Tuesday, August 1, 2023

906. பேரும் புகழும்

ராமமூர்த்தி இளம் வதிலேயே தொழில் துறையில் சாதனை புரிந்தது புகழ் பெற்றவன். 

இருபத்திரண்டு வயதில் சொந்த மூலதனத்தில் சிறிய அளவில் ஒரு தொழிலைத் தொடங்கி, முப்பது வயதில் அதை ஒரு பெரிய நிறுவனமாக மாற்றிய அவன் சாதனை, தொழில்துறை வட்டாரங்களிலும், ஊடகங்களிலும் மட்டுமின்றி, சாதாரண மனிதர்களாலும் பேசப்பட்டது. 

தொழிலை நல்ல நிலைக்குக் கொண்டு வந்த பிறகுதான் திருமணம் என்ற லட்சியம் கொண்டிருந்த ராமமூர்த்தி, தன் 30-ஆவது வயதில் விமலாவைத் திருமணம் செய்து கொண்டான்.

திருமணத்துக்குப் பிறகு, தன் நிறுவனத்தின் நிர்வாக அமைப்பில் சில மாறுதல்களைச் செய்தான் ராமமூர்த்தி. எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தன்னிடமே வைத்துக் கொண்டிருந்த ராமமூர்த்தி, சில விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மூத்த அதிகாரிகளுக்கு அளித்தான்.

முன்பு, நாள் முழுவதும் அலுவலகத்தில் இருந்தவன், இப்போதெல்லாம் ஒரு நாளில் சில மணி நேரமே இருந்தான்.

திருமணமான புதிதில், மனைவியுடன் அதிக நேரம் இருப்பதற்காக அவன் செய்த ஏற்பாடு அது என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் புரிந்து கொண்டனர்.

"சாரோட ரெண்டாவது திருமண ஆண்டு விழா முடிஞ்சு போச்சு. ஆனா, சார் இன்னும் தேன்நிலவிலேயே இருக்காரு!" என்றான் அந்த நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளில் ஒருவனான சாமிநாதன்.

"இதைத் தேன்நிலவுன்னு சொல்ல முடியாது. வீட்டில மனைவிக்குப் பணிவிடைசெஞ்சுக்கிட்டிருக்காருன்னு நினைக்கிறேன்" என்றான் இன்னொரு நிர்வாகியான சிதம்பரம்.

"எப்படிச் சொல்றீங்க?"

"நாளுக்கு நாள், அவர் ஆஃபீஸ்ல இருக்கற நேரம் குறைஞ்சுக்கிட்டே போகுதே! போன வாரம், ஒரு முக்கியமான மீட்டீங்குக்கு என்னோட வரதா சொன்னாரு. காரை எடுத்துக்கிட்டு அவர் வீட்டுக்குப் போனேன். கிளம்பி வாசல் வரைக்கும் வந்துட்டாரு. அப்ப, உள்ளேந்து மேடம் கூப்பிட்டாங்க. உள்ளே போயிட்டு வந்தவர், எங்கிட்ட, 'நான் வரலை. நீங்க மட்டும் போயிட்டு வாங்க'ன்னு சொல்லிட்டாரு. அது ஒரு முக்கியமான மீட்டிங். 'உங்க எம்.டி வரலியா?'ன்னு கிளையன்ட் எங்கிட்ட கேட்டாரு. வரதா இருந்தாரு. கிளம்பற சமயத்தில அவருக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிச் சமாளிச்சுட்டேன்!"

"தொழில்துறையில இவ்வளவு சாதிச்சவரு, மனைவி பேச்சை மீற முடியாம, இப்படி முக்கியமான விஷயங்களைக் கூடத் தவற விடறது, அவருக்கு இருக்கிற பெருமையையும் நல்ல பெயரையும் பாதிச்சுடும் போல இருக்கே!" என்றான் சாமிநாதன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல் (காமத்தினால் மனைவியின் விருப்பப்படி நடத்தல்)

குறள் 906:
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.

பொருள்: 
மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்கு அஞ்சி வாழ்பவர், தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும், பெருமை இல்லாதவரே ஆவார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...