Tuesday, March 14, 2023

870. அரசியல் எதிரி

"தலைவரே! ஒரு விஷயம் சொன்னா தப்பா நினைச்சுக்கக் கூடாது!" என்று பீடிகை போட்டார் நமச்சிவாயம்.

"நீங்க சொன்னா நான் தப்பா எடுத்துப்பேனா என்ன?" என்றார் த.ந.க. கட்சியின் தலைவர் புகழ்ச்செல்வன்.

"ப.த.க. நமக்கு எதிர்க்கட்சி. அந்தக் கட்சியோட முக்கியமான தலைவர்கள் எல்லோரையும் நீங்க கடுமையா விமரிசிக்கிறீங்க. ஆனா ஆடலழகனை மட்டும் அவ்வளவு கடுமையா விமரிக்கறதில்ல. உங்களுக்கும் அவருக்கும் ஏதோ டீலிங் இருக்குன்னு நம்ம எட்சித் தொண்டர்களே வெளிப்படையாப் பேசிக்கறாங்க!"

"அப்படியா? நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீங்களா?"

"சேச்சே! என்ன தலைவரே இது? உங்க அரசியல் பயணத்தில ஆரம்பத்தில இருந்து உங்களோட இருக்கறவன் நான். எனக்கு உங்களைப் பத்தித் தெரியாதா?" என்று நமச்சிவாயம் கூறினாலும், அவருக்கும் அத்தகைய ஒரு ஐயம் இருக்கிறது என்பதை புகழ்ச்செல்வன் புரிந்து கொண்டார்.

"அப்படீன்னா மத்தவங்க பேசறதைப் பத்திக் கவலைப்படாதீங்க!" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் புகழ்ச்செல்வன்.

"தேர்தல் ம்டிவுகள் எதிர்பார்த்தபடிதான் வந்திருக்கு. ஆனா ஆடலழகன் தோற்றுப் போவார்னு யாரும் எதிர்பாக்கல. அவரைத் தோற்கடிக்கணுங்கறதில நீங்க அதிக அக்கறை எடுத்துக்கிட்டு செயல்பட்டதா ஊடகங்கள்ள பேசறாங்க!" என்ற நமச்சிவாயம், சற்றுத் தயங்கி விட்டு, "எனக்குக் கூட அப்படித்தான் தோணுது!" என்றார்.

"ஆடலழகனோட எனக்கு ரகசிய டீலிங் இருக்கறதா நீங்கதான் கொஞ்ச நாளைக்கு முன்னேசொன்னீங்க. இப்ப நான் அவரைத் தோற்கடிக்க அதிக முனைப்பு எடுத்துக்கிட்டேன்னும் நீங்கதான் சொல்றீங்க!" என்றார் புகழ்ச்செல்வன் சிரித்தபடி.

"நான் சொல்லல தலைவரே!"

"நான் உங்களைச் சொல்ல்ல. இப்படிப் பேசற எல்லாரையும்தான் சொல்றேன். தேர்தல்ல எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களைத் தோற்கடிக்க எல்லாவிதத்திலும் முயற்சி செய்யறது எல்லாக் கட்சித் தலைவர்களும் இயல்பா செய்யக் கூடியதுதானே?"

"ஆனா மற்ற தலைவர்களை விமரிசனம் செய்யற அளவுக்கு நீங்க ஆடலழகனைக் கடுமையா விமரிசனம் செஞ்சதில்லேங்கறது உண்மைதானே?" என்றார் நமச்சிவாயம், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

"உண்மைதான். ஆடலழகனைப் பத்தி எனக்கு ஒரு விஷயம் தெரியும். அவர் அரசியலுக்கு வரதுக்கு முன்னால அவர் ஒரு தொழில் செஞ்சுக்கிட்டிருந்தாரு. அப்ப அவர் தன்னோட நண்பர் ஒத்தருக்கு நிறைய சம்பளம் கொடுத்து மானேஜரா வச்சுக்கிட்டிருந்தாரு. ஆனா அவரு தொழிலைக் கத்துக்கிட்டு வேலையை விட்டுட்டு ஆடலழகனுக்குப் போட்டியா அதே தொழிலை ஆரம்பிச்சாரு. 

"ஆனா அவரால வெற்றி பெற முடியல. எல்லாப் பணத்தையும் இழந்துட்டு நடுத்தெருவுக்கு வந்துட்டாரு. அப்ப ஆடலழகன் அவரைக் கூப்பிட்டு மறுபடி தன் நிறுவனத்திலேயே வேலை கொடுத்தாரு. தன் நண்பன்ங்கறதுக்காம அவர் தனக்கு துரோகம் நெஞ்சதைக் கூடப் பொருட்படுத்தாம பழைய நட்பு குறையாம நடந்துக்கிட்டாரு. 

"இது எனக்கு எப்படித் தெரியும்னு கேக்கறீங்களா? ஆடலழகனுக்கு துரோகம் செஞ்ச அவரோட நண்பர் என்னோட தூரத்து உறவினர்தான். இப்படிப்பட்ட பண்பு உள்ள ஆடலழகன் மேல எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. அதனால அவரைப் பத்திப் பேசும்போது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தறதை என்னை அறியாமலே நான் தவிர்த்திருக்கலாம். ஆனால் அரசியல்ல அவர் என் எதிரிங்கறப்ப, ஒரு எதிரியை தேர்தல்ல தோற்கடிக்க என்னவெல்லாம் செய்யணுமா அதையெல்லாம்தான் நான் செஞ்சேன!"

"மன்னிச்சுக்கங்க தலைவரே!  நான் கூட உங்களுக்கு அவரோட ஏதோ டீலிங் இருக்குமோன்னு நினைச்சுட்டேன்!" என்றார் நமச்சிவாயம் மன்னிப்புக் கோரும் குரலில்.

"உங்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. அரசியல்னாலே இப்படடிப்பட்ட டீலிங் எல்லாம் இருக்குங்கற நிலைமைதானே இருக்கு!" என்றார் புகழ்ச்செல்வன்."

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 87
பகைமாட்சி

குறள் 870:
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.

பொருள்: 
நீண்ட நாள் நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது தம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...