சில ஆண்டுகளுக்குள்ளேயே அவன் தொழில் பெரிதாக வளர்ந்து, அந்த ஊரின் குறிப்பிட்ட சில செல்வந்தர்களில் ஒருவனாக அவன் ஆகி விட்டான்.
மதுசூதனனுக்குப் பெண் கொடுக்கப் பல செல்வந்தர்கள் முன்வந்தனர். ஆனால், மதுசூதனன் தனக்குப் பிடித்த ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொண்டான்.
அவனுடைய இந்தச் செயல் அவன் மீதான மதிப்பை மற்றவர்களிடையே உயர்த்தியது.
ஆயினும், மதுசூதனன் திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே அவன் மீது மற்றவர்களுக்கு இருந்த மதிப்பு சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கி, விரைவிலேயே அவன் ஒரு கேலிப் பொருள் ஆனான்.
அதற்குக் காரணம், மதுசூதனன் தன் மனைவி மல்லிகாவுக்குக் கொடுத்த அளவுக்கதிகமான மதிப்பும் மரியாதையும்தான்.
தன் தொழில் விஷயங்களில் கூட, மதுசூதனன் எல்லா முடிவுகளையும் தன் மனைவியைக் கேட்டுத்தான் எடுக்கிறான் என்ற எண்ணம் பரவலாகப் பலர் மத்தியில் ஏற்பட்டது.
சில சமயம், மல்லிகாவே நிறுவனத்தின் மானேஜர் சுதாகருக்கு ஃபோன் செய்து சில உத்தரவுகளைப் பிறப்பித்தாள். அவளுடைய சில உத்தரவுகளை நிறைவேற்ற விரும்பாத சுதாகர், மதுசூதனனிடம் இது பற்றிப் பேசியபோது, மதுசூதனன், "மேடம் சொல்றபடி நடந்துக்கங்க!" என்று சொல்லி விட்டான்.
ஒருமுறை, ஒரு அலுவலக உதவியாளரைத் தேர்ந்தெடுக்க வந்திருந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து, தகுதியானவர்களை இன்டர்வியூ செய்து, ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்படி சுதாகரிடம் கூறி இருந்தான் மதுசூதனன்.
ஐந்து பேரை இன்டர்வியூ செய்து ஒருவரைத் தேர்ந்தெடுத்த சுதாகர். வேலை நியமன உத்தரவு கொடுக்குமுன், மதுசூதனனின் அனுமதியைக் கேட்டான்.
"அதுதான் உங்களையே செலக்ட் பண்ணச் சொல்லிட்டேனே? என்னை ஏன் கேக்கறீங்க?" என்றான் மதுசூதனன்.
மதுசூதனனின் அறையிலிருந்து வெளியே வந்த சுதாகர், தான் தேர்ந்தெடுத்த நபருக்கு வேலை நியமன உத்தரவை டைப் செய்யும்படி டைப்பிஸ்டிடம் கூறினான்.
"சார்! இப்பதான் மேடம் ஃபோன் பண்ணினாங்க. வேற ஒத்தருக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் டைப் பண்ணச் சொல்லி இருக்காங்க. அதைத்தான் அடிச்சுக்கிட்டிருக்கேன்" என்றாள் டைப்பிஸ்ட்.
சுதாகருக்கு அவமானமாகப் போய் விட்டது.
'நான் தேர்ந்தெடுத்த நபருக்கே வேலை நியமன உத்தரவு கொடுக்கச் சொல்லி இப்பதான் முதலாளி சொன்னார். அவருக்கே தெரியாம, அவர் மனைவி வேற ஒத்தரை நியமிச்சிருக்காங்க. இது எனக்கு அவமானம்னா, முதலாளிக்கு இன்னும் பெரிய அவமானம். ஆனா, அவர் அப்படி நினைக்க மாட்டாரே! இப்ப நான் போய்க் கேட்டா, மேடம் சொன்ன ஆளையே நிமிச்சுடுங்கன்னுதான் சொல்லப் போறாரு!' என்று நினைத்தபோது, சுதாகருக்கு மதுசூதனன் மேல் பரிதாபம் ஏற்பட்டது.
"எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்!' என்று ஒரு திரைப்படத்தில் வரும் வசனம்தான் அவன் நினைவுக்கு வந்தது.
"எங்களுக்கு ஆர்டர் கொடுத்ததுக்கு ரொம்ப சந்தோஷம் சார்!" என்றான் சுதாகர், அந்தப் பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரிடம்.
"ஆர்டரை நீங்க ஏத்துக்கிட்டுக் கையெழுத்துப் போடணும்" என்றார் அவர்.
"அதுக்கென்ன, இப்பவே கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடறேன்!" என்று பேனாவை எடுத்தான் மதுசூதனன்.
"இப்பவே போடறீங்களா? ஒருவேளை யார்கிட்டேயாவது கன்சல்ட் பண்ணிட்டு, அப்புறம் போடுவீங்களோன்னு நினைச்சேன்!" என்றார் அவர், சிரித்துக் கொண்டே.
அவர் கூறியதன் பொருள் புரிந்து, மதுசூனனின் முகம் அவமானத்தால் சிவந்தது.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல் (காமத்தினால் மனைவியின் விருப்பப்படி நடத்தல்)
குறள் 902:
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
No comments:
Post a Comment