"யார் அந்த மயக்கு மோகினி?" என்றார் மாணிக்கம்
"அவதாம்ப்பா, ஊர்ல நிறைய பேரை மயக்கி வச்சிருக்காளே, அந்த நீலாதான்!"
"நான் போய் உன் புருஷனைப் பார்த்துப் பேசி வழிக்குக் கொண்டு வரேன்" என்றார் மாணிக்கம்.
இரண்டு நாட்கள் கழித்து மீனாட்சியின் வீட்டுக்கு வந்த மாணிக்கம், "நான் மாப்பிள்ளைகிட்ட பேசிட்டேன். அவர் தன் தப்பை உணர்ந்துட்டாரு. இனிமே எல்லாம் சரியாயிடும்!!" என்று சொல்லி விட்டுப் போனார்.
அதற்குப் பிறகு, மீனாட்சியின் கணவன் கதிர் சில நாட்கள் வீட்டில் இருந்தான்.
'பரவாயில்லையே! மாமனார் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்துத் தன்னை மாத்திக்கிட்டாரே!' என்று நினைத்தாள் மீனாட்சி.
ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, கதிர் மீண்டும் நீலாவின் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தான்.
மீனாட்சி மீண்டும் தன் தந்தையிடம் சென்று முறையிட்டாள்.
"நான் உன் புருஷன்கிட்ட பேசினப்ப அவர் எங்கிட்ட நல்லாத்தான் பேசினாரு. ஆனா, திரும்பவும் அதே மாதிரி செய்யறாருன்னா, அவர் அறிவு அவர் வசம் இல்லேன்னு அர்த்தம். அவர் பெண் மயக்கத்தில இருக்காரு. அவரா மனசு மாற மாட்டாரு. அதனால, அந்த நீலாவே அவரை விரட்டி விட்டாதான் அவர் திரும்பி வருவாரு. நான் யார் மூலமாவது அந்த நீலாகிட்ட பேசிப் பாக்கறேன். பணம் கொடுத்தோ, மிரட்டியோ அவளை வழிக்குக் கொண்டு வரணும். அது ஒண்ணுதான் வழி!" என்றார் மாணிக்கம்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)
குறள் 918:
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.
No comments:
Post a Comment