Sunday, August 6, 2023

959. குடும்பப் பின்னணி

"ஒத்தரை வேலைக்கு எடுக்கறதுக்கு முன்னால, அவரோட குடும்பப் பின்னணியைத் தெரிஞ்சுக்கறது அவசியம். அதனால, ஒத்தரை இன்டர்வியூவுக்குக் கூப்பிடறதுக்கு முன்னால, அவரோட குடும்பப் பின்னணி பத்தி விசாரிச்சுட்டுத்தான் கூப்பிடணும்" என்றார் நிர்வாக இயக்குனர் வேலாயுதம்.

"குடும்பப் பின்னணி பத்தி அவங்களோட ரெஸ்யூமேவிலேய இருக்குமே சார்?" என்றார் பொது மேலாளர் நந்தகோபால்.

"அது போதாது. அவரோட பெற்றோர்கள் யாரு, எப்படிப்பட்டவங்கன்னு விசாரிக்கணும். முடிஞ்சா, அவங்க பரம்பரை பத்தியும் விசாரிக்கணும்."

"அது எதுக்கு சார்? அதுவும் இந்தக் காலத்தில பரம்பரை பத்தி எல்லாம் விசாரிக்கறது சரியா இருக்குமா சார்?" என்றார் நந்தகோபால், தயக்கத்துடன்.

"ஒத்தரோட அப்பா, தாத்தா எப்படிப்பட்டவங்க, என்ன செஞ்சாங்க, அவங்களைப் பத்தி மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கறது கஷ்டம் இல்லையே? நம்மால முடியலேன்னா, ஏதாவது ஒரு ஏஜன்சி மூலமா இதைச் செய்யலாம்" என்றார் வேலாயுதம்.

அதற்குப் பிறகும் நந்தகோபாலிடம் தயக்கம் இருப்பதை கவனித்த வேலாயுதம், "உங்களை வேலைக்கு எடுக்கறதுக்கு முன்னால, உங்க குடும்பப் பின்னணி பத்தி விசாரிச்சிருக்கேன்!" என்றார், சிரித்தபடி.

"நாம இன்டர்வியூவுக்குக் கூப்பிடறவங்களோட குடும்பப் பின்னணியை விசாரிக்கணும்னு முன்னே எல்லாம் சொல்லுவீங்க. இப்ப ஏன் சார் அதை வேண்டாம்னு சொல்றீங்க?" என்றார் நந்தகோபால். 

"அது அவசியம் இல்லைங்கறதாலதான்!" என்றார் வேலாயுதம்.

"குடும்பப் பின்னணி முக்கியம்கற உங்க கருத்தை மாத்திக்கிட்டீங்களா, சார்?"

"மாத்திக்கலை. இன்டர்வியூவில ஒத்தர் பேசறதிலிருந்தே அவரோட குடும்பப் பின்னணியைத் தெரிஞ்சுக்கலாம்னு புரிஞ்சுக்கிட்டேன். அதனாலதான்!"

"எப்படி சார்?"

"ஒத்தரை இன்டர்வியூ பண்ணும்போது, அவர் எப்படிப் பேசறார்ங்கறதை கவனிப்பேன். சில பேர் ரொம்பப் பணிவா, கண்ணியமா, நேர்மையா, பொருத்தமாப் பேசுவாங்க. அவங்களோட குடும்பப் பின்னணி ரிப்போர்ட்டைப் பார்த்தா, அவங்க குடும்பப் பின்னணி சிறப்பானதா இருக்கும். பொருத்தமில்லாமலோ, போலியாவோ, பண்பாடு இல்லாமலோ பேசறவங்களோட குடும்பப் பின்னணி ரிப்போர்ட்டைப் பார்த்தா, அது அவ்வளவு நல்லா இருக்காது. ஒத்தர் பேசறதை வச்சே அவர் நல்ல குடியில பிறந்தவரா இல்லையாங்கறதை சுலபமாக் கண்டறிய முடியும்போது, எதுக்கு குடும்பப் பின்னணியை விசாரிக்கணும்? அதுதான் தேவையில்லைன்னு சொன்னேன்!" என்றார் வேலாயுதம்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை

குறள் 959:
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

பொருள்: 
விளைந்த பயிரைப் பார்த்தாலே, அது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல், ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே, அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...