Wednesday, July 19, 2023

895. அடைக்கலம் தருபவர்

விசாக நாட்டு மன்னருக்கு எதிராக அவருடைய ராணுவ வீரர்கள் சிலர் புரட்சி செய்தபோது, அவர்களுடன் சேர்ந்து புரட்சியில் ஈடுபட்டதுதான் மாறன் செய்த தவறு.

தனக்கு விசுவாசமாக இருந்த வீரர்களைக் கொண்டு புரட்சியை முறியடித்த மன்னர் அதிவிரதன், புரட்சியில் ஈடுபட்டவர்களைப் பிடித்து தண்டனை வழங்குவதில் தீவிரம் காட்டினர்.

அகப்பட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு மரண தண்டனையும், வேறு சிலருக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டன.

மாறன் தப்பித்துத் தலைநகரத்தை விட்டுத் தொலைதூரம் ஓடி, அங்கே இருந்த தன் தந்தையின் நண்பர் காலபைரவர் வீட்டில் ஒளிந்து கொண்டான்.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு, "மாறா! நீ இங்கே நீண்ட நாள் இருப்பது ஆபத்து. மன்னரின் வீரர்கள் உன்னை எப்படியும் தேடிப் பிடித்து விடுவார்கள். நீ நம் நாட்டை விட்டு வெளியேறுவதுதான் நல்லது" என்றார் காலபைவர்.

"எங்கே செல்வது? நம் அண்டை நாட்டு மன்னர்கள் எல்லோரும் நம் மன்னரைக் கண்டு அஞ்சுகிறார்களே! நான் அங்கு சென்றால், அவர்களே என்னைப் பிடித்து, நம் மன்னரிடம் ஒப்படைத்து விடுவார்களே!" என்றான் மாறன்.

"மாண்டவ நாட்டுக்குச் சென்றால், நீ பிழைத்துக் கொள்ளலாம்."

"எப்படி? மாண்டவ நாடும் நமக்கு நட்பு நாடுதானே?"

"ராமரைப் பற்றி ஒன்று சொல்வார்கள். அவரிடம் யாராவது அடைக்கலம் புகுந்தால், அவர்களை அவர் நிச்சயம் காப்பாற்றி விடுவாராம். மாண்டவ நாட்டு அரசர் பெருவழுதியும் அப்படித்தான். அதனால், எப்படியாவது மாண்டவ நாட்டுக்குப் போய், மன்னரைப் பார்த்து, அவரிடம் அடைக்கலம் கேள். அவர் உனக்கு அடைக்கலம் கொடுத்து விட்டால், அதற்குப் பிறகு, நம் நாட்டு மன்னரிடம் நீ பயப்பட வேண்டாம்!" என்றார் காலபைரவர்.

காலபைரவரின் யோசனையை ஏற்றுப் பல இன்னல்களுக்கிடையே, எப்படியோ மாண்டவ நாட்டை அடைந்து விட்டான் மாறன்.

மாண்டவ நாட்டு மன்னர் பெருவழுதி எளிமையானவர் என்பதால், அரண்மனைக்குச் சென்று அவரைச் சந்திப்பதில் மாறனுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.

மாறன் தன் நிலை பற்றி மன்னரிடம் விளக்கித் தனக்கு அடைக்கலம் கொடுக்கும்படி கேட்டான்.

"அடைக்கலம் என்று கேட்டு வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிப்பதுதான் என் கொள்கை. மனிதாபிமான அடிப்படையில் நான் இதைச் செய்து வருகிறேன். ஆனால்..." என்று இழுத்தார் பெருவழுதி.

பெருவழுதி என்ன சொல்லப் போகிறாரோ என்று பதட்டத்துடன் காத்திருந்தான் மாறன்.

"விசாக நாட்டு மன்னர் அதிவிரதரை என்னால் விரோதித்துக் கொள்ள முடியாது. அதனால், உன் விஷயத்தில் என் கொள்கைப்படி நான் செயல்பட முடியாது!",

"அரசே! என் மீது கருணை காட்டுங்கள்!" என்றான் மாறன், கெஞ்சும் குரலில்.

"நான் உன் மீது கருணை காட்டினால், அதிவிரதர் என் மீது கருணை காட்ட மாட்டார். உனக்கு நான் அடைக்கலம் கொடுத்தால், நான் அதிவிரதரின் கோபத்துக்கு ஆளாவேன். அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியாது. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். நானும் என் நாடும் பிழைத்திருந்தால்தான், நான் மற்றவர்களுக்குக் கருணை காட்டி உதவ முடியும். எனவே, நீ இங்கு வந்திருப்பதை நான் அதிவீரருக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்குப் பிறகு, அவர் உன்னைத் தன் நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கோரினால், அனுப்பி வைக்கத்தான் வேண்டும். அதுவரையில், உன்னை எங்கள் நாட்டுச் சிறையில் வைத்திருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை!" என்ற பெருவழுதி, காவலர்களுக்குச் சைகை காட்ட, அவர்கள் மாறனை நெருங்கி வந்தனர்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 895:
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.

பொருள்: 
மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும், அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...