Wednesday, August 2, 2023

909. தந்தையை அழைத்தபோது...

சசிகாந்த் தன் தந்தை செல்வமணியின் வீட்டுக்குச் சென்றபோது, அவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

சசிகாந்த்தை உள்ளே சென்று உட்காரச் சொல்லி விட்டுக் கை கால்களைக் கழுவிக் கொண்டு உள்ளே வந்தார் செல்வமணி.

"சும்மாதான் உங்களைப் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்" என்றான் சசிகாந்த்.

"இப்ப என்ன செஞ்சுக்கிட்டிருக்கே?" என்றார் செல்வமணி.

"உங்களுக்குத்தான் தெரியுமே! சுலோசனாவோட அப்பா கம்பெனியைப் பாத்துக்கிட்டிருக்கேன்."

"பாத்துக்கிட்டிருக்கேன்னா, நீயா நிர்வாகம் பண்ற? அப்பப்ப அவங்க சொல்ற வேலையை செஞ்சுக்கிட்டிருக்க!"

சசிகாந்த் மௌனமாக இருந்தான்.

"கல்யாணத்துக்கு முன்னால, நல்ல வேலையில இருந்த. விடுமுறை நாட்கள்ள, சேவை நிறுவனங்களுக்குப் போய் ஏதாவது உதவி செஞ்சுக்கிட்டு வந்த. கல்யாணத்துக்கப்பறம், உன் மாமனார் உன்னை வேலையை விட்டுட்டு அவர் கம்பெனியைப் பாத்துக்கச் சொன்னாரு. ஆனா, கம்பெனியில உனக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கல. நீ வீட்டில இருந்துக்கிட்டுத் தனக்கு உதவி செய்யணும்னு உன் மனைவி விரும்பறா. அதனால, உனக்கு ஒரு உருப்படியான வேலை இல்லை. அப்பப்ப போய், ஏதோ வேலை செஞ்சுட்டு வரே. சம்பளமும் இல்லை. செலவுக்கு அப்பப்ப ஏதாவது கேட்டு வாங்கிக்கணும். சேவை நிறுவனங்களுக்குப் போறதையும் விட்டுட்ட. உன் மனைவிக்கு அதெல்லாம் பிடிக்கலேன்னு நினைக்கறேன். உன் சந்தோஷத்துக்காக நீ எதையுமே செய்யறதில்லேன்னு தோணுது" என்றார் செல்வமணி.

"அதெல்லாம் இருக்கட்டும்ப்பா. அம்மா போனப்பறம், நீங்க இப்படித் தனியா இருக்கறது எனக்குப் பிடிக்கல. எங்களோட வந்து இருந்துடுங்களேன்!" என்றான் சசிகாந்த்.

"கல்யாணத்துக்கப்பறம் நீ செஞ்சது பிடிக்காமதான் நானும், உன் அம்மாவும் எங்களோட இந்த வீட்டுக்கு வந்தோம். நீ சுதந்திரமா செயல்பட்டு, ஏதாவது வேலைக்குப் போய்ப் பழையபடி இருக்கறதுன்னா சொல்லு. அப்ப உன்னோட வந்து இருக்கேன்" என்றார் செல்வமணி.

"நான் வரேம்ப்பா!" என்று கிளம்பினான் சசிகாந்த்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல் (காமத்தினால் மனைவியின் விருப்பப்படி நடத்தல்)

குறள் 909:
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.

பொருள்: 
அறச் செயலும், பொருள் ஈட்டும் முயற்சியும், மற்ற கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...