"சாமி, உங்ககிட்ட தனியாப் பேசணும்" என்றார் வந்தவர்.
சுவாமிஜி தன் அறையிலிருந்த உதவியாளரை வெளியே போகச் சொல்லி சைகை காட்டினார்.
"இப்ப சொல்லுங்க!" என்றார் சுவாமிஜி.
"சாமி! என் பெயர் புருஷோத்தமன். நேத்து உங்க பேச்சைக் கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது."
"இதைச் சொல்லத்தான் எங்கிட்ட தனியாப் பேசணும்னீங்களா?" என்றார் சுவாமிஜி, சிரித்துக் கொண்டே.
"உங்க பேச்சில நீங்க சொர்க்கம், நரகம் பற்றிப் பேசினீங்க. நரகம்னு ஒண்ணு உண்மையாவே இருக்கா?" என்றார் புருஷோத்தமன்.
"சொர்க்கம்னு ஒண்ணு உண்மையாவே இருக்கான்னு கேக்காம, நரகத்தைப் பத்தி மட்டும் கேக்கறீங்களே!"
"சொர்க்கத்துக்குப் போகிற மாதிரி நல்ல காரியங்கள் செஞ்சிருந்தாதானே சாமி, சொர்க்கம்னு ஒண்ணு இருக்கான்னு கவலைப்படணும்?" என்றார் புருஷோத்தமன், பெருமூச்சுடன்.
"அப்படின்னா, நரகத்துக்குப் போகிற மாதிரியான காரியங்ளை செஞ்சிருக்கறதா நினைக்கறீங்க போல இருக்கு!"
புருஷோத்தமன் மௌனமாக இருந்தார்.
"நீங்க எங்கிட்ட எதையோ கேக்க வந்தீங்க. அதைக் கேக்க விரும்பினா, கேக்கலாம்!" என்றார் சுவாமிஜி.
"சாமி! எனக்குக் கல்யாணம் ஆகிக் குடும்பம் இருக்கு. அப்படி இருந்தும், ஒரு விலைமகள் மேல ஆசைப்பட்டுக் கொஞ்ச காலம் அவ மயக்கத்திலேயே இருந்தேன்."
சுவாமிஜி கண்களை மூடிக் கொண்டார்.
"இதை நான் செஞ்சதுக்கு, நான் நிச்சயம் நரகத்துக்குப் போவேன் இல்ல?"
"போக மாட்டீங்க!" என்றார் சுவாமிஜி.
"என்ன சாமி சொல்றீங்க? எப்படி இது? நான் என் தப்பை உணர்ந்ததால, எனக்குப் பாவத்திலேந்து விடுதலை கொடுத்திட்டீங்களா?" என்றார் புருஷோத்தமன், வியப்புடன்.
"பாவத்திலேந்து உங்களை விடுவிக்க நான் யார்? நீங்க நரகத்துக்குப் போக மாட்டீங்கன்னு ஏன் சொல்றேன்னா, நீங்க ஏற்கெனவே நரகத்தில இருந்துட்டு வந்துட்டீங்க!"
"எனக்குப் புரியலையே சாமி!"
"நீங்க விலைமகளோட இருந்தீங்களே, அதுவே நரகம்தான். நீங்க அதை சொர்க்கம்னு நினைச்சுப் போயிருந்தாலும், உண்மையில அது நரகம்தான். அப்புறம் இன்னொரு நரகம் எதுக்கு உங்களுக்கு?" என்றார் சுவாமிஜி, கண்களைத் திறக்காமலே.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)
குறள் 919:
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
No comments:
Post a Comment