 15, 2023

950. சாதாரண ஜுரம்!

"மூணு நாள் ஆகியும், ஜுரம் குறையல. அதனால, நீங்க அட்மிட் ஆயிடறது நல்லது. டிரிப்ஸ் ஏத்தினா, மாத்திரையை விட வேகமா பலன் கிடைக்கும். என்ன மாதிரி ஜுரம்ங்கறதைக் கண்டுபிடிக்க, பிளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்துடலாம்" என்றார் டாக்டர்.

"சரி சார். அட்மிட் ஆகிக்கறேன்!" என்றான் ராகவ்.

அட்மிட் ஆனதும், மனைவி கௌரிக்கு ஃபோன் செய்து, விஷயத்தைச் சொன்னான் ராகவ்.

"சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க? வீட்டிலேந்து கொடுத்தனுப்பலாம்னா, ஆள் யாரும் இல்லை. அத்தையை வீட்டில தனியா விட்டுட்டு, என்னாலயும் வர முடியாது" என்றாள் கௌரி.

"ஆஸ்பத்திரியிலேயே கான்ட்டீன் இருக்கு. இங்கேயே கொண்டு வந்து கொடுத்துடுவாங்க. இங்கேயே சாப்பிட்டுக்கறேன்."

ராகவுக்கு இரத்தப் பரிசோதனை செய்தார்கள். அவன் மணிக்கட்டில் ஊசி குத்திக் குழாய் மூலம் ஏதோ திரவத்தை ஏற்றினார்கள். அதுதான் மருந்து போலும்! ஆனால், பார்ப்பதற்குத் தண்ணீர் மாதிரிதான் இருந்தது.

மணிக்கட்டில் மருந்தை ஏற்றி விட்டு, அவனைத் தனியாக விட்டு விட்டு, எல்லோரும் போய் விட்டாலும், அடிக்கடி யாராவது அறைக்குள் வந்து அவனுடைய உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு ஆகியவற்றை அளந்து, அளவுகளை அவன் படுக்க வைக்கப்பட்டிருந்த கட்டிலின் கால்மாட்டில் தொங்கிய அட்டையில் குறித்து விட்டுப் போனார்கள்.

இரண்டு மூன்று முறை அவன் கழிவறைக்குச் செல்ல வேண்டி இருந்தபோது, கட்டிலுக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த பொத்தனை அழுத்தினான். உள்ளே வந்த நர்ஸ் அவன் மணிக்கிட்டில் செருகி இருந்த ஊசியை அகற்றி, அவனுக்குத் தற்காலிகமாக விடுதலை அளித்தாள். 

அவன் திரும்ப வந்து படுத்துக் கொண்டு பொத்தானை அழுத்தியதும், மீண்டும் அவன் மணிக்கட்டில் ஊசியைச் செருகி விட்டுப் போனாள்.

ரவு எட்டு மணிக்குப் புதிதாக வந்த நர்ஸ், "ஆரானும் ராத்திரி உங்களுக்குத் துணையா இருக்கப் போறது?" என்றாள், அதட்டும் குரலில்.

"ஆரும் இல்லை" என்று பதிலளித்த ராகவ், மனதுக்குள், 'நான் என்ன சின்னக் குழந்தையா, துணைக்கு யாராவது இருக்க வேண்டும் என்பதற்கு?' என்று நினைத்துக் கொண்டான்.

"ராத்திரியில கண்டிப்பா ஒத்தர் கூட இருக்கணும். இது ஆஸ்பத்திரி ரூலாக்கும்!" என்றாள் நர்ஸ்.

'இல்லாவிட்டால் என்னை டிஸ்சார்ஜ் செய்து விடுவீர்களாக்கும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ராகவ், கௌரிக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னான்.

"இப்படிச் சொல்லுவாங்கன்னு எனக்குத் தெரியும். அதனாலதான், உங்க தங்கைக்கு ஃபோன் பண்ணி, நம்ம வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கேன். அவ இங்கே இருந்து, அத்தையைப் பார்த்துப்பா. நான் வரேன் அங்கே!" என்றாள் கௌரி, ஏதோ உல்லாசப் பயணத்துக்குக் கிளம்புவது போன்ற உற்சாகத்துடன்.

