Thursday, June 29, 2023

871. பந்தயத்தில் துவங்கிய போட்டி

ஒரு விளையாட்டான பந்தயத்தில்தான் நவீனுக்கும், குமாருக்கும் இடையிலான போட்டி ஆம்பித்தது.

இருவரும் அந்த நிறுவனத்தில் ஒரே நேரத்தில்தான் விற்பனைப் பிதிநிதிகளாகச் சேர்ந்தனர்.

வேலைக்கான பயிற்சி முடிந்ததும், "இன்னும் இரண்டு வாரத்தில் உங்கள் பயிற்சி நிறைவு பெற்றதற்கான விழா நடைபெறப் போகிறது. அதற்குள் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு விற்பனையையாவது கொண்டு வர வேண்டும். இதற்கு முதல் சவால் என்று பெயர். முதல் சவாலில் யார் அதிக விற்பனையைக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்குச் சிறப்புப் பரிசு உண்டு!" என்று அறிவித்தார் பயிற்சியாளர்.

பயிற்சியின்போது நெருங்கிய நண்பர்களாக இருந்த நவீனும், குமாரும் முதல் சவாலில் தங்கள் இருவருக்குள் யார் அதிக விற்பனையைக் கொண்டு வருவோம் என்பது பற்றித் தங்களுக்குள் விளையாட்டாக ஒரு பந்தயம் வைத்துக் கொண்டனர்.

பந்தயத்தில் நவீன் வெற்றி பெற்று விட்டான். குமார் வெளிப்படையாக நவீனைப் பாராட்டினாலும், பந்தயத்தில் நவீனிடம் தோற்றது அவனுக்கு நவீன் மீது பொறாமையையும் கசப்பு உணர்வையும் ஏற்படுத்தி இருந்தது.

"முதல் சவால்ல நீ ஜெயிச்சுட்ட. ஆனா முதல் மாச விற்பனையில உன்னை அடிச்சுக் காட்டறேன் பாரு!" என்றான் குமார். இதைச் சொல்லும்போது அவன் குரலில் ஒரு ஆக்ரோஷம் இருந்தது.

"ஏதோ விளையாட்டா ஒரு பந்தயம் வச்சுக்கிட்டீங்க. அதோட விடுங்க. நாம இவ்வளவு பேர் இருக்கோம். ஒவ்வொரு மாசமும் ஒவ்வொத்தர் அதிக விற்பனையைக் கொண்டு வரலாம். இதில போட்டி எதுக்கு? நாம எல்லாரும் ஒரே நிறுவனத்துக்காகத்தானே வேலை செய்யறோம்?" என்றான் இருவருக்கும் நண்பனான குணசீலன்.

"இருக்கட்டும். குமார் சவால் விட்டிருக்கான். அதை நான் ஏத்துக்கறேன். முதல் மாசத்தில மட்டும் இல்ல, ஒவ்வொரு மாசமும் உன்னை அடிச்சுக் காட்டறேன்!" என்றான் நவீன், குமாரைப் பார்த்து.

"பாக்கலாம்டா! ஒரு தடவை ஃப்ளூக்கில ஜெயிச்சதுக்கே இப்படி ஆட்டம் போடறியா?" என்றான் குமார் ஆத்திரத்துடன்.

"யாருடா ஃப்ளூக்ல ஜெயிச்சது?" என்று நவீன் கையை ஓங்க, குணசீலன் அவன் கையை இறக்கி, "ரெண்டு பேரும் எங்கேயாவது தள்ளிப் போய் நில்லுங்கடா!" என்றான் இருவரையும் பார்த்து.

"இந்த மாசம் விற்பனையில நீ ரெண்டாவது இடத்தில இருக்க. முருகன்தான் முதலிடம்" என்றான் குணசீலன் குமாரிடம்.

"பரவாயில்ல. இந்த மாசம் நவீன் கீழே போயிட்டான் இல்ல, எனக்கு அது போதும்!" என்றான் குமார்.

"டேய்! நாம வேலைக்குச் சேர்ந்து ரெண்டு வருஷம் ஆச்சு. ஆனா இன்னும் நீயும், நவீனும் விரோதிகள் மாதிரி நடந்துக்கறீங்க. வேற யாரு உனக்கு முன்னால வந்தாலும் பரவாயில்ல, நவீன் உனக்குப் பின்னால இருந்தா போதும், இல்ல? என்ன மனப்பான்மைடா இது?" என்றான் குணசீலன்.

"அது அப்படித்தான். ஏன்னா நவீன் எனக்கு விரோதிதான்!" என்றான் குமார் குரோதத்துடன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 871:
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

பொருள்: 
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக் கூட ஒருவன் கொள்ளக் கூடாது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...