பவித்ரனின் பெரியப்பாதான் அனுப்பி இருந்தார்.
நோட்டீஸை எடுத்துக் கொண்டு, தனக்குத் தெரிந்த ஒரு வக்கீலிடம் போனான் பவித்ரன்.
"சார்! என் பெரியப்பா சின்ன வயசிலே வேற ஒரு ஊர்ல போய் செட்டில் ஆயிட்டாரு. என் அப்பா, பெரியப்பா ரெண்டு பேருக்கும் சொந்தமான நிலத்தை, என் அப்பாதான் பார்த்துக்கிட்டிருந்தாரு. என் அப்பா காலத்துக்கப்புறம், நான்தான் நிலத்தைப் பார்த்துக்கிட்டிருந்தேன். அப்பப்ப அவருக்குப் பணம் அனுப்பிக்கிட்டுத்தான் இருந்தேன். நிலத்திலேந்து வந்த வருமானத்தில, அவரோட பங்கை சரியாக் கொடுக்கலேன்னு பல லட்ச ரூபாய் கேட்டு இப்ப நோட்டீஸ் அனுப்பி இருக்காரு!" என்றான் பவித்ரன்.
"அப்பப்ப பணம் அனுப்பினதா சொல்றீங்க. அப்படின்னா? எங்கிட்ட முழு உண்மையையும் சொன்னாதான், என்னால உங்களுக்கு உதவ முடியும்!"
"சார்! நிலத்தைப் பாத்துக்கிட்டது நான். அவர் வயசானவரு. வெளியூர்ல இருந்தாரு. ஊர் நிலவரம் அவருக்குத் தெரியாது. நிலத்தோட வருமானத்தில அவரோட பங்கா, கொஞ்சம் பணம்தான் கொடுத்துக்கிட்டிருந்தேன்!" என்றான் பவித்ரன், சற்றுத் தயக்கத்துடன்.
"சரி. ஒவ்வொரு வருஷமும் நிலத்திலிருந்து மொத்த வருமானம் எவ்வளவு வந்தது, செலவுகள் எவ்வளவு, நிலத்தைப் பார்த்துக்கிட்டதுக்காக நீங்க எவ்வளவு எடுத்துக்கிட்டீங்க, அவருக்கு எவ்வளவு கொடுத்தீங்க இதுக்கெல்லாம் கணக்கு எழுதி வச்சிருக்கீங்களா?" என்றார் வக்கீல்.
"இல்லை சார். பெரியப்பாதானேன்னு நினைச்சேன். அவர் கணக்குக் கேப்பார்னு தெரியாது!"
"நீங்க கொடுத்த பணம் அவருக்குச் சேர வேண்டிய பங்கை விடக் குறைவா இருக்குன்னு அவர் உங்களுக்குக் கடிதம் எழுதி இருக்காரா?"
"வருஷா வருஷம் எழுதிக்கிட்டுத்தான் இருப்பாரு. நான் அதுக்கெல்லாம் பதில் போடறதில்லை. அந்தக் கடிதங்களையெல்லாம் கிழிச்சுப் போட்டுடுவேன்!"
"உங்ககிட்ட எந்தக் கணக்கு வழக்கும் இல்லை. அவர் நீங்க அனுப்பின பணத்துக்கெல்லாம் கணக்கு வச்சிருப்பார்னு நினைக்கிறேன். ஏன்னா, அவரோட நோட்டீஸ்ல இந்தத் தொகையெல்லாம் குறிப்பிட்டிருக்காரு. அவர் எழுதின கடிதத்துக்கெல்லாம் காப்பி வச்சிருப்பாருன்னு நினைக்கறேன். உங்ககிட்ட கணக்கு வழக்கு இல்லாததால, சில வருஷங்கள் நிலத்திலேந்து வந்த வருமானம் குறைச்சலா இருந்தாலும், அதையெல்லாம் உங்களால நிரூபிக்க முடியாது. உங்க கேஸ் ரொம்ப வீக்கா இருக்கு. அவரைப் பாத்துப் பேசி, ஏதாவது காம்ப்ரமைஸ் பண்ணிக்கறதுதான் ஒரே வழி!" என்றார் வக்கீல்.
'அந்தக் கிழவன் எந்த காம்ப்ரமைஸுக்கும் வர மாட்டானே! சின்ன வயசில, நான் ஒரு தீ விபத்தில மாட்டிக்கிட்டு அதிசயமா உயிர் பிழைச்சுட்டேன்னு சொல்லுவாங்க. ஆனா, இப்ப இந்தக் கிழவன்கிட்டேந்து தப்பிக்க முடியாது போல இருக்கே! வெளியூர்ல இருந்துக்கிட்டு, இந்தக் கிழவனால என்ன செய்ய முடியும்னு நினைச்சது தப்பாப் போச்சே!' என்று நொந்து கொண்டான் பவித்ரன்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை
குறள் 896:
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
No comments:
Post a Comment