இரவு சுமார் ஒன்பதரை மணிக்கு, மருத்துவமனைக்கு கௌரி வந்தாள். அதற்குள், நர்ஸ் இரண்டு மூன்று முறை அறைக்கு வந்து, "ஆரும் வரலியா?" என்று கவலையுடன் விசாரித்து விட்டுப் போய்விட்டாள்.

டுத்த நாள் காலை ஆறு மணிக்கு, ராகவின் அறைக்கு காப்பி வந்தது.

"உனக்கு வேணுமா?" என்றான் ராகவ், கௌரியிடம்.

கௌரி பதில் சொல்வதற்குள், "பேஷன்ட்டுக்கு மட்டும்தான் நாங்க கொடுப்போம். கெஸ்ட்டுக்கு வேணும்னா, எக்ஸ்ட்ரா பே பண்ணணும்!" என்றான் காப்பி கொண்டு வந்த கான்ட்டீன் பையன், அவசரமாக.

"வேண்டாம். நான் வீட்டுக்குப் போய்க் குடிச்சுக்கறேன்!" என்றாள் கௌரி.

சற்று நேரத்தில், கௌரி வீட்டுக்குக் கிளம்ப யத்தனித்தபோது, அங்கே வந்த நர்ஸ், "அவரோட பிளட் டெஸ்ட் ரிபோர்ட் வந்துடுச்சு. டாக்டரைப் பாத்துட்டுப் போயிடுங்க!" என்றாள், கௌரியிடம்.

"ரிபோர்ட் என்ன சொல்லுது - மலேரியாவா, டெங்குவா?" என்றான் ராகவ்.

நர்ஸ் அவனை முறைத்துப் பார்த்து விட்டு, "அதை டாக்டர் சொல்லும்" என்று சொல்லி விட்டுப் போனாள்.

எட்டு மணிக்கு, ராகவுக்குக் காலைச் சிற்றுண்டி வந்தது. ஆனால், அதுவரை டாக்டர் வரவில்லை.

"உங்களுக்கு வேணுமா? நூற்றைம்பது ரூபா ஆகும்!" என்றான் கான்ட்டீன் பையன், கௌரியைப் பார்த்து.

"வேண்டாம். இப்ப நான் கிளம்பிடுவேன்!" என்றாள் கௌரி, கைக்கடிகாரத்தைக் கவலையுடன் பார்த்தபடியே.

ராகவ் காலைச் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தபோது, "ராத்திரி பூரா தூக்கமே வரல. இந்தக் குறுகலான பெஞ்ச்சில புரண்டு கூடப் படுக்க முடியல. முதுகெல்லாம் வலிக்குது. இவ்வளவு நேரம் ஆச்சு. டாக்டர் இன்னும் வரல. நான் இன்னும் காப்பி கூடக் குடிக்கல. காலையில ஆறு மணிக்கெல்லாம் காப்பி குடிச்சுப் பழகியாச்சு. இவ்வளவு நேரம் காப்பி குடிக்காம இருக்கறது ஒரு மாதிரியா இருக்கு!" என்றாள் கௌரி.

"காப்பி கொண்டு வரச் சொல்லட்டுமா? எவ்வளவு கேக்கறாங்களோ, கொடுத்துடலாம்!" என்றான் ராகவ்.

"வேண்டாம், வேண்டாம். தண்ணியா காப்பி கொடுத்துட்டு, அதுக்கு அம்பது அறுபதுன்னு கறந்துடுவாங்க. ஏற்கெனவே உங்களுக்கான ஆஸ்பத்திரி செலவு வேற ஆட்டோ மீட்டர் மாதிரி நிமிஷத்துக்கு நிமிஷம் ஏறிக்கிட்டிருக்கு!" என்றாள் கௌரி, ராகவைக் குற்றம் சாட்டுவது போல்.

