Tuesday, August 8, 2023

913. துணிக்கடை பொம்மை!

"உனக்கு ஏண்டா இந்த விபரீத ஆசை?" என்றான் மூர்த்தி.

"விபரீத ஆசை என்ன? சாதாரணமா எல்லாருக்கும் வர ஆசைதானே?" என்றான் உமாநாத் 

"எல்லாருக்கும் வர ஆசைன்னு சொல்லாதே. சில பேருக்கு வரலாம். அவங்கள்ள கூட பல பேர் அந்த ஆசையை அடக்கிப்பாங்க."

"நான் அந்த சில பேர்ல ஒத்தன்னு வச்சுக்கயேன்!"

"சரி. அப்புறம் உன் இஷ்டம். எங்கே போகப் போற?" என்றான் மூர்த்தி.

"ஏன், எங்கேன்னு தெரிஞ்சா, நீயும் அங்கே போகலாம்னுட்டா?" என்றான் உமாநாத், சிரிப்புடன்.

"சேச்சே! எனக்கு அப்படிப்பட்ட எண்ணமெல்லாம் கிடையாது. எங்கேயாவது போய் மாட்டிக்கப் போறியேன்னு கேட்டேன்."

"கவலைப்படாதே! என் ஃபிரண்ட் ஒத்தனுக்கு இந்தப் பழக்கம் உண்டு. அவன் என்னை அங்கே அழைச்சுக்கிட்டுப் போறேன்னு சொல்லி இருக்கான்."

"ஆல் தி பெஸ்ட்!" என்றான் மூர்த்தி.

"எப்படிடா இருந்தது?" என்றான் மூர்த்தி, உமாநாத்தை அடுத்த நாள் சந்தித்தபோது.

"என்னத்தைச் சொல்ல? எதையோ எதிர்பார்த்துப் போனேன்!" என்றான் உமாநாத், ஏமாற்றத்துடன்.

"ஏன்? உனக்கு அவளைப் பிடிக்கலையா?"

"எனக்குப் பிடிச்சு என்ன பயன்? அவளுக்குப் பிடிக்க வேண்டாமா? இயந்திரத்தனமா நடந்துக்கிட்டா. எனக்கு இன்ட்ரஸ்டே போயிடுச்சு!"

"பின்னே, பணத்துக்காக உன்னோட  விருப்பத்தை நிறைவேத்தற ஒரு பொண்ணு காதலி மாதிரி நடந்துப்பான்னு எதிர்பார்க்க முடியுமா?" என்றான் மூர்த்தி, கேலியாக.

"அங்கே பாத்தியா?" என்று தெருவிலிருந்த ஒரு துணிக்கடையைச் சுட்டிக் காட்டினான் உமாநாத்.

"துணிக்கடை. அதுக்கு என்ன?"

"அதில ஒரு ஷோகேஸ் பொம்மை இருக்கு இல்ல? அந்த பொம்மையைத் தழுவிக்கிட்டா எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருந்தது!" என்றான் உமாநாத்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)

குறள் 913:
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று.

பொருள்: 
பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யான தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவுவதைப் போன்றது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...