ராகவ் அவள் கூறியதைப் பொருட்படுத்தாமல், சிற்றுண்டியை ரசித்து உண்பதில் கவனத்தைச் செலுத்தினான்.

ஒன்பதரை மணிக்கு டாக்டர் வந்தார். கட்டிலின் கால் பகுதியில் தொங்க விடப்பட்டிருந்த ரிபோர்ட்டை வேகமாகப் படித்து விட்டு, "உங்க பிளட் டெஸ்ட் ரிபோர்ட் வந்துடுச்சு. ஒண்ணும் இல்ல, சாதாரண ஜுரம்தான் ஆனா, மாத்திரைக்குக் கட்டுப்படாம இருந்திருக்கு. மாத்திரை ரத்தத்தில கலந்தாதான் வேலை செய்யும். ஆனா, நீங்க சாப்பிட்ட மாத்திரைகளை உங்க உடம்பு ரிஜக்ட் பண்ணிடுச்சு போல இருக்கு. இப்ப டிரிப்ஸ் ஏத்தும்போது, மருந்து நேரா ரத்தத்தில கலந்துடும். அதனால மருந்து வேலை செஞ்சு, ஜுரம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ஆனா, இன்னும் ரெண்டு நாளைக்கு டிரிப்ஸ் ஏத்தணும். நாளைக்கு சாயந்திரம்தான் உங்களை டிஸ்சார்ஜ் பண்ண முடியும்னு நினைக்கறேன்" என்று சொல்லி விட்டுப் போனார்.

"இதைக் கேக்கறதுக்குத்தானா இத்தனை நேரம் உட்கார்ந்திருந்தேன்! பசி வயித்தைக் கிள்ளுது. காலையிலேந்து காப்பி கூடக் குடிக்கல!" என்று எரிச்சலுடன் கூறியபடியே, வீட்டுக்குக் கிளம்பினாள் கௌரி.

"வீட்டுக்குப் போய் சாப்பிட்டுட்டு, ரெஸ்ட் எடுத்துக்க. இன்னிக்கு ராத்திரி வேற வரணும் இல்ல?" என்றான் ராகவ்.

அவனை முறைத்து விட்டுப் போனாள் கௌரி.

ஆனால் அன்றிரவு, கௌரி, தான் வீட்டில் இருந்து கொண்டு, ராகவின் தங்கை பத்மாவை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டாள்.

கௌரியைப் போல் இல்லாமல், பத்மா, அன்று இரவு பால், மறுநாள் காலை காப்பி, சிற்றுண்டி என்று எல்லாவற்றையும் வாங்கி அருந்தி விட்டுத்தான் போனாள்.

'கௌரிக்கு விஷயம் தெரிந்தால், குய்யோ முறையோ என்று கத்துவாள், பாவம்!' என்று நினைத்துக் கொண்டான் ராகவ்.

டுத்த நாள் மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டுக்கு வந்தான் ராகவ்.

"மூணு நாள் ஆஸ்பத்திரி வாசம், உங்களைப் பார்த்துக்க டாக்டர், நர்ஸ்கள்னு ஒரு படை, டிரிப்ஸ் ஏத்த பாட்டில் பாட்டிலா மருந்துகள், ராத்திரி கூட இருக்க ரெண்டு பேர், எல்லாத்துக்கும் மேல ஆயிரக்கணக்கில பில்! ஒரு சாதாரண ஜுரத்துக்கு இவ்வளவா!" என்று அலுத்துக் கொண்டாள் கௌரி.

"நீயே இவ்வளவு அலுத்துக்கறியே, இந்த பில்லுக்கான பணத்தில பெரும்பாலான தொகையைக் கொடுக்கப் போற இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்காரன் எவ்வளவு அலுத்துப்பான்!" என்றான் ராகவ்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 95
மருந்து

குறள் 950:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.

பொருள்: 
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிலிருந்து துணைபுரிபவர் என மருத்துவ முறை நான்கு வகையாக அமைந்துள்ளது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...